இதுவரை ஓட்டே போட்டதில்லை..அப்படின்னா என்னனே தெரியாது..கேலி கூத்தாகும் வாக்குரிமை

Posted by Unknown - -



  ஓட்டுக்கு மூக்குத்தி,சாராயம்,பிரியாணி,படவை,தண்ணீர் குடம் என துவங்கி கடையாக ஒரு ஓட்டுக்கு 1500 வரை தாரை வார்க்கப்பட்டது என்றனர்..இந்த "திருமங்கலம்' பார்முலா, வரும் சட்டசபை தேர்தலில் இன்னும் அதிகமாக கூடும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஓட்டை காசாக்கும் கயவர்கள்...ஆனால் காலகாலமாக ஒட்டு போட்டதில்லை என்கிறார்கள்  சாயல்குடி மக்கள்,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர்., தெருவில் 17 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், சிமென்ட் வேலைப்பாடுகளை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை, வெளியில் சென்று விற்று வருவது வழக்கம்.

இவர்கள், இதுவரை ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எதையும் வாங்கவில்லை. இதை பரம்பரையாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். ஓட்டு சீட்டையே பார்க்காத எத்தனையோ பெரியவர்கள் இன்றும் இங்கு உள்ளனர். அரசின் இலவசங்களான "டிவி', காஸ் உள்ளிட்ட எதையும் வாங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.  "வாக்காளர் அடையாள அட்டை என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு தெரியவில்லை. வேலைக்குச் சென்ற இடத்தில் இவர்களின் புலம்பலை கேட்டு, ஒருவர் கூறிய அறிவுரைக்குப் பின், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மூலம் கிடைக்கும் "திருமங்கலம்' பார்முலா பயன்கள் குறித்து தெரிந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகேட்டு கடலாடி தாலுகா அலுவலகம் சென்றவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால், நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

        60 வயதான முதியவர் மனோகரன் கூறியதாவது தேர்தலைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பொருள் விற்க போன இடத்தில் கிடைத்த அறிவுரையை வைத்து, எங்களுக்கும் ஓட்டு போட ஆசை வந்துள்ளது. 75 வயதை கடந்த நிறைய பேர் எங்கள் தெருவில் உள்ளனர். அனைவருக்கும் வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்துள்ளோம், என்கிறார். 

ஓட்டுரிமை குறித்து அறியாத இவர்களிடம் உள்ள ஓட்டுகள் குறித்து அரசியல்வாதிகள் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது.  

நன்றி: தினமலர்

Leave a Reply