Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts

 அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவனை சேர்த்த காரணத்தால்,  ஆத்திரமடைந்த (சாதி) வெறிப்பிடித்த பெற்றோர்கள் 130 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத சம்பவம் கொடுமை அரங்கேறியுள்ளது..

                     

திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 77 மாணவிகள் உள்பட 135 பேர் படிக்கின்றனர்.  கடந்த  6ம் தேதி ஆடையூர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட இனைத்தை சேர்ந்த  குமார் என்பவர் தனது மகன்களான  சதீஷை 6ம்  வகுப்பிலும்முத்துராஜை 1ம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். இன்று  காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்  முகமது உஸ்மான் உள்பட 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர்.  மாணவர்களுக்காக  சத்துணவும் தயாரிக்கும் பணி நடந்தது. ஆனால், சதீஷ், முத்துராஜ் உள்பட 5 மாணவர்கள்  மட்டுமே  பள்ளிக்கு வந்தனர்.  மற்ற  130 மாணவர்கள் வரவில்லை.

இதையடுத்து காலை 10 மணியளவில் ஆடையூர் கிராமத்தை சேர்ந்த  50க்கும் மேற்ப்பட்ட உயர்சாதியினர்  ஒன்றாகதிரண்டு  பள்ளிக்கு  வந்து  தலைமை ஆசிரியரான முகமது  உஸ்மானிடம்,  ‘‘தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த  சதீஷ், முத்துராஜ் ஆகியோரை  எப்படி நீங்கள் பள்ளியில் சேர்க்கலாம்.  அவர்களுக்கு ஆதிதிராவிட நலப்பள்ளி  இருக்கிறதே! இந்த மாணவர்களை அந்த பள்ளியில் அவர்களை சேர்த்திருக்கலாமே’’ என  தகராறு செய்தனர்.

ஆனால் தலைமை ஆசிரியர் முகமது  உஸ்மான்  , ‘‘பள்ளியில் சேருவதற்கு ஜாதி, மதம் எதுவும் தடையில்லை.  எல்லா  பிரிவு மாணவர்களும்  சேர்ப்பதுதான் எங்களது கடமை’’ என கூறினார்.  ஆனால் அந்த கும்பல் திருப்தி அடையாமல் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.

தகவலையறிந்த தி.மலை தாலுகா போலீசார் தி.மலை கலெக்டர்  விஜய் பிங்ளேவுக்கு தெரிவிக்கப்பட்டது.  அவரது உத்தரவின் பேரில் தி.மலை தாசில்தார் ரவிச்சந்திரன் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.  விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் அளிப்பதாக தாசில்தார் தெரிவித்தார். 



அங்கிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் சமச்சீர் கல்விங்குறாங்க, சரிசமங்குறாங்கசுதந்திரமடைஞ்சி இத்தனை வருசத்துல எங்கல பள்ளிக்கூடடத்துல சேரக்கூடாதுன்னு சொல்லுறது என்ன நியாயம் சாமி என்றார்கள்  ஏதுமறியாதவர்களாய்..


அப்படின்னா எங்க இருக்கு சம (ச்சீர்) கல்வி…. 


திருவண்ணாமலையிலிருந்து வெளிச்சம் மாரி   

 Summary :
 If the addition of a low caste boy in school, and high-caste parents refuse to send 130 students in Thiruvannamalai District Adaiyur Village..




சமூக இடைவெளிகளால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்க மாகும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது மாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வி யின் துவக்கம் இருக்கிறது. நமது கவலை யெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாண வர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாய மான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளேம். அதனால் தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வி யாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒரு மைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூல மாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்து விட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலை யருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம் (சம கவனமல்ல) செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக் கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக் கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.

குறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற் குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர் பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும்.

நலிந்த பிரிவு மாணவர்கள் மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.

சமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத் திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்தி விட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு எதிரான சதியாகவே அய்யம் கொள்ள வேண்டியுள்ளது.

வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்? இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்?

பொதுப்பள்ளிக் கல்வித்திட்டம்
கல்வித்திட்டம் என்பது மழலையர் சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித் திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப் பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.
கல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு நடைபெறும் போது மதக் கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன் படுத்துவர், அரச வம்சங்களோ தங்களது வம்சங்களை புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
ஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையை யும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன்பட்டன.
இதே அடிப் படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவி யாகத்தான் மனுஸ்மிருதி போன்ற மிருதிகளும், பிற தர்ம சாத்திரங்களும் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றன.

இன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதிவர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.

ஆங்கிலம் தேவையும் மோகமும்
எனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாட மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத் தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.

வட்டார மொழிக்கல்வியை வலியுறுத்து கிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக் காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். அடிப்படையான அடிக்களம்

சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச் சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள(?) மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது.

எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு இதில் தேவை.

(27 நவம்பர் 2009 தீக்கதிர் கட்டுரையிலிருந்து)
- அ.கருணானந்தன்

நன்றி: கீற்று தளம்