Archive for May 2011

இந்த வார கல்கி இதழில் வெளிச்சம் மாணவர்களின் வாழ்க்கை இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! தலைப்பில் பிரசுரமாகியிருக்கிறது..  எம்மை பக்குவபடுத்த முழுவதும் படியுங்கள்... எம் வளர்ச்சிக்கு வழிகாட்டுங்கள்..



இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! 

பத்தாம் வகுப்பில் 382 மார்க்குகள் வாங்கிவிட்டு, குடும்பச் சூழ்நிலையால் மேலே படிக்க முடியாமல் ஒரு ஹோட்டலில் க்ளீனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என்னை, இதோ இன்று உங்கள் கண் முன்னே ஒரு பி.எல். மற்றும் எம்.ஏ. (சோஷியல் ஒர்க்) படித்த மாணவனாக மாற்றிக் காட்டியிருக்கிறது வெளிச்சம்என கண்களில் வெளிச்சம் பொங்கப் பேசுகிறார் வெளிச்சம் மாணவர் அமைப்பின், மாணவர் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆனந்த குமார். என்னைப்போலவே இதுவரை வெளிச்சத்தின்வாயிலாக பயன் அடைந்தவர்கள் 515 மாணவ,மாணவிகள்.
எப்படி ஏன் எதற்காக வெளிச்சம்தோற்றுவிக்கப்பட்டது?’ என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, ‘2004 ஆம் ஆண்டு அரியலூர், பெரம்பலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள்ல ஷெரீன் ஆய்வு மேற்கொண்டாங்க. அந்த ஆய்வின்படி பார்த்தீங்கன்னா, கிராமப்புறத்துல இருக்குற மாணவர்களால, அவங்க குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியாத அவல நிலை இருப்பதையும், இதனால அவங்க கோயம்பேடு மற்றும் பெங்களூரு பகுதியில கூலித் தொழில் செய்ய, மூட்டை தூக்கன்னு போய் விட்டதையும் அவங்க கண்டுபிடிச்சாங்க.
மாணவர்கள் பாடு இப்படின்னா, மாணவிகள் சுமங்கலி திட்டம்ங்கற பேர்ல பஞ்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்க மூன்று அல்லது அஞ்சு வருஷம் வேலை செஞ்சிட்டு கைல மொத்தமா 30,000 அல்லது 40,000 ரூபாயோட திரும்பி வர்ற நிலை இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. வறுமையைக் காரணம் காட்டி ஒருவருக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கோடதான் 2004ஆம் ஆண்டு வெளிச்சம்தொடங்கப்பட்டது.
வெளிச்சம்அமைப்பின் மூலம் மேற் கல்விக்கான உதவி பெற்று, நல்லபடியாகத் தாங்கள் விரும்பிய கல்வியைப் படித்து, தேறி, நல்ல வேலையில் அமர்ந்துள்ளவர்கள் வெளிச்சத்துக்கான நிதி உதவியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் என்ற ஒருவரை அப்படி உதாரணத்துக்குச் சொல்லலாம். பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து மேலே படிக்க முடியாமல் இருந்தவரை வெளிச்சம்காரைக்குடியில் உள்ள CECRIயில் சேர்த்துப் படிக்க வைத்தது. இன்று செந்தில், ஓமனில் ஜூனியர் ரிசர்ச் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். மாதா மாதம் தாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வெளிச்சத்துக்குகொடுத்து வருகிறார்.
உண்மையான, கல்வி தாகம் கொண்ட, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களை எப்படிக் கண்டுகொள்வீர்கள்? அல்லது அப்படிப்பட்ட மாணவர்கள் உங்களை எப்படித் தேடி வருவார்கள்?’
வெளிச்சத்தின் வழியாக இன்று தங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் பெற்றவர்களின் துணைகொண்டு கிராமங்களுக்குச் சென்று எங்கள் தேடுதல் பணியைச் செய்வோம். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு, மற்றும் அங்குள்ள பெரியவர்களிடம் தீவிர விசாரணை செய்த பிறகே தான் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது கல்வி தடையின்றித் தொடர வெளிச்சத்தின் வழி உதவி புரிவோம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, அவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களாக இருக்க வேண்டும், கல்வியின் மீது ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மதிக்கத்தக்கவர்களாக இருக்க வேண்டும், தாம் சார்ந்த கிராமத்தை, தான் கற்ற கல்வியால் முன்னேற்றம் அடையச் செய்பவர்களாக இருக்க வேண்டும். பணம் என்பது எதை வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. போதுமான பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு, கல்வியில் தடை ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே நோக்குதான் வெளிச்சத்தின் நோக்கமேஎன்கிறார் ஆனந்த குமார் தொடர்ந்து உதவி பெற விரும்பும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இருட்டைத் தின்னும் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்திக் கொள்ளலாம்என்கிறார்.
- நளினி சம்பத்குமார்


இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியை பிடிக்கும் திராவிட இயக்கங்கள் இரண்டும் கல்வியினை வியாபரமாக்கபடுவதை வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறது. 

மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் 
தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால்  கோவை பகுதிகளில் பதற்றம் காணப்பட்டது.. (இது எல்லோருக்கும் சாதாரண செய்தி)

 கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ். பஞ்சு குடோன் கலாசி தொழிலாளி. மனைவி சங்கீதா(29). தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சமையலறையில் சங்கீதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை தர்மராஜ் காப்பாற்ற முயன்றார். இருவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். 

சங்கீதா சாவதற்கு முன்னதாக அவர் கோவை கிழக்கு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம்: 

           நானும், கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்தோம். இருவரும் வேலைக்கு செல்கிறோம். கடின உழைப்பாளிகள்.

கணவர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். அவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார். இருவரின் வருமானத்தை கொண்டு மகன் தர்ஷனை உப்பிலிபாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்தோம். எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பள்ளிக் கட்டணத்துக்கே சென்று விடுகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு அதே பள்ளியில் மகன் முதல் வகுப்பு செல்கிறான். ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினர். 

சேமித்த பணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். மீதி தொகையை செலுத்த முடியவில்லை. பணத்தைக் கட்ட வழி தெரியவில்லை. இதனால் தீக்குளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

 நன்றி: நக்கீரன்


 வணக்கம் உறவுகளே!


பிரபாகரன் என்று பெயர் வைத்தாலே லட்சிய வேட்கை தானாய் வந்து சேரும்போல  நம் மாணவர் பிரபாகரன்  "பார்வையற்றவர்" பட்டப் படிப்பிற்காக  பட்டபாடுகளை  நம்மிடம் விளக்கினார். அதை அப்படியே பதிவு செய்கிறோம். 

பார்வை இல்லாமல் பரிதாபமாக பேருந்து நிறுத்ததில், ரயிலடியில் பிச்சைகாரர்களாய், பாட்டுபாடுபவர்களாய், பொருட்கள் விற்பவராய் பார்வையில்லாதவர்களை பார்த்து பரிதாப பட்டிருப்போம் ஆனால் நாம் கீழ்காணும்   பார்வையற்றவர்கள்  நாம் பார்த்திறாத நபர்கள்...

பிரபாகரன், பிரபாகரனின் தந்தை, வெளிச்சம் ஆண்டோ
முதலில்  பார்வையற்ற வெளிச்சம் மாணவர் ஆண்டோ அவர் படிப்பதற்காக தான் பட்டபாடுகளை வலிகளோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்..
         பெற்றவர்கள் யாரென்று தெரியாத ஆதரவற்ற பிள்ளையாக மதுரையில் உள்ள சிஸ்ட்டர்ஸ் கான்வென்டில் வளர்ந்தேன். ஆதரவற்ற பிள்ளையாக பிறந்ததே பாவம் கூடவே பார்வையில்லாதவன் என்பதால் இன்னும் கூடுதல் பரிதாபபட்டார்களே தவிர யாரும் உதவி செய்யவில்லை.    நண்பர்கள் செய்த உதவியால்   சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு பக்கத்து கிரவுண்டுல தங்கிக்கிட்டு பச்சையப்பன் கல்லூரியில  பி.ஏ. ஆங்கிலம் முடித்தேன். எல்லாரும் விளையாடதான் கிரவுண்டுக்கு வருவாங்க ஆனா நான் படிக்க  3 வருசம் வாழ்ந்தது படிச்ச்சது எல்லாமே  கிரவுண்ட் தான்.  ஒரு வழியா பாசானேன். அதுக்கு பிறகு  பி.எட் படித்தால் வேலைக்கு போய் அதில் வாழணும் என  நினைச்சேன். எந்த நண்பர்கள் உதவியால் யூஜி படிச்சனோ அவர்கள் மூலம் வெளிச்சம் அறிமுகமானது.. நான் பி.எட்.திருவள்ளூர் இந்திரா கல்லூரியில் படித்து முடித்து விட்டு . எனக்கு  வெளிச்சத்தால் கிடைத்த கல்வி வெளிச்சத்தை பலர் வாழ்வில் கொடுக்க வெளிச்சத்தோடு இணைந்தே வாழ்கிறேன்..
       
 நான் வெளிச்சத்தினால் படிச்சேன் இன்னைக்கு ஆங்கில டீச்சரா வேலைக்கு போக முடியும் ஆனால் நான் வெளிச்சத்திலேயே பயணிக்க காரணம் என்னை  போன்ற பலருக்கு உதவிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிகையில்தான்..

மேலும் ஆண்டோ!  தான்  வெளிச்சத்திற்கு அறிமுகபடுத்தி  படிக்க வைக்கும்  பிரபாகரன்  தன்னை பற்றி விவரித்தார். 
 
                        எங்கப்பா அம்மா இருவருமே பார்வையற்றவர்கள்..  சென்னை மறைமலைநகர் பார்வையற்றோர் குடியிருப்பில தான் தங்கியிருக்கோம்.  அப்பா ரயில்ல பொருள வித்துட்டுவர்ற காசுலதான் குடும்பம் நகருதுங்க, பன்னிரெண்டாவது வரையும் பூந்தமல்லி பார்வையற்றவர்கள் பள்ளியிலதான் படிச்சேன்.. ரொம்ப கஸ்டப்பட்டு லயோலா காலேஜில பி.ஏ ஆங்கிலம் படிச்சேன்,  எங்கப்பா கூட நானும் எத்தனையோ  நாள் ரயில்ல பொருள் விற்க போயிருக்கேன். ஒரு மழை வந்த ஒரு நாள் எலக்ட்ரிக் ட்ரயின்ல போன அப்போ ட்ரயின்ல சாக் அடிச்சிடிச்சு, எங்கப்பா பிச்சை எடுக்கறது தப்பு,  நீ படிச்சிதான் குடும்பத்தை காப்பாத்தணும்னு,  நாளு பேருக்கு  நல்லது சொல்ல டீச்சரா ஆகணும்னு அடிக்கடி சொல்லுவார். அதனால்  எனக்கு ஆசிரியராகணும்னு  சென்னை - மாங்காட்டில் உள்ள  ஸ்ரீ  முத்து குமரன்  கல்வியியல் கல்லூரியில் பிஎட் சேர்ந்தேன்  படிக்கணும்னு ஆசைப்பட்ட  எனக்கு ஆதரவா  ஆண்டோ அண்ணன்  தான் ஆறுதலா இருந்தார்.. வெளிச்சம் மாணவர்கள் நமக்கு உதவி செய்ய நல்ல உள்ளங்கள் கிடைப்பாங்கண்ணு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுப்பாங்க

என்னோட  படிப்பு செலவான மொத்த பணத்துல  45000  ரொம்ப கஸ்ட்டப்பட்டு  காலேஜி பீஸ் கட்டிட்டோம், இன்னும் 25000 (இருபத்தி ஐந்தாயிரம்  ) பாக்கி பணம் கட்டணும் கட்டிட்டலைண்ணா  27  நடக்குற பரிட்சை எழுத விட மாட்டாங்கலாம், எனக்கு வழியே தெரியல.. 

 குருடனா பிறந்தது எங்க தப்பில்லண்ணா, குருட்டு பையன் படிக்க ஆசைப்பட்டது தப்பா  அண்ணா என்றார் கண்ணீருடன்.

வலிகளை கேட்டோம்..  
உறவுகளே!  பார்வையில்லாத  பிரபாகரன்  அவர்களின் கல்விக்கண்  திறக்க உதவுங்கள்..   உங்கள் நண்பர்களுக்கு  தகவலை அனுப்புங்கள் (FORWARD).. பிரபாகரனின்  கல்வி தொடர   யாராவது உதவி செய்தாலும்  அது உங்களை  சாரும்...

 மொத்ததில் பிரபாகரன் என்று பெயர் வைத்தாலே லட்சிய வேட்கை தானாய் வந்து சேரும் அப்படி தான் நம் மாணவரும்.
  
பிரபாகரரின் கல்விக்கு  உதவிட.

கல்லூரி பெயரில்  நேரடியாடிடியாகவும் உதவலாம் அல்லது,  நீங்கள் விரும்பினால் வெளிச்சம் மாணவர்கள் மூலம் உதவலாம்.(தங்களால் முடிந்த உதவியை  அனுப்பினால் அதற்கான ரசீதுகள் உங்களிடம்  ஒப்படைக்கப்படும்,) எவ்வகையில் உதவவும் எமக்கு தகவல் கொடுக்க மறக்காதீர்கள்..



Email: velicham.students@gmail.com, 
Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org
          http://velichamstudents.blogspot.com
 

வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 


ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458




 நன்றியுடன்
ஏழைகளின்  கல்விப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்



 ஈவினிங் காலேஜில் சேர்ந்து படிக்கும்  மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு அதாவது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ.சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான்றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு கடன் கிடையாது.


கடன் வழங்க விமுறைகள்:
டியூசன் கட்டணம், புத்தகம், தேர்வு கட்டணம், விடுதி, லேப்-டாப், போக்குவரத்து கட்டணம், வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கட்டணம் அனைத்திற்கும் கடன் உண்டு. உள்நாட்டில் படிக்க 10 லட்சம் வரையும், வெளிநாட்டில் படிக்க 20 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பின்பற்ற வேண்டியவை:  

பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தந்தை அல்லது தாய் இணை விண்ணப்பதாரராக, கடன் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் தாத்தா அல்லது சட்ட ரீதியான உறவினர் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பதாரர், இணை விண்ணப்பதாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடியிருப்புச் சான்று, கல்லூரி சேர்க்கை அடையாளச் சான்று, "கவுன்சிலிங்' கடிதம் அல்லது நிர்வாக இடஒதுக்கீட்டில் அனுமதித்தற்கான கடிதம், இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதற்கான கல்லூரி முதல்வரின் கடிதம், மூன்று அல்லது நான்காண்டுக்கு ஆகும் மொத்த கல்விக் கட்டண ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியிருப்புக்கு அருகில் உள்ள வங்கியில் தான் கடன் பெறலாம்.


முதல் தலைமுறை மாணவர்ளுக்கு:
முதல் தலைமுறையாக பி.இ., பி.டெக்., தொழிற்படிப்பு பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 20 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இச்சலுகை இல்லை. படித்து முடித்த இரண்டாண்டு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்தில் இருந்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி சுமையை குறைக்கும் வகையில், திருப்பி செலுத்தும் காலம் பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  வங்கியில் ஏற்கனவே வேறு கடன் பெற்று, முறையாக திருப்பி செலுத்தாவிட்டால் கல்விக்கடன் வழங்கப்படாது. அனைத்து வங்கிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

நான்கு லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, விண்ணப்பதாரர் பங்களிப்பு இல்லை. நான்கு முதல் பத்து லட்ச ரூபாய்க்கு ஐந்து சதவீத பங்களிப்பு. ஜாமீன், சொத்து பிணையம் தேவையில்லை. 7.5 லட்ச ரூபாய் வரை மூன்றாம் நபர் ஜாமீன் உண்டு. 10 லட்ச ரூபாய் வரை, சொத்து பிணையத்துடன். வெளிநாட்டு படிப்புக்கு 15 சதவீத பங்களிப்பு. மாணவியருக்கு வட்டியில் அரை சதவீத சலுகை உண்டு. பாரத ஸ்டேட் வங்கியில் நான்கு லட்ச ரூபாய் வரை, வட்டி 12.25 சதவீதம். 4 முதல் 7.5 லட்சம் வரை 13.75 சதவீதம், 10 லட்ச ரூபாய் வரை 12.25 சதவீத வட்டி. கனரா வங்கியில் நான்கு லட்சம் வரையான கடனுக்கு 13 சதவீதம், அதற்கு மேல் 14 சதவீத வட்டி.

  நன்றி: தினமலர்



எங்களை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெளிச்சமாக்க தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரான வெளிச்சம் செரீன் அவர்களின் வாழ்க்கையை ராணி இதழில் வெளியான கட்டுரையை படிங்க..


கறுப்பு நிறக் கடவுள்களை கையெடுத்துக்  கும்பிடும் நாட்டில்..கறுப்பாக இருந்ததாலே கறுப்பி, பிளாக்கி என பலவித ஏளன சொற்களால் வேட்டையாடப்பட்டவள் அந்தச் சிறுமி. பள்ளிக்கூடத்திலும், குடும்பத்திலும் புறக்கணிக்கப்பட்டாள்.

இன்று பெரிய மனுசி ஆகி, ‘வெளிச்சம்’ என்ற அமைப்பை தொடங்கி, பலருடைய வாழ்க்கையில் கல்வி விளக்கேற்றி வருகிறார். அவரது பெயர் ஷெரின். ஜீன்ஸ் பேன்ட்- சட்டை சகிதம் இருக்கும் அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

நரகம் 

என் பெற்றோருக்கு பூர்வீகம் நாகர்கோவில். நான் பிறந்து வளர்ந்தது கேரளாவில் உள்ள இடுக்கியில்! அங்கு தமிழர்கள் அதிகம். பள்ளிகள் குறைவு. இருக்கும் ஒன்றிரண்டு பள்ளிக்கூடங்களும் அதிக தொலைவில் இருந்ததால், பெண்கள் படிப்பது சிரமமானதாக இருந்தது.

இதனால், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையும். அதன்பின் 12-ஆம் வகுப்பு வரை மதுரை ராயன்பட்டியில் ஒரு ஆங்கில பள்ளியிலும் படித்தேன் அங்கு நான் மட்டுமே விடுதியில் தங்கினேன். இதனால் ஆதரவற்றவள் என்று நினைத்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாகவே, என்னை பயன்படுத்தினார்கள். விட்டு வேலைகளையும் செய்ய வைத்தார்கள்.

என் கறுப்புநிற தேகத்தை வைத்து சக மாணவிகள் என்னை கடுமையாக கேலி செய்வார்கள். இதனால் பள்ளி வாழ்க்கை நரகமா இருந்தது.    

அப்பாவுக்கு இடுக்கியில் சொந்தமாக ஏலக்காய் எஸ்டேட் இருந்தது. அவர் என்னிடமோ, அம்மாவிடமோ  அன்பாகவே நடந்து கொள்ள மாட்டார். மதுரையில் தங்கி படித்த போது என்னை பார்க்க எப்போதாவதுதான் வருவார்.

படிப்பு முடிந்தும்  ஒரு வருடம் விடுதியில் வார்டனாக வேலை செய்தேன். பின்னர் மதுரையில் ‘மார்க்கெட்டிங்; நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது பல ஆண் வாடிக்கையாளர்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

மாற்றிய மண்டேலோ வரிகள்
தற்செயலாக ஒரு நாள் கறுப்பர் இனத்தலைவரான நெல்சன் மண்டேலோவின் மேற்கோள் வரி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. ‘ உன்னை நீ சரியாக உணரும்போது, இந்த உலகம் உன் புறத்தோற்றத்தை மறந்துவிடும்’ -  என்ற வரி எனக்காகவே சொல்லப்பட்டதாக  போல் இருந்தது.  எனது மனதை மாற்றியது.

யாராவது என்னிடம் ‘கேரளாவில் பிறந்து, ஏன் இப்படி கறுப்பாக இருக்கிறாய்?’என்று கேட்கும் போது பதில் ஏதும் பேசாமல் தலைகுனிந்து சென்றுவிடுவேன். இந்த வரியை படித்தபிறகு, இதுபோல் கேட்கின்றவர்களிடம், ‘கென்யாவில் இருந்து வருகிறேன்’ என்பேன். ‘ன்யாவில் இவ்வளவு அழகான பெண்கள் இருக்கிறார்களா?’ என்று அதிசயமாக பார்ப்பார்கள்.

திடீரென மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். பணி நிமித்தமாக சேலம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றேன். அங்கு ஒரு சிறுமி ‘ இந்த பகுதியில் குடிநீருக்காக ஏழைப் பெண்கள் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேரிடுகிறது. என்ற பயத்துடன் கூறினாள். அதையடுத்து  இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

காதல் மணம்- கைது
2002-இல் எனக்குத் திருமணம் நடந்தது.  அது காதல் மணம். கணவரின் சொந்த ஊரான அரியலூரில் இல்லற வாழ்க்கையை தொடங்கினோம். அப்போது, புதுச்சேரியில் என் கணவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதற்காக, அவரையும், தேவையே இல்லாமல் என்னையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

ஐந்தரை மாதம் சிறையில் வாடினேன், விடுதலைக்கு பின் தங்குவதற்கு  வாடகை வீடுகூட கிடைக்கவில்லை. அதனால் அரியலூருக்கே சென்றோம். கழிவறை, குடிநீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் அது. அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தேன்.

அதே ஆண்டில், ஒரு நாள் என் கணவர் மீதான பழைய வழக்கில் நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போது, நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனாலும், போலீசார் இரக்கம் காட்டவில்லை.

கரடு முரடான பயணங்கள்
விடுதலையான பின்னரும் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சென்னை வர நேர்ந்தது. அப்படி வரும்போதெல்லாம் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களோடு சேர்ந்து தங்கிவிடுவேன்.

அந்த நேரத்தில் பெங்களூரில் செயல்படும் ‘நேசா’ என்ற அமைப்பு. அரியலூர் பகுதியில் செய்த சமூகப் பணிகளுக்காக எனக்கு 3 ஆண்டு கால உதவித் தொகை வழங்க முன்வந்தது.

அதை பயன்படுத்தி இரவுப் பாடசாலை, ஆளுமை பயிற்சி, வாழ்க்கைப் பயிற்சி  எனப் பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினேன்.

12- ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற செந்தில் என்ற மாணவர் என்னிடம் வந்து, வசதி இல்லாததால் மேல்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருப்பதாக முறையிட்டார். அவருக்கு உதவிகள் பெற்றுக் கொடுத்தேன். அதன் தாக்கத்தால், பணம் இல்லாத ரணத்திற்காக ஒருவருடைய படிப்பு தடைப்பட க் கூடாது என்று ‘வெளிச்சம்’ என்ற அமைப்பைத் தொடங்கி செயல்படலானேன். அந்த நேரத்தில் உதவியாக இருக்க வேண்டிய குடும்பத்தாரும் தொல்லைகள் தரத் தொடங்கினார்கள். என் மீது சந்தேகம் கொண்டார்கள்.

அந்த காலக்கட்டத்தில் தேசிய அளவிலான இரண்டு தன்னார்வ அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகள் எனக்கு தரப்பட்டன. குடும்பத்தாருக்கு அது பிடிக்கவில்லை. அதனால் இரண்டு பொறுப்புகளில்  இருந்து விலகினேன்.

ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். தங்க இடமில்லாமல் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கினேன்.

வெளிச்சம்
எங்கள் உதவியால் படித்த மாணவர் ஒருவர், என் நிலைகுறித்து பத்திரிக்கையில் எழுதினார். அதற்கு பிறகு நிறைய பேரிடம் இருந்து உதவி கிடைத்தது. இதனால் என் சேவை அமைப்பின்  செயல்பாடுகள்  விரிந்தன.
என்னால்  உதவி  பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 500-க்கும்  மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என உருவாகி இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வியடையும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது அதிகரித்திருப்பதால் ‘ஹெல்ப் லைன்’ அமைத்து, ஆலோசனை வழங்குகிறோம். பல பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

மாறுங்கள்
பெண்களுக்கு  நான் சொல்லிக் கொள்வது இதுதான்…! நம்மை முடக்க நினைக்கின்றவர்கள், பாலியல் ஒழுக்கம் குறித்து கட்டுக்கதைகளைத்தான் கிளப்பிவிடுவார்கள். ராணி மங்கம்மா காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது.

பெண்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநோயாளிகள்தான் இப்படிச் செய்தார்கள். அவர்கள் கோழைகளாத்தான் இருப்பார்கள். நாம் அதிரடியாக செயல்பட்டாலே பின்வாங்கிவிடுவார்கள்.

பொதுவாக நான் யார் எப்படிப் பேசினாலும் கவலைப்பட மாட்டேன். அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே சிறந்தது. திக்கு  தெரியாத இருட்டில் இருந்த நானே பலருக்கும் இன்று ‘வெளிச்சம்’ தருபவளாக மாறி இருக்கும்போது, உங்களால் எவ்வளவு பேருக்கு வெளிச்சத்தை வாரி வழங்க முடியும் பெண்களே…? யோசியுங்கள்...துணிந்தால் தொலைவும் கூட தூரமில்லை”- உணர்ச்சிப் பெருக்குடன் முடிக்கிறார் ஷெரின்.