தாய்ப்பால் தராத தமிழகத்தின் தாய்மார்கள்

Posted by Unknown - -

 நிகழ்ச்சியில் உணவியல் நிபுணர்
 ""பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் உணர வேண்டும்,'' என, யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி மெஹார் பேசினார்.
தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி மெஹார் பேசியதாவது: தாய்ப்பாலில் 70 சதவீதம் நீர் உள்ளதால், பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறு, கிருமிதொற்று உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்.
கடந்த ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கைபடி, தமிழகத்தில் முதல் ஆறு மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் தருவோர் எண்ணிக்கை, 2006ம் ஆண்டை ஒப்பிடும்போது, 39 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு 1.5 வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவற்றின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில், குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பாலில், "கொலோஸ்ட்ரம்' எனும் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் அடங்கிய வேதிப்பொருள் உள்ளது. இதை தருவதால், குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமான அளவு குறைக்கலாம். தற்போது 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இவ்வழிமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்களும், செவிலியர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மீனாட்சி மெஹார் பேசினார்.
தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவர் சல்மா பேசும்போது, ""குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை தடுக்கவும், இயற்கை கருத்தடை முறைக்கும், தாய்ப்பால் தருவது அவசியம். மேலைநாடுகளில் இதன் அவசியம் உணரப்படும் நிலையில், நம் நாட்டில் இதன் முக்கியத்துவம் குறைந்து வருவது வருந்தத்தக்கது,'' என்றார்.
கருத்தரங்கில், கல்லூரி மாணவிகள், குழந்தைகள் காப்பக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நன்றி: தினமலர் 16.12.2010

Leave a Reply