Archive for February 2012

உறவுகளே! இன்றைய (26.2.12) தினமணி நாளிதழின் இணைப்பான தினமணி கதிர் புத்தகத்தில் தேவையில்லாத தேர்வு பயம் ? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்




ல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து அரங்கேறி வரும் அவலங்களைப் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மேலிடுகிறது.

 பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையிலேயே கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற மாணவன்; உடன் பழகிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளைச் சூறையாடிய மாணவர்கள்; 'பஸ் தினம்' என்ற பெயரில் அரசுப் பேருந்துகளின் மீது கல்லெறிந்து நாசமாக்கி, பொதுமக்களையும் போலீஸாரையும் காயப்படுத்திய மாணவர் கூட்டம்... இவை எல்லாமே, அடுத்தடுத்து வெளியான செய்திகள். இதே நாட்களில்தான், படிப்பின் மீது கொண்ட விரக்தி, பயம் காரணமாக மாணவன் ஒருவன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட தகவலும் வெளியாகி இருக்கிறது.

'இங்கேதான் தவறு' என்று இடம்சுட்டிப் பொருள் விளக்க முடியாத அளவுக்கு கல்வித் தாயின் உடலெங்கும் புரையோடிப்போய் இருக்கின்றன கண்மூடித்தனமான காயங்கள். ஒழுக்கம் என்பது கற்பவர்களுக்கு மட்டுமல்ல... கற்பிக்கும் ஆசான்களுக்கும் அதிஅவசியம் என்பதுதான் காலம் காலமாக இருந்துவந்த நிலைமை. ஆனால், அரசாங்கம் தொடங்கி, கல்விக்கூடங்கள் வரையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களில் எதுவுமே ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை. அவையும்கூட, மதிப்பெண் சார்ந்தவையாகவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சாமர்த்தியம் சார்ந்தவையாகவும்  மாறிப்போயிருக்கின்றன!

இன்னொரு பக்கம், புகழ்பெற்ற பல தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மட்டுமல்ல... அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் மரியாதையும்கூட ரொம்பவே சிறுத்துப்போய் இருக்கிறது!

மாணவனின் வாழ்க்கை என்பது அவன் வாங்கும் மதிப்பெண்களில் மட்டும் ஊசலாடும் விதமாகக் கல்விமுறையை வைத்திருப்பதால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட, அவன் வாழ்க்கையே அறுந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டதுபோல பெற்றோர் காட்டும் பதற்றம், அப்படியே மாணவர்களையும் தொற்றிக்கொள்கிறது.

'பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் வெற்றி காட்டாவிட்டால், எங்கள் கல்வி நிலையத்தின் வியாபாரம் கெட்டுவிடும்' என்று வெளிப்படையாகச் சொல்லியே மாணவர்களை வெளியேற்றும் சீர்கெட்ட கல்விமுறைதானே, ஒரு பாவமும் அறியாத அந்த ஆசிரியை உயிரை இன்று விலையாகக் கேட்டுவிட்டது? கல்விக்குக் கொட்டிக் கொடுப்பதைக் குடும்பத்தின் கௌரவமாகவும்... கை நிறைய குழந்தையின் செலவுக்குக் கொடுப்பதைத் தங்கள் குற்ற உணர்வுக்கான வடிகாலாகவும் நினைக்கிற பெற்றோரும் அல்லவா இந்தப் பாவத்தின் பங்குதாரர்கள்?

தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த நடைமுறை புத்திசாலிகளையும் ஒழுக்கச் சீலர்களையும் உழைப்பாளிகளையும் குழந்தைகளுக்கு உதாரணம் காட்டத் தவறுவது கல்விக்கூடங்கள் மட்டுமா... பெற்றோரும்தானே? பொய் சொல்லாத அரிச்சந்திரனைப் பற்றியோ, தர்மம் தவறாத தருமரைப் பற்றியோ, அகிம்சையே உருவான மகாத்மா காந்தியைப் பற்றியோ நினைப்பதற்காவது இவர்களுக்கு நேரம் இருந்தால்தானே, குழந்தைகளோடு வாய்விட்டுப் பகிர்ந்துகொள்வதற்கு!
'நீதி போதனை' வகுப்புகளை முற்றிலுமாக இழுத்து மூடிவிட்ட நாம், மதிப்பெண் குவிக்கும் சூத்திரங்களை மட்டுமே வாழ்க்கையின் சாத்திரங்களாக இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்கப்போகிறோம்? புத்தியைத் தீட்ட வேண்டிய தெய்வீகப் பட்டறையில் கத்தியைத் தீட்டியது அந்த மாணவனின் தவறல்ல... முழுக்க முழுக்க இன்றைய கல்விமுறையின் குற்றம்தான் என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறோம்?

அரசாங்கம், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரின் நோக்கும் போக்கும் ஒரே நாளில் நேராகிவிடும் என்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கு இன்றில் இருந்தாவது நம் பார்வையைச் சீராக்கி, நேராக்கிக்கொள்ள மாட்டோமா?

நன்றி: ஆனந்த விகடன்.22.2.12


உறவுகளே!

உலக காதலர்தினத்தன்று  வெளிச்சம் ஷெரின் அவர்கள் எழுதிய
 "மாணவர்களே காதலியுங்கள்" எனும் புத்தகத்தை கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் வெளியிடுகிறார்கள்....

மாணவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு இந்த புத்தகத்தின் ஏதாவதொரு பக்கத்தில் தீர்வு இருக்கக்கூடும்,  அது போல் இந்த புத்தகத்தால் கிடைக்கும் பணம் எங்களைப்போன்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவக்கூடும்...

ஆகையால் நீங்கள் நிச்சயம் விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்... அதைப்போல் இந்த தகவலை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்....

ஏனெனில் இது நமக்கான விழா..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்..

இடம்: சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம்,
நேரம்: காலை 11 மணியளவில். 14.02.11



பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!

இந்தப் பதிவு குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!

அரசுப் பொதுத் தேர்விற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் தான் உள்ளது.+2 மாணவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதியும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதியும் தேர்வு ஆரம்பமாக உள்ளது.சரியாகப் படிக்காத மாணவர்களும் இந்த தேர்விற்கு பல முயற்சிகளை செய்து படிப்பதற்கு ஆர்வத்துடன் தயாரகுவார்கள்.

இப்படி இருக்கையில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை படி,இன்னும் தேர்விற்கு 2 மாதம் தான் உள்ளது என்று அறிவுரை என்ற பெயரில் நச்சரிக்க தொடங்கி அவர்களை பயமுறுத்துகின்றனர். இதனால்
மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பதட்டமடைகின்றனர்.

பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொஞ்சமாவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஏன்? என்றால் அப்பொழுது தான் அவர்களின் தேர்வு பயம் நீங்கி இயல்பான மனநிலை கிடைக்கும். அதனால் அவர்களுக்கு தானாகவே படிப்பதற்கு ஆர்வம் வரும். ஆனால் பெற்றோர்கள் இப்படி செய்யாமல்
மாணவர்களுக்கு சிறிது நேரம் கூட சுதந்திரம் அளிப்பதில்லை.

இந்த நேரங்களில் ஒரு மாணவன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி அல்லது செய்திகள் போன்றவற்றை பார்ப்பதற்கும் பெற்றோர்கள் தடை விதிக்கின்றனர்.

பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சோர்வாக வீடு திரும்பும் மாணவர்களை குறைந்த்து 2 மணி நேரம் கூட பெற்றோர்கள் விளையாட விடுவதில்லை. மாறாக வீட்டிற்க்கு வந்ததும் புத்தகத்தை எடுத்து படி என கட்டாய படுத்துகின்றனர்.

8 மணி நேரம் பள்ளியில் படித்து விட்டு வீட்டிற்கு வந்ததும் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படி என்றால் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று பெற்றவர்களே யோசித்து பாருங்கள்!

அதற்காக மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க சொல்லவில்லை.அவர்கள் படிக்கும் போது கொஞ்சமாவது அவர்களுக்கு பிடித்த நிலையில் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன்களையும் பெற்றோர்கள் பிடுங்கி வைத்துகொண்டு படி படி என்று நச்சரிப்பதால் மாணவர்களின் கவனம் எல்லாம் அந்த செல்லின் பால் இருக்குமே தவிர படிப்பில் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

செல்போன் பயன்படுத்தும் மாணவனாக இருந்தால் அவனிடம் அழகான முறையில் பேசி படிப்பின்பால் பணிய வைக்க வேண்டுமே தவிர கடுகடுத்து காரியத்தை கெடுத்து விட கூடாது .என்பதை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும்.

இணையம் வசதியில்லாத செல்போனாக இருந்தால் பள்ளிவிட்டு வரும் மாணவன் ஒரு மணி நேரமாவது செல்போனை உபயோகப்படுத்த அனுமத்திக்லாம்.

பெற்றோர்கள் இப்படி கொஞ்சம்,கொஞ்சம் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வழிவகை செய்தால் தான் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.

பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.அதற்க்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஓரளவாவது உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தால் வெற்றி நிச்சயம்!!


ள்ளிக் கூடத்தில் குழந்தைகளை அடிக்கக் கூடாது’ என்று அரசு உத்தரவு போட்டு பல வருடங்கள் ஆன பிறகும், சில பள்ளிகளில் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களை பள்ளியின் துணை முதல்வரான ஜான்சி, பிரம்பு கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடி கொடுத்திருக்கிறார் என்பதுதான் பிரச்னை.

தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசிய மாண வர்கள், ''சயின்ஸ் சப்ஜெக்ட் சம்பந்தமா எல்லோரும் பிராக்டிகல் அப்சர்வேஷன் எழுதணும். பப்ளிக் எக்ஸாம் வர்றதால, எல்லோரையும் அப்சர்வேஷன் முடிச்சு வைக்கச் சொன்னாங்க. அப்சர்வேஷன் நோட்ல ஒரு வார்த்தை தப்பா இருந்தாக்கூட, புதுசா எழுதணும்னு சொன்னாங்க.
அதனால ஒவ்வொருத்தரும் நான்கு முறையாவது அப்சர்வேஷன் எழுத வேண்டியதாயிடுச்சு. நல்லாத் தான் எழுதி இருந்தோம். அதிலும் தப்பு கண்டுபிடிச்சு திரும்பவும் எழுதச் சொன்னாங்க. தினமும் ரிவிஷன் டெஸ்ட் நடக்குது. ஸ்கூல் முடிச்சு வீட்டுக்குப் போகவே இரவு 7.30 மணி ஆயிடுது. அதனால இரவெல்லாம் உட்கார்ந்து எழுதினாக்கூட முடிக்க முடியலை. அதுக்குத்தான் ஜான்ஸி மிஸ் பிரம்பால, ரத்தம் வர்ற வரைக்கும் அடி பின்னிட்ட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் காய்ச்சல் வந்துடுச்சி. டாக்டர் உடம்புல இருக்குற காயத்தைப் பார்த்துட்டு வீட்டுல சொல்லிட்டார். சில பசங்களுக்கு எலும்பு வீங்கிடுச்சி. பலருக்கு உடம்பு முழுக்க ரத்தக் கட்டு. எங்க பெயரையோ போட்டோவையோ போட்டீங் கன்னா நாங்க மறுபடியும் ஸ்கூலுக்குப் போகவே முடியாது'' என்று மிரண்டபடி சொன்னார்கள்.

குற்றம் சாட்டப்படும் பள்ளியின் துணை முதல்வர் ஜான்சியிடம் பேசினோம். ''நாங்களும் மனுஷங்கதானே.. குழந்தைகளை ரத்தம் வரும் அளவுக்கு அடிப்போமோ? தேவை இல்லாம இந்தப் பிரச்னையை பெருசாக்கிட்டாங்க. நாங்க பதில் சொல்ல வேண்டியது பெற்றோருக்குத்தான்! அவர் களிடம் சொல்லிட்டோம். வேற யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

'அன்பினால் சாதிக்க முடியாததை அடியினால் சாதிக்க முடியும்...’ என்று ஆசிரியர்களே நம்புவது எத்தனை அறிவீனம். இவர்களுக்குப் பாடம் நடத்தப் போவது யார்..


நன்றி.ஜூனியர் விகடன்


திர்ச்சி தரும் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்கு பெரும் உதவிகளைச் செய்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி, தமிழக இன்ஜினியரிங் கல்லூரி களில் நடந்திருக்கும் அநியாயத்தை அம்பலப்படுத்துகிறார், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் சரவணகுமார். 

அவரைச் சந்தித்தோம். 'நான் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று கவுன்சிலிங் மூலம் சேலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். கவுன்சிலிங் மூலம் சேர்பவர்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகை 32,500 ரூபாய். ஆனால், அந்தக் கல்லூரியில் 50,000 ரூபாய் வசூல் செய்தனர். காரணம் கேட்டதற்கு, 'இந்தத் தொகையை கட்டினால் படிக்கலாம் இல்லை என்றால் வேறு கல்லூரிக்குப் போய் விடுங்கள்’ என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். கவுன்சிலிங் முடிந்தபிறகு வேறு கல்லூரியில் போய்ச் சேரமுடியாது என்பதால், கூடுதல் பணத்தைக் கஷ்டப்பட்டு கட்டி படித்தேன்.
முதல் ஆண்டு ஒரு வழியாக முடித்து விட்டேன் என்றாலும் அடுத்த மூன்று வருடங்கள் படிப்பதற்கு பணம் புரட்ட முடியாது என்பது தெரிந்தது. அரசு சொன்ன தொகையை நம்பி இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. அவ்வளவு பணம் கட்டமுடியாது என்பதால் அடுத்த வருடம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் தவிப்பார்களோ என்ற சிந்தனை என்னைப் பாடாய்ப்படுத்தியது. அதனால், குறிப்பிட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது, அரசு தக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றேன். நான் கேட்ட 20 கேள்விகளுக்கு 36 பக்கங்களில் பதில் கொடுத்தார்கள். பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும் கிடைத்த பதில்களே அதிர வைத்து விட்டன.
2007-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாருக்கு உள்ளானவை, 39 இன்ஜினீயரிங் கல்லூரிகள். 2008-ம் ஆண்டு 46 கல்லூரிகள். 2009-ம் ஆண்டு 61 கல்லூரிகள். 2010-ம் ஆண்டு 24 கல்லூரிகள் என்று 170 கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ளன. இதனை விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 39 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளில் மட்டுமே அந்தக் குழு விசாரணை நடந்தியிருக்கிறது. அதில் இரண்டு கல்லூரிகள் மட்டும் அதிக வசூல் செய்வது கண்டறியப்பட்டது.
இதேபோன்று 2008-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 61 கல்லூரிகளில், 7-ல் மட்டும் விசாரணை நடைபெற்றது. அதில் 5 கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக புகார் கூறப்பட்ட 170 கல்லூரிகளிலும் விசாரணை நடத்தாமல் சில கல்லூரிகளில் மட்டுமே நடந்துள்ளது. அதனால் 11 கல்லூரிகளில் மட்டுமே அதிகக் கட்டணம் வசூல் செய்வதுநிரூபணமானது.  இந்த 11 கல்லூரிகளும் தலா ஒரு மாணவருக்கு மட்டுமே, கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி அளித்துள்ளது. அதிகக் கட்டணம் வசூல் செய்த கல்லூரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
'புகார் அளிக்கப்பட்ட அனைத்துக் கல்லூரி களிலும் ஏன் விசாரணை நடத்தவில்லை? இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தங்களது கடமையை சரிவரச் செய்யாமல் சில கல்லூரிகளுக்குத் துணை போயிருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டி அரசு மீதும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீதும் வழக்கு தொடுக்கப் போகிறேன்.  பல ஆயிரம் மாணவர்களின் வாழ்கையைப் பாழாக்கும் கூடுதல் கட்டண வசூல் விவகாரம் இனியாவது ஒழியட்டும்'' என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து, உயர்க்கல்வித் துறை அமைச் சர் பழனியப்பனிடம் கேட்டோம். ''இது முழுக்க முழுக்க கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள். இப்போது, மானிட் டரிங் செய்வதற்காக மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைத்து உள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது விசாரணை நடத்தி வருகிறோம். கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியின் உரிமத்தை  ரத்து செய்யவும் தயங்க மாட்டோம்'' என்றார். 

இன்றைய நடவடிக்கை இருக்கட்டும். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்கப்போவது யார்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பதில் சொல்லப்போவது யார்?

நன்றி: ஜூனியர் விகடன். 4.2.12


‘‘எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில்  ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன். ஆத்திரத்தில், கோபத்தில் தப்பு செய்துவிட்டேன். ஆனால், இப்போது தவிக்கிறேன். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உமா மகேஸ்வரி டீச்சர் கதறியது என் கண்ணிலேயே நிற்கிறது. நான் தப்பு செய்துவிட்டேன். எனக்குத் தண்டனை கொடுங்கள். எனக்கு மன்னிப்பே கிடையாது!’’
- உமா மகேஸ்வரி கொலையாளி, ஒன்பதாம் வகுப்பு மாணவன்.
ஆசிரியை உமா மகேஸ்வரி தன் வகுப்பு மாணவனால் கொல்லப்பட்ட அன்று சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிக்க பூந்தமல்லி நெடுஞ்சாலை வன் முறைக் களமாகி இருந்தது. காரணம், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். ‘பஸ் தினம்’ கொண்டாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துக் கடைகளைச் சூறையாடிய அவர்கள், சாலையில் சென்ற பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கொலைக்கு முந்தைய நாள் தாம்பரத்தில் ஒரு பெண்ணைப்  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய நால்வரை போலீஸார் கைதுசெய்தனர். நால்வருமே கல்லூரி மாணவர்கள்.
இந்தக் கொலைக்கு மறுநாள் சென்னை, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டார். தேர்வு பயம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட அவர், பத்தாம் வகுப்பு மாணவர்!

உங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், நெரும்பூரைச் சேர்ந்த மாணவி வர்ஷினி--யின் கதை ஞாபகத்தில் இருந்தால், இந்தச் சம்பவங்கள் எதுவுமே பெரிய அதிர்ச்சியை உருவாக்காது. ஓராண்டுக்கு முன், ஆசிரியை திட்டியதால் மன உளைச்சலுற்று தீக்குளித்து தன்னை மாய்த்துக்கொண்டவள் வர்ஷினி. ஐந்தாம் வகுப்பு மாணவி!ஆனால், வர்ஷினியை நமக்கு ஞாபகம் இருக்காது. ஏனென்றால், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நமக்குச் சாதாரணமாகிவிட்டது. இப்போது மாணவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் நமக்குச் சாதாரணமாகிக்கொண்டு இருக்கிறது. இனி, மாணவர்கள் கொலை செய்வதும் நமக்குச் சாதாரணமாகிவிடும். இன்னும் என்னவெல்லாம் நாம் மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்?
முழுப் பழியையும் மாணவர்கள் மீது சுமத்துவதைவிட்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை பாதிக்கும் அளவுக்கு மாணவர் லோகேஷின் தற்கொலை ஏன் உங்களைப் பாதிக்கவில்லை?
சுமார் 160 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் கொலை செய்கிறான்... 170 ஆண்டுகள் பழமையான ஒரு கல்லூரியின் மாணவர்கள் ரௌடிகளைப் போல நடந்துகொள்கிறார்கள் என்றால், நம்முடைய கல்வித் துறை எவ்வளவு புரையோடிப்போய் இருக்கிறது என்று நாம் வெட்கப்பட வேண்டாமா?
ஆசிரியை உமா மகேஸ்வரி நல்லவராக இருக்கலாம். ஆனால், மோசமான நம்முடைய கல்விக் கட்டமைப்பில் அவரும் ஒரு கண்ணி. கொலை செய்த மாணவரின் குறிப்பேட்டில் ஏழெட்டு முறை புகார்களைக் குறிப்பிட்டு அனுப்பி இருக்கிறார் உமா மகேஸ்வரி. மாணவரின் பெற்றோர் கண்டிப்பானவர்கள் என்றும் அவருடைய பிரச்னைகளை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நிலையில் இல்லை என்றும் கூறப்படுகிறது. தன் குழந்தைக்குப் படிப்பில் ஆர்வம் இருக்கிறதா, இல்லையா; குழந்தைக்குக் கற்கும் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்ப தைப் பற்றியெல்லாம் துளிக்கூட யோசிக் காமல் படிப்பைத் திணிக்கும் பெற்றோர்கள் நிரம்பிய ஒரு சமூகத்தில், மீண்டும் மீண்டும் ‘உன் பிள்ளை படிக்கவில்லை, தேறுவது கடினம்’ என்னும் செய்தியைச் சொல்லும் ஆசிரியர்களை எதிர்கொள்ள குழந்தை களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? கடைசி வரிசை மாணவர்களின் உணர்வுகளை, பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏற்ற சூழல் இங்கு எந்த அளவுக்கு இருக்கிறது?
அந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்புகள் என்று ஒரு பிரிவு உண்டு. தெனாலிராமன்களும் பீர்பால்களும்  விக்கிரமாதித்யன்களும் பரமார்த்த குருவின் சீடர்களும் உலவும் வகுப்புகள் அவை. படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள்கூட ஆர்வத்துடன் பங்கேற்கும் அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் கதை சொல்வார்கள். மாணவர்களிடமும் அவர்களுடைய சொந்தக் கதைகளைக் கேட்பார்கள். பல மாணவர்கள் குடும்பக் கதையைச் சொல்லும்போது மனச்சுமை தாளாமல் அழுவார்கள். ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆறுதலாக நிற்பார்கள். குழந்தைகள் குறைந்தபட்சம் பிரச்னைகளைத் தங்கள் அளவில் எதிர்கொள்ளும் ஆன்மபலத்தையேனும் இந்த வகுப்புகள் வழங்கின. 

இந்தக் காலக் குழந்தைகளுக்கோ நீதிபோதனை வகுப்புகள்கூடக் கிடையாது. பாவம் கிடையாது. புண்ணியம் கிடையாது. கடவுள் கிடையாது. சாத்தானும் கிடையாது. எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் அவர்கள்!

பிரெஞ்சு அறிவுஜீவிகளில் ஒருவரான மிஷல் ஃபூக்கோ வகுப்பறைகள், மருத்துவமனைகள், சிறைகள் மூன்றையும் ஒப்பிடுவார். பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், கண்காணிப்பாளர்கள், வருகைப் பதிவேடுகள், நெருக்கடியான சூழல் என்று இவை மூன்றுமே ஒரே மாதிரியான கட்டமைப்பின் கீழ் இருப்பதைச் சுட்டிக்காட்டுவார் ஃபூக்கோ. முற்றிலும் அறநெறிகளைத் துறந்துவிட்ட ஒரு சமூகம், வணிகமயமாகிவிட்ட கல்வித் துறை, பொருளாதாரச் சந்தைக்குத் தயாராக்கும் வகையில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் கல்விக்கூடங்களின் கட்டமைப்பு, போட்டிக்களமாகிவிட்ட தேர்வுமுறைகள்... இவற்றின் தோல்வியைத்தான் இன்னொரு முறை சுட்டிக்காட்டி இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கொலையும் லோகேஷின்
தற்கொலையும்!