இந்த வார ராணி வார இதழில் வெளிச்சம்

Posted by Unknown - -

எங்களை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெளிச்சமாக்க தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரான வெளிச்சம் செரீன் அவர்களின் வாழ்க்கையை ராணி இதழில் வெளியான கட்டுரையை படிங்க..


கறுப்பு நிறக் கடவுள்களை கையெடுத்துக்  கும்பிடும் நாட்டில்..கறுப்பாக இருந்ததாலே கறுப்பி, பிளாக்கி என பலவித ஏளன சொற்களால் வேட்டையாடப்பட்டவள் அந்தச் சிறுமி. பள்ளிக்கூடத்திலும், குடும்பத்திலும் புறக்கணிக்கப்பட்டாள்.

இன்று பெரிய மனுசி ஆகி, ‘வெளிச்சம்’ என்ற அமைப்பை தொடங்கி, பலருடைய வாழ்க்கையில் கல்வி விளக்கேற்றி வருகிறார். அவரது பெயர் ஷெரின். ஜீன்ஸ் பேன்ட்- சட்டை சகிதம் இருக்கும் அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

நரகம் 

என் பெற்றோருக்கு பூர்வீகம் நாகர்கோவில். நான் பிறந்து வளர்ந்தது கேரளாவில் உள்ள இடுக்கியில்! அங்கு தமிழர்கள் அதிகம். பள்ளிகள் குறைவு. இருக்கும் ஒன்றிரண்டு பள்ளிக்கூடங்களும் அதிக தொலைவில் இருந்ததால், பெண்கள் படிப்பது சிரமமானதாக இருந்தது.

இதனால், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையும். அதன்பின் 12-ஆம் வகுப்பு வரை மதுரை ராயன்பட்டியில் ஒரு ஆங்கில பள்ளியிலும் படித்தேன் அங்கு நான் மட்டுமே விடுதியில் தங்கினேன். இதனால் ஆதரவற்றவள் என்று நினைத்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாகவே, என்னை பயன்படுத்தினார்கள். விட்டு வேலைகளையும் செய்ய வைத்தார்கள்.

என் கறுப்புநிற தேகத்தை வைத்து சக மாணவிகள் என்னை கடுமையாக கேலி செய்வார்கள். இதனால் பள்ளி வாழ்க்கை நரகமா இருந்தது.    

அப்பாவுக்கு இடுக்கியில் சொந்தமாக ஏலக்காய் எஸ்டேட் இருந்தது. அவர் என்னிடமோ, அம்மாவிடமோ  அன்பாகவே நடந்து கொள்ள மாட்டார். மதுரையில் தங்கி படித்த போது என்னை பார்க்க எப்போதாவதுதான் வருவார்.

படிப்பு முடிந்தும்  ஒரு வருடம் விடுதியில் வார்டனாக வேலை செய்தேன். பின்னர் மதுரையில் ‘மார்க்கெட்டிங்; நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது பல ஆண் வாடிக்கையாளர்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

மாற்றிய மண்டேலோ வரிகள்
தற்செயலாக ஒரு நாள் கறுப்பர் இனத்தலைவரான நெல்சன் மண்டேலோவின் மேற்கோள் வரி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. ‘ உன்னை நீ சரியாக உணரும்போது, இந்த உலகம் உன் புறத்தோற்றத்தை மறந்துவிடும்’ -  என்ற வரி எனக்காகவே சொல்லப்பட்டதாக  போல் இருந்தது.  எனது மனதை மாற்றியது.

யாராவது என்னிடம் ‘கேரளாவில் பிறந்து, ஏன் இப்படி கறுப்பாக இருக்கிறாய்?’என்று கேட்கும் போது பதில் ஏதும் பேசாமல் தலைகுனிந்து சென்றுவிடுவேன். இந்த வரியை படித்தபிறகு, இதுபோல் கேட்கின்றவர்களிடம், ‘கென்யாவில் இருந்து வருகிறேன்’ என்பேன். ‘ன்யாவில் இவ்வளவு அழகான பெண்கள் இருக்கிறார்களா?’ என்று அதிசயமாக பார்ப்பார்கள்.

திடீரென மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். பணி நிமித்தமாக சேலம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றேன். அங்கு ஒரு சிறுமி ‘ இந்த பகுதியில் குடிநீருக்காக ஏழைப் பெண்கள் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேரிடுகிறது. என்ற பயத்துடன் கூறினாள். அதையடுத்து  இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

காதல் மணம்- கைது
2002-இல் எனக்குத் திருமணம் நடந்தது.  அது காதல் மணம். கணவரின் சொந்த ஊரான அரியலூரில் இல்லற வாழ்க்கையை தொடங்கினோம். அப்போது, புதுச்சேரியில் என் கணவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதற்காக, அவரையும், தேவையே இல்லாமல் என்னையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

ஐந்தரை மாதம் சிறையில் வாடினேன், விடுதலைக்கு பின் தங்குவதற்கு  வாடகை வீடுகூட கிடைக்கவில்லை. அதனால் அரியலூருக்கே சென்றோம். கழிவறை, குடிநீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் அது. அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தேன்.

அதே ஆண்டில், ஒரு நாள் என் கணவர் மீதான பழைய வழக்கில் நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போது, நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனாலும், போலீசார் இரக்கம் காட்டவில்லை.

கரடு முரடான பயணங்கள்
விடுதலையான பின்னரும் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சென்னை வர நேர்ந்தது. அப்படி வரும்போதெல்லாம் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களோடு சேர்ந்து தங்கிவிடுவேன்.

அந்த நேரத்தில் பெங்களூரில் செயல்படும் ‘நேசா’ என்ற அமைப்பு. அரியலூர் பகுதியில் செய்த சமூகப் பணிகளுக்காக எனக்கு 3 ஆண்டு கால உதவித் தொகை வழங்க முன்வந்தது.

அதை பயன்படுத்தி இரவுப் பாடசாலை, ஆளுமை பயிற்சி, வாழ்க்கைப் பயிற்சி  எனப் பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினேன்.

12- ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற செந்தில் என்ற மாணவர் என்னிடம் வந்து, வசதி இல்லாததால் மேல்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருப்பதாக முறையிட்டார். அவருக்கு உதவிகள் பெற்றுக் கொடுத்தேன். அதன் தாக்கத்தால், பணம் இல்லாத ரணத்திற்காக ஒருவருடைய படிப்பு தடைப்பட க் கூடாது என்று ‘வெளிச்சம்’ என்ற அமைப்பைத் தொடங்கி செயல்படலானேன். அந்த நேரத்தில் உதவியாக இருக்க வேண்டிய குடும்பத்தாரும் தொல்லைகள் தரத் தொடங்கினார்கள். என் மீது சந்தேகம் கொண்டார்கள்.

அந்த காலக்கட்டத்தில் தேசிய அளவிலான இரண்டு தன்னார்வ அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகள் எனக்கு தரப்பட்டன. குடும்பத்தாருக்கு அது பிடிக்கவில்லை. அதனால் இரண்டு பொறுப்புகளில்  இருந்து விலகினேன்.

ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். தங்க இடமில்லாமல் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கினேன்.

வெளிச்சம்
எங்கள் உதவியால் படித்த மாணவர் ஒருவர், என் நிலைகுறித்து பத்திரிக்கையில் எழுதினார். அதற்கு பிறகு நிறைய பேரிடம் இருந்து உதவி கிடைத்தது. இதனால் என் சேவை அமைப்பின்  செயல்பாடுகள்  விரிந்தன.
என்னால்  உதவி  பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 500-க்கும்  மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என உருவாகி இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வியடையும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது அதிகரித்திருப்பதால் ‘ஹெல்ப் லைன்’ அமைத்து, ஆலோசனை வழங்குகிறோம். பல பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

மாறுங்கள்
பெண்களுக்கு  நான் சொல்லிக் கொள்வது இதுதான்…! நம்மை முடக்க நினைக்கின்றவர்கள், பாலியல் ஒழுக்கம் குறித்து கட்டுக்கதைகளைத்தான் கிளப்பிவிடுவார்கள். ராணி மங்கம்மா காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது.

பெண்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநோயாளிகள்தான் இப்படிச் செய்தார்கள். அவர்கள் கோழைகளாத்தான் இருப்பார்கள். நாம் அதிரடியாக செயல்பட்டாலே பின்வாங்கிவிடுவார்கள்.

பொதுவாக நான் யார் எப்படிப் பேசினாலும் கவலைப்பட மாட்டேன். அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே சிறந்தது. திக்கு  தெரியாத இருட்டில் இருந்த நானே பலருக்கும் இன்று ‘வெளிச்சம்’ தருபவளாக மாறி இருக்கும்போது, உங்களால் எவ்வளவு பேருக்கு வெளிச்சத்தை வாரி வழங்க முடியும் பெண்களே…? யோசியுங்கள்...துணிந்தால் தொலைவும் கூட தூரமில்லை”- உணர்ச்சிப் பெருக்குடன் முடிக்கிறார் ஷெரின்.





6 Responses so far.

  1. வாழ்த்துகள்... தங்கள் பணி மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்.

  2. Anonymous says:

    வாழ்த்துக்கள்

  3. Unknown says:

    தங்களின் ஆக்கப்பூர்வமான பணி தொடரட்டும்.... வாழ்த்துகள்....

  4. தொடரட்டும் தங்கள் பணி! எது நமை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறதோ, அதைக் கொண்டே முன்னேறுவோம். தடைக்கல்லை படிக்கல்லாக்குவோம்... அதைப் பலரும் பயன்படுத்த அனுமதிப்போம். அதற்கு நல்லுதாரணம் நீங்கள்!

  5. நல்ல உள்ளங்கள் என்றும் தளர்வதில்லை, வாழ்க வளமுடன்

  6. super madam ungalai pol nallavanga intha mathiri irukkum kiramattukku thevai

Leave a Reply