Showing posts with label Civil service Exam results 2011. Show all posts



ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்ததுடன் இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்று சாதித்துள்ளனர்.

மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) ஆண்டுதோறும், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக, அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வுகளில், வழக்கமாக, வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் தேர்வு பெறுவர். வட மாநிலங்களில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிகளவில் பயிற்சி மையங்கள் இயங்கி வருவதும், அவர்கள் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதும் வாய்ப்பும், அதிகளவில் வெற்றிபெற வழி வகுக்கிறது. இத்தகைய பயிற்சி மையங்கள், அதிகளவில் தமிழகத்தில் இல்லாதது குறையாக இருந்தது. சென்னையில் உள்ள அண்ணா ஐ.ஏ.எஸ்., அரசு பயிற்சி மையம் மட்டும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில், இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் உட்பட பல பயிற்சி மையங்கள் தோன்றியபின், தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றனர்.கடந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 47 ஆயிரத்து 698 பேர் விண்ணப்பித்தனர். இதில், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த முதல் நிலைத் தேர்வில், 2 லட்சத்து 69 ஆயிரத்து 36 பேர் கலந்து கொண்டனர். மெயின் தேர்வில், 12 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் இருந்து, 2,589 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு பெற்றனர். நேர்முகத் தேர்வு முடிவுகளை, நேற்று யு.பி.எஸ்.சி., வெளியிட்டது. நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களில் இருந்து, 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் மூன்றிடத்தில் தமிழகம் சாதனை:இதில், தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும், தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி, அம்பேத்கர் பல்கலையில் பி.ஏ.,-பி.எல்., ஹானர்ஸ் முடித்தவர். இரண்டாவது முயற்சியில், இவர் இத்தகைய சாதனையை செய்துள்ளார்.

இரண்டாவது இடம், சுவேதா மொகந்தி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர், ஐதராபாத்தில் உள்ள நேரு தொழில்நுட்ப பல்கலையில், பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இவர் வெற்றி பெற்றுள்ளார். 

சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த டாக்டர் வருண்குமார், தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர், சென்னையில் உள்ள ராகாஸ் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படித்துள்ளார்.இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேரில், 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 29 பேர் மாணவர்கள்; ஏழு பேர் மாணவியர். இந்த மையத்தில் பயின்ற அரவிந்த், அகில இந்திய அளவில் எட்டாவது இடமும், ராகப்பிரியா 28வது இடமும், மீர் முகமது 59வது இடமும், டாக்டர் கார்த்திகேயன் 118வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனிவாசன் என்ற மாணவர், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

போலீஸ் அதிகாரி மகன் சாதனை: சென்னை, போலீசில் கூடுதல் துணைக் கமிஷனர் அசோக் என்பவர் மகன் டாக்டர் அருண். இவர், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை சென்னையில் டான்போஸ்கோ பள்ளியில் முடித்தார். முதல் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை அனைத்திலும், முதல் ரேங்க் பெற்றுள்ளார். மாநில அளவில் போலீசாரின் பிள்ளைகளில் பிளஸ் 2வில் முதலிடம் பிடித்துள்ளார். இதனால், மருத்துவப் படிப்புக்கான, முதல்வரின் ஸ்காலர்ஷிப் இவருக்கு கிடைத்தது.மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவராக தேறிய இவர், மருத்துவ அறுவை சிகிச்சையில் தங்கம் வென்றுள்ளார். தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்விலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் அண்ணா அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையத்தின் சார்பில், (தமிழக அரசு) 144 பேர், நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின், மேலும் சில மையங்களில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தத்தில், தமிழகத்தில் இருந்து 122 பேர் தேர்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்று, தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஊழலை ஒழிப்பேன்: முதலிடம் பெற்ற மாணவி பேட்டி : ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவி திவ்யதர்ஷினி, சென்னை நுங்கம்பாக்கம், ஜெயலட்சுமிபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சண்முகம்; சுங்கத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஆலோசகராக இருக்கிறார். தாய் பத்மாவதி. சகோதரி பிரிதர்ஷினி. சகோதரர் கோகுல்; மரைன் இன்ஜினியராக இருக்கிறார்.

திவ்யதர்ஷினி கூறியதாவது: சட்டப்படிப்பை முடித்த நான், எம்.சி.ஏ., முடித்து, சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறேன். ஐ.ஏ.எஸ்., தேர்வில், "பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்' பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன். இரண்டாவது முயற்சியில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது, மிகவும் மகிழ்சியாக இருக்கிறது. பிரபா ஐ.ஏ.எஸ்., அகடமியின் இயக்குனர் பிரபாகரன் கொடுத்த ஊக்கம், இந்தளவிற்கு சாதனை செய்ய வைத்துள்ளது.நேர்மையாக செயல்பட்டு, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, ஐ.ஏ.எஸ்.,க்கு படித்தேன். எனது தந்தையின் விருப்பமும் இதுவே.இவ்வாறு திவ்யதர்ஷினி கூறினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜீவ் கார்க் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி : மத்திய தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகர் 17வது குறுக்கு தெரு சன் ரைஸ் குடியிருப்பைச் சேர்ந்த கார்க் மகன் ராஜீவ் கார்க், 143 இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். இவருடைய பெற்றோர் கார்க், அஞ்சு, தம்பி நிர்பே ஆகியோர் ராஜீவ் கார்க் சிவில் சர்வீசஸ் தேர்வெழுத உறுதியாக இருந்துள்ளனர்.

வெற்றி குறித்து ராஜீவ் கார்க் கூறியதாவது:பெத்திசெமினர் மேல்நிலைப்பள்ளியில், 2004ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தேன். 2008 ஆண்டு புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., படிப்பில் சேர்ந்தேன். புதுச்சேரி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றேன்.சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவதே எனது குறிக்கோளாக இருந்தது. இதனால் பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தும் வேலைக்குச் செல்லவில்லை. கல்லூரியில் நடந்த எந்த கேம்பஸ் இன்டர்வியூவிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த முறை சிவில் சர்வீசஸ் எழுதிய போது வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். இம்முறை அப்படி நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.முதல் தோல்வி நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. இன்ஜினியரிங் படித்திருந்தாலும், நாட்டைப் பற்றி அறிந்து கொள்ள பொது நிர்வாகம், புவியியல் ஆகியவற்றை முதன்மை பாடங்களாக எடுத்து படித்தேன். முதன்மை பாடங்களோடு தொடர்புடைய நிறைய புத்தகங்களையும் படித்தேன். தேர்வில் வெற்றி பெறவேண்டும் என டில்லிக்குச் சென்று வாஜிம்ராம் சென்டரில் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்தேன். நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டதால் எனது சிவில் சர்வீசஸ் கனவு நனவாகிவிட்டது.நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே என்னுடைய இளம் வயது தாகம். அதற்கு சரியான வழித்தடம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் தான். அதனால் இந்த வழியினை தேர்ந்தெடுத்து வெற்றிப் பெற்றேன். வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுப்பதே எனது பணியாக இருக்கும். சிவில் சர்வீசஸ் தேர்வெழுத இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முன்வர வேண்டும்.இவ்வாறு ராஜீவ் கார்க் கூறினார்.
# தேர்வு பெற்ற 920 பேரில், 28 பேர் உடல் ஊனமுற்றவர்கள்.
#  
ஐந்து பேர், பார்வையற்றவர்கள்; 9 பேர், காது கேட்காதவர்கள்.
 # "
டாப்' 25 பேரில், 8 பேர், முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்றுள்ளனர். 4   பேர், இரண்டாவது முயற்சியிலும், 9 பேர், மூன்றாவது முயற்சியிலும், 3 பேர், நான்காவது முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளனர். "டாப்' 25 பேரில், 20 பேர் ஆண்கள்; 5 பேர் பெண்கள்.
15
பேர், பொறியியல் பட்டதாரிகள். 5 பேர், வணிகவியல் பட்டதாரிகள். 5 பேர், மருத்துவ பட்டதாரிகள்

 நன்றி: தினமலர்