பெற்றால்தான் பிள்ளையா? என்கிற கேள்வி வழக்கமாக சமூகத்தில் நிலவும் கேள்விகளோடு தொடர்புள்ள மற்றொரு கேள்வி “ பெற்றால் மட்டும் அன்னையா? அல்லது பெற்றோரா?”
நல்லதொரு மாணவர் சமூகத்தை, இன்னும் சில பத்தாண்டுகளில் சமூகத்தை தாங்கி பிடிக்க போகிற, வழிநடத்த போகிற மாணவர்களின் பெற்றோர்களாக நாம் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோமா? கதைகள் கேட்டு பழகிய நம் முந்தைய குழந்தைச் சமூகம், அதாவது இன்றைய பெற்றோர் சமூகம், இன்று தொலைக்காட்சி நெடுந்தொடர், குறுந்தொடர்களின் இறைச்சல்களுக்கு நடுவே தம் பொன்னான நேரத்தை குழந்தைகளிடம் செலவிடாமல் தொலைக்காட்சி பெட்டிகளோடு செலவிடுகிறது. தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரை நாம் சந்தித்த பொழுது மேலே சொன்ன குற்றச்சாட்டுகள் மேலோட்டமானவை அல்ல என்பதை மாணவர்களின் உரையாடல்களும் உறுதி செய்தது. தாய், தந்தையரிடமும் பொறுப்புள்ள, திறன்படைத்த இளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு குறித்து பேச ஆவலமாய் இருந்தோம். அதற்கு ஏற்றார் போல் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய-உதவி குழுவை சார்ந்த பெண்களோடு உரையாடும் வாய்ப்பும் நமக்கு கிட்டியது.
நிகழ்ச்சியை நகராட்சியின் ஆணையர் சசிகலா அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வெளிச்சம் மாணவர்கள் உறவுகள் அறுந்துபோன வீட்டுச் சூழலை மெய்யாகவே குறும் நாடகத்தில் கண்முன் நிறுத்திக் காட்டினர். குழந்தைகளின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் குழாயடியில் கொச்சையான சொற்களில் சண்டைப் போடும் பெண்கள், பிள்ளைகளை கவனியாமல் தொடர்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் பெண்கள், சுற்றத்தார்களின் தேவையற்ற வெறும் வாயை மெல்லும் குழப்ப பேச்சுக்களால் குழந்தைகள் மீது அழுத்தம் செலுத்தும் பெற்றோர்… என மெய்நிகர் நாடகத்தை மேடையில் நிகழ்த்திக் காட்டினர். நாடகத்திற்கு பின் வெளிச்சம் மாணவர் அமைப்பின் நிறுவனர் திரு.செரின் அவர்கள் பேசத் தொடங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறைவாக இருந்த மகளிர் திரள் செரின் அவர்களின் உரையாடல் நீள, நீள கூட்டம் கூடிக் கொண்டே போனது.
செரீன் அவர்கள் பெற்றோர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளை கணக்கிலெடுத்து குழந்தைகளிடம் அவர்கள் அணுக வேண்டிய முறைகளை பற்றி விரிவாக பேசினார். குழந்தைகளிடம் அதை செய்யாதே, இதை செய்யாதே என்று கண்டிப்பு காட்டும் பெற்றோர்களில் எத்தனை பேர் தன் வாழ்க்கையில் குழந்தைகள் தம்மை பின்பற்றும்படி வாழ்ந்து காட்டுகின்றனர். நாள் முழுக்க தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு குழந்தைகளை தொலைக்காட்சி பக்கம் வராமல் இருக்கச் சொல்ல பெற்றோர்களுக்கு எப்படி தகுதி வரும்? நாம் தொடர்களில் மூழ்கி கிடந்தால், குழந்தைகள் சினிமா பாடல்களில் மூழ்கித்தான் கிடப்பார்கள். குழந்தைகளுக்கு பொது அறிவு வர செய்திகள், இயற்கை சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளை, அறிவியல் செய்திகளை தாங்கி வரும் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகளை பார்த்தால்தானே நாமும் சிலவற்றை தெரிந்து கொள்ள முடியும், குழந்தைகளின் அறிவு ஊற்றுக் கண்ணும் திறக்கும்.
கணவன் மனைவி பேசிக் கொள்ளும் போதோ, குழாயடியில் பெண்களோடு சண்டை போட்டுக் கொள்ளும் போதோ, நாம் கொச்சையான சொற்களை சரளமாக பயன்படுத்திவிட்டு, குழந்தைகள் அதுபோன்ற சொற்களை பயன்படுத்தக் கூடாது என்ற எதிர்ப்பார்ப்பு எந்தளவு சரியானதாக, நேர்மையானதாக இருக்கும்.
வீட்டோடு, இல்லறத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களானாலும் சரி, பணிக்கு செல்லும் பெண்களானாலும் சரி, ‘நான் இன்று அல்லது தினமும் என் குழந்தையோடு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஒரு தோழியைப் போல, தோழனைப் போல பேசுவேன்’ என்று நினைத்திருப்பீர்கள், கண்டிப்பாக பெரும்பாலும் இருக்காது. வீட்டில் தோழமை கிடைக்காத போது, வெளியே பதின் வயது உள்ளம் தேடத்தானே செய்யும், இதில் நம் வீட்டுக்குள்ளேயே வந்து ஆபாச குப்பைகளை வேறு தொலைக்காட்சிகள் கொட்டிச் செல்கின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டாமா? தாய்மை என்றால் என்ன? தன் குழந்தைக்கு தேவையான உணவை சமைப்பதும், பரிமாறுவதும் மட்டும்தானா? தன் குழந்தைக்கு தேவையான உணர்வு ரீதியான ஆறுதல், அரவணைப்பு இரண்டையும் வழங்குவதுதானே…?
அதோடு, பெற்றோர்களாகிய நம் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதைவிட உறவினர்கள், சுற்றத்தார்கள் என்ன நினைப்பார்கள்? என்ற சிந்தனையிலேயே தம் குழந்தையின் இயல்பை மாற்றுவதோடு மட்டுமில்லாமல், தமது இயல்பையும் இழந்து நின்கின்றனர்.. அடிக்கடி நமது சமூகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், ‘அந்த நாலு பேரு என்ன நினைப்பாங்க’எந்த நாலு பேர்? எவன்/எவள் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருக்கும் நேரம் போக ஓய்வு நேரத்தில் ஊரார் வீட்டை பற்றி வம்படிப்பதை பிழைப்பாய் வைத்திருக்கின்றனரோ, எவனுக்கு உங்கள் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதால் எந்த நட்டமும் இல்லையோ, எவனுக்கு உங்கள் குழந்தை மற்றொரு நபருடன் தேவையற்ற உறவை வளர்த்துக் கொள்வதில் துளியளவு வருத்தமே இல்லையோ, எவன் உங்கள் பிள்ளையின் கல்விக்கு 50 காசளவில் உதவ முடியாதோ? அவனிடம் நமது குழந்தைகள் நற்சான்றிதழ் பெற வேண்டுமென்று மெனக்கெடும் பெற்றோரை என்ன சொல்வது. இனியாவது இன்றைய பெற்றோர்களாகிய என் சகோதர, சகோதரிகள் தத்தமது குழந்தையின் நலனை முதன்மையாக கொண்டு சிந்திக்குமாறு மிகத்தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தையின் மேற்கல்விக்கு உதவிட , குழந்தைகளின் உளவியல் சிக்கலை தவிர்த்திட மாணவர்கள் உதவி எண் 9698151515 என்ற எண்ணுக்கு நீங்களோ, குழந்தைகளோ தொடர்பு கொள்ளலாம். அதோடு, கேள்விகள் ஏதுமிருப்பின் சகோதரிகள் கேள்வி எழுப்பலாம்.” என்று செரீன் பேசி முடித்தார்.
இதன் பிறகு, தனது கருத்தை பதிவிட்ட பெண், பெண்களை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், கொஞ்சம் எங்கள் வலிகளையும் கேளுங்கள், கணவர்கள் யாரும் பெண்களை சக மனுசியாக பார்ப்பதில்லை, சம்பளமில்லா வேலைக்காரியாகவே பார்க்கின்றனர். கணவன் துணியை இடுப்பு வலிக்க துவைத்துக் கொடுத்தாலும், கொஞ்சம் கூட பரிவு காட்டுவது, துணிகளை உலர்த்துவதற்கு கூட உதவுவது கிடையாது, நாங்கள் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி கிடப்பதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது, எத்தனை கணவர்கள் எம்மை நம்பி வேலைக்கு அனுமதிக்க தயாராக இருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால், வீடே உலகமென்றிருக்கும் சூழலில் தொலைக்காட்சி பெட்டிதான் எங்களுக்கு பொழுது போக்கு கருவியாக இருக்கிறது. மாற்று உருவாக்கி தர இதே போன்று கணவர்களிடமும் பேசுங்கள்.
நாமும் கண்டிப்பாக ஆண்களிடமும் பேசுவோம், பெண்களிடமும் பேசுவோம், குழந்தைகளிடமும் பேசுவோம் உரையாடல் வழி ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வந்தோம்.
Congrats..