ஏழைகளுக்கு எட்டா தூரத்தில் மேல்படிப்பு...

Posted by Velicham Students - -


ஏழைகளுக்கு எட்டா தூரத்தில் மேல்படிப்பு...
'மார்க் இருக்கு... ஸீட் இருக்கு!' 
ஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலப் பறப்பவர் களுக்கு, அரசாங்கம் கடனும் கொடுத்து, அவர்கள் கஷ்டப்பட்டால்... வெளியுறவு அமைச்சரையே அனுப்பி ஆறுதலும் தருகிறது. ஆனால்... ஆடு மாடு மேய்க்கிற வசதியில்லாத கிராமத்துப் பிள்ளைகளுக்கோ... ஆஸ்திரேலியா என்ன... அடுத்த ஊரில் உயர்கல்வி படிப்பதுகூட அரிதாகிவிடும் போலிருக்கிறது! ஆஸ்திரே லியாவில் நிறம் மட்டும்தான் பிரச்னை. ஆனால், இங்கே பல கல்வித் தந்தைகளின் செழுமை, பெற்றோர்களின் வறுமை எனப் பல கொடுமைகள் இருக்கிறதே!
பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் எடுத்தால் என்ன? அதற்கு மேலும் எடுத்தாலென்ன? 'பலப்பல ஆயிரங்கள்'இல்லாமல் எந்த ஒரு தனியார் கல்வி நிலையத்திலும் நுழைய முடியாது! 'கல்விக்கடன்தான் இருக்கிறதே?'என்று யாராவது கேள்வி கேட்டால், ஸாரி! என்னவோ... கேட்டதுமே நமக்குக் கடன் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது போல் ஒரு தப்பான நினைப்பில் நீங்கள் இருக்கிறீர்கள்!அதே நேரம், தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சுமார் முப்பத்தைந்தாயிரம் இடங்கள் காலியாகிக் கிடப்பதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக் கின்றன.
ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்துவிட்டு எத்தனையோ பேர் பொறியியல் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்க... இத்தனை இடங்கள் காலியாகக் கிடப்பது எப்படி?
'வெளிச்சம்'அறக்கட்டளை மூலம் எந்த வசதியுமற்ற முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்விக்கு கடந்த ஐந்து வருடங்களாக உதவிதரும் அந்த அறக்கட்டளையின் நிர்வாகியான ஷெரின் கூறுகிறார்,
''எங்களிடம் இந்த வருஷம் வசதியற்ற 300 மாணவர்கள் விண்ணப்பிச்சுருக்காங்க. அவர்கள்ல பாதிப்பேர் 1,000-க்கும் மேலே மார்க் எடுத்தவங்க. மத்த எல்லாரும் 900 மார்க்கை தாண்டினவங்க. நாங்களும் பல நன்கொடையாளர்களைத் தொடர்பு கொண்டு நேரடியாக அவர்களே இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்றோம்...'' என்ற ஷெரீனிடம்...
''ஏன் இந்த நிலைமை?'' எனக் கேட்டோம்.
''பொறியியல் கலந்தாய்வுக்குப் போகிற கிராமத்தைச் சேர்ந்த படிக்காத பெற்றோர்களுக்குக் கல்விக் கட்டணம் குறித்து எந்த ஒரு விழிப்பு உணர்வும் கிடையாது. அரசு நிர்ணயித்திருக்கும் தொகை மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டு அதையும் கல்விக்கடன் வாங்கிச் செலுத்திடலாம்னு போறவங்கதான் ஜாஸ்தி. அரசு கொடுத்திருக்கும் செலானில் உள்ள தொகையையும் தாண்டி விடுதி, ஃபீஸ், புக்ஃபீஸ்னு அரை லட்சம் கூடுதலா கட்ட வேண்டுமென்பதே அவர்களுக்கு முதல் அதிர்ச்சி. அது மட்டுமில்லாம அந்தத் தொகையையும் குறிப்பிட்ட நாளைக்குள் கட்ட வேண்டுமென்பது இரண்டாவது அதிர்ச்சி. 'நாமதான் படிக்கல... புள்ளையையாவது படிக்க வச்சுடணும்'னு நகை, சொத்துனு இருக்கறதையெல்லாம் விற்று வருகிறவர்களிடம் இரண்டாயிரம், மூவாயிரம் குறைஞ்சாக்கூட மறுக்கிறாங்க. கடன் வாங்கலாம் என வங்கிகளுக்குப் போனால்... பணம் கட்டிய ஆவணங்களை எடுத்து வந்தாதான் கல்விக்கடன் தருவோம்ங்கிறாங்க. இது எப்படி ஏழைகளால் முடியும்? இந்தக் காரணத்தாலேயே போன வருடம் பல மாணவர்கள் படிப்பை நிறுத்தற நிலைமை வந்துடுச்சு. கல்விக் கட்டணத்தில் பாதித் தொகையை முதலில் கட்டிவிட்டு, பின் பாதியைக் கல்விக்கடன் வந்தவுடன் செலுத்தினால் போதுங்கிற நிலையை அரசு உருவாக்கணும்!'' என அவர் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நம்மை சந்தித்தார் மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணா.
''நான் 1,004 மார்க் எடுத்ததனால அழகர் கோயில்ல இருக்கற 'எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரியில'ஸீட் கிடைச்சுருக் குங்க. எல்லா ஃபீஸையும் சேர்த்து நாற்பத்துரெண்டாயிரம் வருது. அதையும் பத்தாம் தேதிக்குள்ள [10.8.09] கட்டணும்னு சொல்லிட்டாங்க. ஸ்வீட் ஸ்டால்ல வேலை பார்க்கிற எங்கப்பாவுக்கு இப்பத்தான் கண் ஆபரேஷன் பண்ணினோம். அவரால அவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியல. வங்கியில கல்விக் கடன் வாங்கலாம்னு போனா, கல்லூரியிலிருந்து போனஃபைட் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வந்தாதான் விண்ணப்பமே தருவாங்களாம். அதாவது எல்லாக் கட்டணத்தையும் செலுத்திமுடித்த பின், கல்லூரி தரும் சர்டிஃபிகேட் அது. கல்லூரியில மொத்தத் தொகையையும் கட்டுற வசதி இருந்தா... நான் ஏங்க கடன் வாங்கப் போறேன்?'' என்று ஆயிரம் மதிப்பெண் எடுத்த ஆற்றல் இருந்தும் ஆற்றாமையுடன் பேசுகிறார் ராஜேஷ்கண்ணா.
இதே போல் ஆயிரம் இருந்தும்... ஆயிரங்கள் இல்லாததால் உயர்கல்வியை உயரத்தில் பார்க்கும் நிலைக்கு ஆளாகிப் போன சில மாணவர்களோடு பேசினோம்.
திமிர்ந்த ஞானம் மரியமதனாவுக்கு! ப்ளஸ்-டூவில் 1,082 மதிப்பெண்கள் எடுத்தவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்.
''175.75 கட் ஆஃப் வாங்கி இன்ஜினீயரிங் கவுன்சிலிங்கில 'ஆசான் மெமோரியல் காலேஜ்'ல ஸீட் கிடைச்சது. இந்த தேதிக்குள்ள 90,000 ரூபாய் கட்டணும்னு சொல்லிட்டாங்க. எங்க குடும்பச் சூழ்நிலையில அவ்ளோ பணத்தை திடீர்னு கட்ட முடியலை. இன்ஜினீயரிங் ஸீட்தான் கிடைக்குமேங்குற தைரியத்துல... ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ்லயும் எந்த அப்ளிகேஷனும் வாங்கல. அதனால, இப்ப அதுலயும் சேர முடியாம போச்சுங்க...'' என்று முடித்த மரியமதனாவின் வறுமையை அவருடைய கண்ணீரே காட்டிக் கொடுத்தது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேலுவோ, ''திருநாவுக்கரசு என்னோட மைத்துனர் பையன். ப்ளஸ்-டூ-வுல 997 எடுத்துருக்கான். எப்படியாவது அவனுக்கு ஸீட் கிடைச்ச 'தனலெஷ்மி ஸ்ரீனிவாசன் பொறியியல்'கல்லூரியிலேயே சேர்த்துடணும்னு, இருந்த அரை காணி நிலத்தையும் ஈடு கொடுத்து சேர்த்துட்டோம். ஆனா, ஹாஸ்டலுக்கு கட்டவேண்டிய 30,000 எங்ககிட்ட இல்லங்க. அதனால இப்ப படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுருக்குங்க...'' என்கிறார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வடகண்டத்தைச் சேர்ந்தவர் விவசாயியான கே.கோபிராஜ். தன் மகள் அருணாவுக்கு பெரம்பூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும்... பத்து நாட்களுக்குள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக் கிறார்.
''எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் அரசே பொறியியல் கல்லூரிகளுக்கு கட்ட வேண்டிய தொகையையும், தேதியையும் ஒரு செலான்ல எல்லா மாணவர்களுக்கும் போட்டுக் கொடுத்துருக்காங்க. கிட்டத்தட்ட 40,000 ரூபாய் கல்விக் கட்டணம், அப்புறம் விடுதிக்கு ஒரு 30,000 மற்ற ஃபீஸ் ஒரு 20,000 எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் வந்துடுது. என்னைப் போல ஏழை விவசாயிகளுக்கெல்லாம் இது ரொம்பப் பெரிய தொகைங்க. கல்விக்கடன் கேட்டு வங்கிக்குப் போனா, அட்மிஷன் போட்டதுக்கு அப்புறம்தான் லோன் அப்ளிகேஷனே தருவாங்களாம். அந்த அப்ளிகேஷன் கொடுக்கறதுக்கே ஆயிரத்தெட்டு கேள்வி வேற. இந்த மாதிரி நிலைமை இருக்கறதுனால... அறக்கட்டளைகளையும், தொண்டு நிறுவனங்களையும் தேடிப் போகிற நிலைமை வருது. அதுக்குக்கூட கால அவகாசமும் கிடையாது. இப்படியே போனா, எங்கள மாதிரி ஏழை விவசாயிங்களோட பிள்ளைங்களோட உயர் கல்விங்கறது கேள்விக்குறிதாங்க!'' என்று முடித்தார்.
திருச்சி உடையார்பாளையத்தில் வசிக்கும் உமாவின் நிலையும் இதுதான். ப்ளஸ்-டூ-வில் 975 மதிப்பெண் எடுத்தி ருக்கும் உமாவின் அம்மா இந்திரா நம்மிடம், ''உமா என் இரண்டாவது பொண்ணுங்க. அவரு போனதுக்கப்புறம் களைவெட்டித்தான் என் புள்ளைங்கள வளர்க்குறேன். 'தனலெஷ்மி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி'யில இடம்
கிடைச்சது. ஆனா, ரொம்ப செலவாகும்,
தூரமாகவும் இருக்குன்னுட்டு திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில சேர முடிவு செஞ்சா. இங்கேயும் 90 ஆயிரம் ஆகுது. எப்படி கட்டப் போறேன்னு எனக்கே தெரியல. நானும் அவளும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கோம்...'' என்றார் கம்மிய குரலுடன்.
வெளிச்சம் அறக்கட்டளை மூலம் தங்கள் இருட்டை நம்மிடம் பகிர்ந்துகொண்டவர்கள் ஒரு சிலர்தான். இன்னும் நூற்றுக்கணக்கானோர் இவர்களைப் போல், உயர்கல்வியை எட்டிப் பிடிக்க முடியாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
சமூக ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் ஏழை மாணவர்களின் மீது இருக்கும் அக்கறையைப் பார்த்தாவது அரசே உயர்கல்வியினை ஏற்று நடத்தினால் தான் இதற்கு ஒரு முடிவு வரும்!

'பிச்சைபுகினும் கற்கை நன்றே!'என்று மன்னராட்சியில் இருந்திருக்கலாம். ஆனால், மக்களாட்சியில் உதவி கேட்டுப் படிப்பதை விடவும், உரிமையாகக் கேட்டு பெறும் சூழலை உருவாக்கித் தருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமை!
- செ.மனோ 

படங்கள்: செ.தன்யராஜு, தமிழ்க்குமரன், மாரியப்பன்

ஏழை மாணவர்களின் கல்வி குறித்த ஆய்வினை வெளியிட்ட ஜூனியர் விகடன் கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...
படிச்சி பாருங்க:
நாளு பேருக்கு நல்லது செய்ய இணைவோம்..

Leave a Reply