அடகு வைக்கப்படும் முதுகலை பட்டம்!

Posted by Velicham Students - -


velicham Students

‘தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், முதுகலைப் பட்டப்படிப்பு படித்தவர்களை மட்டுமே ஆசிரிய பணிக்கு நியமிக்க வேண்டும்’ என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், பல தனியார் பொறியியல் கல்லூரிகள், பிறவிச் செவிடனைப் போல, பிறவிக் குருடனைப் போல, இவ்விஷயத்தில் நடந்து கொள்கின்றன. நர்சிங் ஹோம்களில், விசிட்டிங் மருத்துவர்களாக சிலரை ஒப்பந்தம் செய்து இருப்பர். நோய்க்கு தக்கபடி, நோயாளி எண்ணிக்கைக்கு தக்கபடி அவர்களுக்கு சன்மானம் வழங்குவர்.

பல தனியார் பொறியியல் கல்லூரிகள், முதுகலைப் பட்டம் படித்த பொறியியல் வல்லுனர்களை நிரந்தர பணி நியமனம் செய்யாமல், அனுமதி பெறுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு முதுகலை பொறியியல் பட்டம் படித்த நபர், தன் பட்டத்தை பல கல்லூரிகளுக்கு வாடகைக்கு விட்டு, உழைக்காமலே சம்பாதிக்கும் நிலை உள்ளது.

பார்மசி பட்டம் பெற்றவர்கள், தங்கள் கல்விச் சான்றிதழை பெருந்தனக்காரர்களிடம் அடமானம் வைத்து விடுவதால், பல தரமற்ற மருந்துக் கடைகள் நாட்டில் உள்ளன.
அதைப் போல, முதுகலை பொறியியல் படிப்பு படித்தவர்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் சான்றிதழை மட்டும் அடமானத்துக்கு தந்து விடுவதால், பொறியியல் கல்வித் தரமற்று போய் விட்டன.

‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்’ என்பது போல, பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் உள்ளது. அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் முன் அறிவிப்பு ஏதும் இன்றி, திடீர் விஜயங்களை தனியார் கல்லூரிகளுக்கு செய்தால், உண்மையான ஆசிரியர் நிலவரம் புரிய வரும்.

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் அறிவுரைகளை செவிமடுப்பதே இல்லை என்பது தெரிய வரும். ஏ.ஐ.சி.இ.டி.,யை, ஒரு துரும்புக்கு ஈடாகக் கூட மதிப்பதில்லை என்பது தெரிய வரும். ஈயம் பூசப்படாத பித்தளை பாத்திரங்களில் செய்த சமையல், நஞ்சாகிப் போகும்; முதுகலைப் பட்டம் பெற்றவர்களால் நிரப்பப்படாத தனியார் கல்லூரிகளில் கல்வியும் பாஷாணமாகிப் போகும்.

வெறும் அறிக்கையோடு, ஏ.ஐ.சி.இ.டி., யை நிறுத்தாமல், நடவடிக்கை அளவிலும் கடுமையாக களம் இறங்க வேண்டும்.
-பா.ப்ரியன், காஞ்சிபுரம் 
கல்வி மலர் தினமலர்.கம். வாசகர்

Leave a Reply