விழிகள் இல்லை என்றாலும் வழிகள் உண்டு..

Posted by Velicham Students - -


கீ செயின், கேப், டாய்ஸ்... இடைவிடாமல் காதுகளைத் துரத்தியது குரலொன்று. கோவையில் ஒரு கண்காட்சி வளாகத்தின், வெளியேறும் வாயில் அருகே, கறுப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி சகிதம் அக்குரலுக்குச் சொந்தக்காரர் நின்றிருந்தார். முதல்பார்வையிலேயே விழியிழந்தவர் என்பது தெரிகிறது. சூனியம் வெறிக்கும் கண்களுடன், வெயிலைப் பொருட்படுத்தாது, அவரும் இன்னொரு சகாவும் கழுத்தில் கயிறு கோர்த்து தொங்க விட்ட அட்டையில் சிறுசிறு பொருட்களை வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்தனர்.


கடந்து சென்றவர்களில் பெரும்பான்மையினர், சில வினாடிகள் கூட அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. அவ்வப்போது குழந்தைகள் மட்டும், அருகில் சென்று பொம்மைகளைத் தொட்டுப்பார்த்தபடி சென்றன. ஒரு பெண் குழந்தை "அங்கிள், எனக்கு ஒண்ணு தாங்க' என்று கேட்டு வாங்கிச் சென்று, தன் தாயிடம், "ச்சே பாவம் அந்த அங்கிள்' என பரிதாபம் காட்டியது. குழந்தையின் குரல் கேட்ட திசையில் காதுகளைத் திருப்பியவர் லேசாகப் புன்னகைத்தார். உடனே முகபாவம் மாற்றி, கீசெயின், கேப், டாய்ஸ் என, மீண்டும் குரல் கொடுக்கத் துவங்கினார்.


நெருங்கிச் சென்று அவரிடம் விசாரித்த போது, ""உடுமலை அருகே துங்காவி சொந்த ஊர். தமிழில் எம்.ஏ.,- பி.எட்., முடித்திருக்கிறேன்,'' என்றார். சற்றே நிழலில் நின்று பேசலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆனால், அவரோ வெயிலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.


""விழியிழந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் கொஞ்சம்தான் அதிகரித்திருக்கிறது. சாலையோரத்தில் நின்றிருந்தால், 10 சதவீதத்தினர்தான் உதவி வேண்டுமா என விசாரிக்கின்றனர். கடந்து செல்லும் காலடி ஓசைகள், சில சமயம் நெருங்கி வருவதே இல்லை. இளைய சமுதாயம் பரவாயில்லை; சாலையைக் கடப்பதில் இருந்து, முழுமையாக விசாரித்து தேவையை நிறைவு செய்கின்றனர்.


""கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.பில்., பட்டத்துக்காக, ஜெயமோகனின் "அனல்காற்று' புதினத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். கூலி வேலை செய்யும் குடும்பம் என்பதால், பெற்றோரிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை.


""இங்கு ஒரு நண்பர் வழிகாட்டுகிறார். அவர் பொருட்களை வாங்கிக் கொடுக்க, அதை விற்று கிடைக்கும் லாபத்தில் படித்து வருகிறேன். நிச்சயம் பிஎச்.டி., முடிப்பேன். பார்வையற்றவன் என்பதால், பி.எட்., முடித்திருந்தும் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை. பரிதாபம் காட்டி வேலை தரவேண்டாம்; தகுதியைப் பரிசோதித்து தரக்கூட யாரும் முன்வரவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது.


""எங்களாலும் எல்லாம் முடியும், வாய்ப்புக் கொடுத்துப்பாருங்கள். எல்லாவற்றுக்கும் "பிரெய்லி' புத்தகங்கள் இல்லை. அதனால், "ஆடியோ'வில் கேட்டு படித்து வருகிறேன். இப்போது வெயிலைப் பொருட்படுத்தாமல் வேலைபார்ப்பது கூட, ஒரு "டிவிடி' பிளேயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அது இருந்தால் படிக்க வசதியாக இருக்கும்,'' என்றார்.


"பிச்சை புகினும் கற்கை நன்றே' என செவிட்டில் அறைகிறது, சங்கப்புலவர் அதிவீரராமபாண்டியனின் வரிகள். இவரோ, அதையும் புறம்தள்ளி, சுயத்தை நழுவவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். "வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள்' என்ற அவரின் வார்த்தைகள் சமூகத்தின் காதுகளுக்கு விழுமா?நல்ல உள்ளங்கள் 9865748423 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 நன்றி: தினமலர்

Leave a Reply