பி.இ. இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் திண்டாடும் மாணவர்கள் -தினமணி வெளியீடு

Posted by Velicham Students - -
பி.இ. இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் திண்டாடும் மாணவர்கள்


வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.ஷெரின் (இடமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) மாணவிகள் அனுசுயா, விஜயலட்சுமி, மாணவர்கள் ராஜகோபால், ராஜா.


சென்னை, ஜூலை 21: பொறியியல் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திண்டாடி வருகின்றனர்.
 கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கட்டணமாக ரூ.32,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு கட்டணம் ரூ.40,000.
 இதில் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கல்விக் கட்டணத்தைக் (டியூஷன் ஃபீஸ்) கழித்துவிட்டு, மீதித் தொகையை இவர்கள் செலுத்தவேண்டும். அதுவும் கலந்தாய்வில் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்ற 10 முதல் 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.
 அரசு பொறியியல் கல்லூரியில் கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், பாடத் திட்ட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டணமாக ரூ.10,820 வசூலிக்கப்படுகிறது. தங்கும் விடுதி சேர்க்கைக் கட்டணம், மின் கட்டணம், குடிநீர், உணவுவிடுதி கட்டணம், பராமரிப்புக் கட்டணம் என கூடுதலாக ரூ.8,450 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர தங்கும் விடுதி மாதக் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 செலுத்த வேண்டும்.
 இதன்படி, அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. சேருகிற மாணவர் ரூ.20,770 கட்டணம் செலுத்த வேண்டும். முதல் தலைமுறை மாணவராக இருந்தால் கல்விக் கட்டணமான ரூ.2 ஆயிரத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள ரூ.18,770-ஐ செலுத்த வேண்டும்.
 இந்தக் கட்டணம் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் மாறுபடுகிறது.
 சுயநிதிக் கல்லூரிகளில்...: இது ஒருபுறமிருக்க சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடத்தில் சேரும் மாணவர்கள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைப்போல் பல மடங்கு கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கல்விக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், நூலகம், இணைய தள வசதி, தங்கும் விடுதி, விடுதி வாடகை என அரசு ஒதுக்கீட்டிலான இடத்தில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1,48,000 என நிர்ணயித்துள்ளது.
 இதில் முதல் தலைமுறை மாணவராக இருந்தால் கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தைக் கழித்துவிட்டு ரூ.1,28,000 செலுத்த வேண்டும்.
 இந்த முதலாம் ஆண்டு கட்டணத்தை கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்ற 10 முதல் 20 நாள்களுக்கு கட்ட வேண்டும் என்பது நிபந்தனை. இந்த குறுகிய நாள்களுக்குள் இவ்வளவு தொகையை செலுத்த முடியாமல் ஏழை மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 கட்டணத்தை செலுத்திய பிறகுதான் கல்லூரி அத்தாட்சி சான்றிதழ் (போனஃபைடு) கிடைக்கும் என்பதால், கல்விக் கடனுக்கும் விண்ணப்பிக்க இயலாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 2011-12 கல்வியாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்கான முயற்சியை "வெளிச்சம்' என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல மாணவர்களுக்கு கலந்தாய்வின்போது செலுத்த வேண்டிய முன் தொகையை இந்த அமைப்பு அளித்துள்ளது.
 முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தையே உத்தரவாதமாக எடுத்துக்கொண்டு, கல்விக் கடனை மாணவர்கள் உடனடியாகப் பெறும் வகையில் அத்தாட்சி சான்றிதழை உடனடியாக சுயநிதிக் கல்லூரிகள் வழங்க அரசு வழி செய்யவேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கை.

 இதுகுறித்து சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மாணவர் ராஜகோபால் கூறியதாவது:
 முதல் தலைமுறை பட்டதாரி மாணவரான நான் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1,075 மதிப்பெண் பெற்றேன். பி.இ. கலந்தாய்வில் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்லூரியில் வரும் 29-ம் தேதிக்குள் முதலாம் ஆண்டு கட்டணத்தை கட்டச் சொல்கின்றனர்.
 அத்தாட்சி சான்றிதழ் இல்லாததால் கல்விக் கடனுக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை. அவ்வாறு விண்ணப்பித்தாலும் பல மாதங்களுக்குப் பிறகுதான் வங்கிக் கடன் கிடைக்கும்.
 உரிய கால அவகாசத்துக்குள் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால், எனக்கு கிடைத்த இடம் வேறு நபருக்கு கொடுக்கப்பட்டு விடும். இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார்.
 இவரைப்போல் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,160 மதிப்பெண் பெற்ற வீ.விஜயலட்சுமி (திருச்சி), 1,151 மதிப்பெண் பெற்ற நாகமாணிக்கம் (திருப்பூர்), 1135 மதிப்பெண் பெற்ற எல்.சி.பரணிகுமார், நரேந்திரன் (ஈரோடு), அர்ஜுன் (கோவை), நந்தினி (சேலம்) கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவற்றை வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.ஷெரின் விவரித்தார்.

  நன்றி: தினமணி

Leave a Reply