இன்னும் தொடரும் கொடுமை..தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கனவாகும் பொறியியல் கல்வி..

Posted by Velicham Students - -


பொறியியல் படிக்க கொள்ளை ஆசையுடன் விண்ணப்பித்தபோதும், படிப்பிற்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களின் பொறியியல் படிப்பு, எட்டாக்கனியாக மாறியுள்ளது. எஸ்.சி., பிரிவில், 18 ஆயிரம் பேர், எஸ்.டி., பிரிவில், 481 பேர் விண்ணப்பித்த போதும், கவுன்சிலிங், 50 சதவீதம் நிறைவடையும் நிலையில், இதுவரை, எஸ்.சி., பிரிவில், 271 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், வெறும் இரண்டு மாணவர்களும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 22 மாணவர்களும் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில், இதுவரை இந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களைப்போல், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக அடி மட்டத்தில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் இருக்கிறது. பொறியியல் படிப்பதற்கு அதிகளவில் இந்த பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதன் மூலம், அதை உணர முடிகிறது. இந்த ஆண்டு எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 2,106 மாணவர்கள், எஸ்.சி., பிரிவில், 17 ஆயிரத்து, 928 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், 481 மாணவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 30ம் தேதி முதல், அண்ணா பல்கலையில் நடந்து வரும் கவுன்சிலிங்கில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், கவுன்சிலிங்கில் பங்கேற்று, "சீட்' பெற்று வருகின்றனர்.

50
சதவீத கவுன்சிலிங் விரைவில் முடிய உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்துவிடும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 12ம் தேதி வரை, 11 ஆயிரத்து 10 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஓ.சி.,- 5,397 பி.சி., முஸ்லிம்- 277, பி.சி.,- 3,354, எம்.பி.சி.,-1,657, எஸ்.சி., அருந்ததியர்-22, எஸ்.சி.,- 271, எஸ்.டி.,-2, முற்பட்ட வகுப்பினர்-30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மற்ற பிரிவினரை விட, எஸ்.சி.,-எஸ்.சி., அருந்ததியர் மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் மிகக் குறைந்த அளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை, 2 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிக்க, இந்த பிரிவு மாணவர்கள் ஆர்வமாக உள்ளபோதும், வறுமை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில், இந்த பிரிவு மாணவர்கள் உள்ளனர். இதனால், இந்த பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு, கானல் நீராகவே உள்ளது.

முதல்வர் மனது வைத்தால்... :


 கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 6 கோடியே, 24 லட்சத்து, 5,679ஆக உள்ளது. இதில், எஸ்.சி., சமுதாயத்தின் மக்கள் தொகை, 19 சதவீதமாகவும் (1,18,57,079), எஸ்.டி., சமுதாய மக்கள் தொகை, 1.04 சதவீதமாகவும் (8,73,679) உள்ளது.

இந்த சமுதாய மக்கள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, தமிழக அரசு காலம், காலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எனினும், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாதவர்களாகவே உள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் சொற்ப மாணவர்களும், வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு நனவாவதற்கு, முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நடக்கும் என்று, இந்த சமுதாய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 நன்றி: தினமலர்

Summary: it's only  a dream for sc students to pursue higher education

Leave a Reply