பி.எட் படித்தால் எதிர்காலமுண்டா?

Posted by Velicham Students - -

'''இன்ஜினீயரிங் படிப்புக்கு எதிர்காலம் கிடையாதா?' என்றெல்லாம் அக்கறையாக ஆராய்ச்சி செய்பவர்கள், என் போன்ற பி.எட் மாணவிகளின் கண்ணீரையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்..''
- தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து ஒரு கிராமத்து மாணவி நமக்கு எழுதியிருந்த கடிதம் இது. கடிதம் படித் ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நெஞ்சை உருக்கி யது அந்த ஏழைப் பெண்ணின் பேச்சு.
''எங்க ஊருலயே நான்தானுங்க நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா, இன்ஜினீயரிங் மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிற நிலைமையில எங்க வீடு இல்லைங்க. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான். பி.எட் படிச்சு டீச்சரானா போதும்னு நான் ப்ளஸ் டூ படிக்கும்போதே அம்மா முடிவெடுத்துட்டாங்க. நானும் டீச்சர் ஆகி, அம்மாவை சந்தோஷப்படுத்தணும்னு உறுதி எடுத்துக்கிட்டு பி.எஸ்சி படிச்சேன். பி.எட் ஸீட்டுக்காக ஒரு காலேஜ்ல 70 ஆயிரம் கேட்டாங்க. எங்க அம்மாவும் டீச்சர் வேலை கிடைச்சுடும்ங்கிற நம்பிக்கையில கொஞ்ச நஞ்சம் இருந்த நகைகளை வித்து பணத்தைக் கட்டினாங்க.
இப்போ, கிளாசுக்குள்ள நுழைஞ்ச பிறகுதான் எனக்கு உலகமே தெரியுது.. தமிழ்நாடு முழுக்க நூத்துக்கணக்குல தனியார் பி.எட் காலேஜுங்க இருக்காம். அதுல இருந்து வருஷத்துக்கு கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேரு வெளிய வருவாங்களாம். அவங்கள்ல அஞ்சு சதவிகிதம் பேருக்குக் கூட கவர்மென்ட்டால வேலை கொடுக்க முடியாதாம். சரி, கவர்மென்ட் உத்தியோகம் வேண்டாம்.. தனியார் ஸ்கூல்லயே டீச்சரா போகலாம்னா, அங்கல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல தர்றதில்லையாம். இதுக்காகவா நான் நாலு வருஷம் காத்துட்டிருந்தேன்? இதுக்காகவா எங்க அம்மா தாலியை வித்தாங்க?'' - அந்தப் பெண் பேசப் பேச, நமக்குள் என்னவோ செய்தது.
பி.எட் காலேஜ் பற்றி அந்தப் பெண் சொல்வது உண்மையா? - சில அனுபவசாலிகளிடம் விசாரித்தோம்.
''எல்லாமே உண்மைதாங்க..'' என்று ஆரம்பித்தார், சென்னையைச் சேர்ந்த பி.எட் மாணவி ஒருவர். இவர் ஏற்கெனவே தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான 'டீச்சர் டிரெய்னிங்' படிப்பை முடித்துவிட்டு, அதில் பலன் ஏதும் இல்லாததால் டிகிரியையும் முடித்து, தற்போது பி.எட் படித்துக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''நான் நிறையவே அனுபவப்பட்டுட்டேங்க.. முன்னேயெல்லாம் அரசுக் கல்லூரிகள்லயும் அரசு உதவி பெறுற கல்லூரிகள்லயும்தான் பி.எட் இருக்கும். தமிழ்நாடு முழுக்க மொத்தமே 1,000 ஸீட்தான் இருக்கும். அதுல ஒருத்தரா செலக்ட் ஆகுறது பெரிய விஷயமா இருந்தது. ஆனா, ஸீட் கிடைச்சுப் படிச்சுட்டா, ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கண்டிப்பா வேலை கிடைச்சுடும்னு ஒரு நிச்சயம் இருந்துச்சு. 'பொண்ணை பி.எட் மட்டும் படிக்க வச்சுடுங்க.. நகை, பணமெல்லாம் கூட வேண்டாம்'னு அப்போ சம்பந்தமே பேசுவாங்கன்னா பார்த்துக்கங்களேன்..
ஒரு பி.எட் ஸீட்டுக்கு எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லைனு சில பேர் குறுக்கு வழியில ஸீட் வாங்குற கூத்தும் அப்போ நடந்தது. ஆனா, 2003-ம் வருஷத்துக்கு அப்புறம் யாரு வேணும்னாலும் பி.எட் காலேஜ் ஆரம்பிச்சுக்கலாம்னு ஆயிடுச்சு. அவ்வளவுதான்.. 'லட்சக்கணக்குல தர வேண்டாம். அறுபதாயிரம், எழுவதாயிரம் தந்தா போதும். நாங்க உனக்கு பி.எட் டிகிரியைத் தர்றோம்'னு தனியார் காலேஜ்காரங்க வியாபாரம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
சரி, இப்படி தனியார்கிட்ட வாங்குற டிகிரிக்கும் கவர்மென்ட் டிகிரிக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா, ஒண்ணுமேயில்ல.. வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சு வச்ச சீனியாரிட்டி அடிப்படையிலதான் வேலை கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லிடுச்சு. முன்னே ஒரு வருஷத்துக்கு 1000 பி.எட் மாணவர்கள் படிப்பை முடிச்சுட்டு வெளிய வந்தாங்கன்னா, இப்போ கிட்டத்தட்ட அறுபதாயிரம் மாணவர்கள் வர்றாங்க. ஆனா, அரசாங்க வேலை என்னவோ வருஷத்துக்கு 3,000 பேருக்குக் கூட கிடைக்கிறதில்ல..
பெரும்பாலும் பொண்ணுங்கதான் பி.எட்-ஐ விரும்பிப் படிக்கிறாங்க. அதனால இதுல அதிகம் பாதிக்கப்படுறதும் அவங்கதான். எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்கா2004-ம் வருஷம் பி.எட் முடிச்சாங்க. இப்ப வரைக்கும் அவங்களுக்கு வேலை கிடைக்கலை. அவங்களுக்கு அப்புறம் நூத்துக்கணக்கான தனியார் காலேஜ்ல பி.எட் முடிச்சவங்களே கிட்டத்தட்ட மூணு லட்சம் பேர் இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சு, எனக்கு எப்போ வேலை கிடைக்கும் நினைச்சாலே தலையை சுத்துது. வேலை கிடைக்காதுங்கறது கூட பெரிய விஷயமா தெரியல.. இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை'' என்று காட்டமாகவே பேசி முடித்தார் அவர்.
தனியார் கல்லூரிகள் பற்றிப் பேசினாலே கொதித்துப் போகிறார்கள் முன்னாள் மற்றும் இன்னாள் பி.எட் மாணவ- மாணவிகள். ஆனால், பெயரையோ புகைப்படத்தையோ வெளியிட யாருமே முன்வரவில்லை. அந்த அளவுக்குப் பெரிய இடத்துப் பொல்லாப்பு இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு பி.எட் பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பாஸ்கரனிடம் இதைப் பற்றி விவாதித்தோம். ''கடந்த நாலு வருஷமா நிறைய தனியார் நிறுவனங்கள் இந்த பி.எட் 'பிஸினசு'க்குள்ள வந்துடுச்சு. இன்ஜினீயரிங் மாதிரி பி.எட்-ம் வேலை கொடுக்கும்னு அவங்க விளம்பரம் பண்றாங்க. அதையெல்லாம் மக்கள் நம்பக் கூடாது. ஏற்கெனவே லட்சக்கணக்கான பி.எட் பட்டதாரிகள் க்யூவுல நிக்கிறாங்க. இதுல அரசாங்கப் பள்ளிகள்ல 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்ங்கற விகிதாசாரம் மாறி, இப்போ 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போதும்னு முடிவெடுத்துட்டாங்க. இந்த உண்மைகளை மக்கள் புரிஞ்சுக்கணும்'' என்றார்.
''சரி, இத்தனை பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?'' தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடமே கேட்டோம்.. ''கல்லூரிகளுக்கு அனுமதியை தமிழக அரசு மட்டுமே கொடுப்பதில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ)தான் அனுமதி கொடுக்கிறது. தமிழக அரசு மட்டுமே அதைத் தடுத்து நிறுத்தி விட முடியாது'' என்றார் அவர்.
பெங்களூருவில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் மட்டுமே வெகு ஜாக்கிரதையாகப் பேசினர்.. ''ஏற்கெனவே புதுவை, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா, அரியானா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டதால் நெருக்கடி முற்றி, பிரதமர் வரை புகார்கள் பறந்து விட்டன. அதனால், அந்த ஏழு மாநிலங்களில் இனி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலே அறிவித்திருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் அந்த நெருக்கடி ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை'' என்றார்கள் அவர்கள்.
இதற்கெல்லாம் தனியார் கல்லூரிகள் என்ன பதில் சொல்கின்றன என்பதை அறிய செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ரங்கபூபதி பி.எட். கல்லூரி சேர்மன், பூபதியிடம் பேசினோம்.. ''முறைகேடுகள் கல்லூரிகளில் மட்டுமல்ல.. சமூகத்தில் எல்லா தளத்திலும் நடக்கிறது. அதைப் பற்றி என்னிடம் கருத்து ஏதுமில்லை'' என்றவர், தொடர்ந்தார்..
''பி.எட் கல்லூரி நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், பி.எட் படித்தவர்கள் தமிழக அரசு வேலையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை.. அவர்கள் டுடோரியல் கல்லூரி நடத்தலாம், டியூஷன் எடுக்கலாம், வெளி மாநிலத்திலும் வெளி நாட்டிலும் ஆசிரியர்களாக வேலை பார்க்கலாம்.. அதனால் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது தவறில்லை' என்றுதான் சொல்லப்பட்டது. எனவே, பி.எட். பயின்றாலே, ஆசிரியராக அதிலும் அரசுப் பள்ளிகளில்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் சில தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளே திறமையான பி.எட் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன'' என்றார்.
பி.எட் முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் ஜெயந்தியிடம் இதைச் சொன்னபோது விரக்தியான புன்னகைதான் முதல் பதிலாக வந்தது. ''தனியார் கல்வி நிறுவனங்கள்ல இன்னிக்கு என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? வெளிய ஆயிரக்கணக்கான பேர் அதே வேலைக்காகக் காத்திருக்கும்போது, ரொம்ப குறைவான சம்பளத்தைத்தான் தனியார் எல்லாரும் தருவாங்க. நாம அதுக்கு சம்மதிக்கலைன்னா, வேற ஒருத்தவங்க அங்கே வர ரெடியா இருப்பாங்க. டியூஷன் எடுக்குறதெல்லாம் நிலையான வருமானமா? டுடோரியல் நடத்த யார் லோன் தருவா? இந்த பிராக்டிகல் கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்!'' என்று பெருமூச்சோடு முடித்தார் அவர்.
சென்னை மாணவி சொன்ன அந்த முத்தான வாக்கியங்கள்தான் மீண்டும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டன.. ''இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை!''


ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர், சேலம்:
''பி.எட் படிக்கிறவர்கள் எந்த சப்ஜெக்ட் படிக்கிறார்கள் என்பதிலும் விஷயம் இருக்கிறது. தற்போதைய நிலையில், ஆங்கில இலக்கியம், கணக்கு மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு எதிர்காலம் நன்றாகவே உள்ளது. எனவே, மாணவ மாணவிகள் டிகிரி படிக்கும் போதே பி.எட்-க்கான தேவை என்ன என்பதை அறிந்து பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்''
பேராசிரியர் ஆரோக்கிய சாமி, முதல்வர், ஞானமணிகல்வியியல் கல்லூரி, ராசிபுரம்:
''வெளி நாடுகளில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இருக்கிறது. ஆனால், இங்கே 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். அது மாற்றப்பட்டால் வேலை இல்லை என்ற பிரச்னை ஓரளவு தீரும்.''


நன்றி: அவள் விகடன்

Leave a Reply