தமிழகத்தைச் சேர்ந்த 127 ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி

Posted by Velicham Students - -வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 9:43[IST]


சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர்.

தமிழகத்தைச் சேர்ந்த லலிதா 12வது ரேங்க்கும், கனகவல்லி 15வது ரேங்க்கும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மத்திய அரசுத் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நேர்காணல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர். இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேசிய அளவில் 15வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர்.
சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். இதில் 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் 12வது ரேங்க் பெற்றுள்ள லலிதாவும் இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். இவரது தந்தை ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. தாயார் தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.

மேலும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் படித்த 50 பேரும், பி.எல்.ராஜ் மெமோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாடெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்ட்ரேட்டஜி அகாடெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply