உங்கள் குழந்தைகள் பத்திரம்- குழந்தைகள் சீரழிக்கப்படுவது குறித்து வெளியான ஆனந்தவிகடன் கட்டுரை

Posted by Unknown - -


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 77 வயது சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், மூன்று சிறுமிகளுக்கு ஆபாசப் படத்தை டி.வி-யில் போட்டுக் காட்டி, பிறகு பாலியல் பலாத்காரம் செய்தார் சோமசுந்தரம்.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவனான பரத்ராஜ் செய்த சின்ன தவறுக்காக அந்த மாணவனை மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து சிறுநீரைக் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள்!

கோவை பள்ளி ஒன்றில் இரட்டைச் சடை போடாமல் பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் வகுப்புமாணவியின் தலைமுடியை வெட்டிவிட்டு, முட்டி போடச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை.

தி.மு.க-வின் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் கொத்தடிமையாக இருந்தவர் சிறுமி சத்யா. ஆறு மாதங்களுக்கு முன் பூப்பெய்திய சத்யா தொடர் வல்லுறவு காரணமாக எட்டு நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்து வலியும் வேதனையும் மிகுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற சத்யாவின் உடலில் இருந்த விந்தணுக்களை அகற்றி காயங்களை மறைக்கச் சில மருத்துவர்கள் முயன்றிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் பத்திரிகைகளில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செய்திகள் இவை!

இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள்தான். அதாவது சுமார் 44 கோடி குழந்தைகள் இருக்கிறார் கள். குழந்தைகள் தினம் கொண்டாடும் தேசத்தில், இன்று மிக மோசமாக சிதைக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்!

இந்தியாவில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளில் முக்கியமானவை... வகுப்பறை வன்முறை, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் வன்முறை, குழந்தைகளைக் கடத்திக் குற்றவாளிகளாக் கும் வன்முறை.


வகுப்பறை வன்முறைகள்
வலி உண்டாக்கக் கூடிய அல்லது காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் குழந் தைகளிடம் பேசுவதும் தண்டிப்பதும் வகுப்பறை வன்முறைதான். வகுப்பறைக்கு உள்ளேயோ, வெளியேயோ தனி நபராகவோ அல்லது சில பேர் இணைந்தோ உடல்,மன ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துவது தான் பல பள்ளிகளில் நடக்கிறது. ''கல்வி உரிமைச் சட்டப்படி வகுப்பறையில் எந்தக் குழந்தையையும் முட்டாள், மக்கு என்றெல்லாம் திட்டக் கூடாது. அப்பா, அம்மாவின் தொழில்குறித்து இழிவாகப் பேசக் கூடாது. சான்றிதழ்களில் மட்டுமே சாதி குறிப்பிடப்பட வேண்டும். வகுப்புஅறையில் எந்த மாணவனிடமும் 'நீ என்ன சாதி?’ என்று கேட்கக் கூடாது. பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த மாணவனையும் அவமானப்படுத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவனை ஃபெயில் ஆக்கக் கூடாது என்றால், ஃபெயில் ஆகாத அளவுக்கு மாணவனைப் படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்று அர்த்தம்.           

அதைவிடுத்துக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல, ஓர் ஆசிரியரின் பொறுப்பு. ஆனால், நம் சமூகத்தில் உள்ள நிலைமை என்ன?

சமூகத்தில் நம்மில் பலர் நினைப்பதுபோல ஆசிரியர் பணி ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. கிட்டத்தட்ட எதிர்காலச் சமூகத்தையே கட்டமைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. கிராமப்புறங்களில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்குக் குழந்தைத் திருமணம் நடந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும்கூட அந்த மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் உண்டு. இத்தனை பொறுப்புகளை அரசியல் சட்டமே கட்டாயமாக்கி இருக்கிறது. தன் கடமையில் இருந்து மீறுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது,  அத்துமீறுவது என ஆசிரியர் செயல்பட்டால் 17(ஆ) சட்டப்படி ஆசிரியரை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யலாம். ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன? பல வன்முறை களை ஆசிரியர்கள்தான் நடத்துகின்றனர்'' என்கிறார் எழுத்தாளரும் கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராஜன்.

ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மாவட்டக் கல்வி அதிகாரி, கூடுதல் கல்வி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் சொல்லலாம். மெட்ரிக் பள்ளி என்றால் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 48 மணி நேரத்தில் விசாரணை செய்ய வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் வன்முறை
அரசு பல உத்தரவாதங்களைத் தந்தாலும் 66 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தபாடில்லை. குழந்தை உழைப்பு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அவமானம் இல்லை; ஒரு நாட்டுக்கே அவமானம்.

''எந்தக் கொள்கையானாலும் திட்டமா னாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்காது. குழந்தைகள் எப்படித் தொழிலாளர்கள் ஆகிறார்கள்? 'ஸ்லம்லஸ் சென்னை’, 'விஷன் 2020’ என்று கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை அப்புறப்படுத்தும்போது குழந்தை கள் படிப்பதை நிறுத்திவிட்டுத் தொழிலாளர் களாகின்றனர். நெல் விளையும் பூமியை பிளாட் போட்டு விற்பதால் சென்னை, திருப்பூர், பெங்களூரு எனத் திசையெங்கும் செல்பவர்கள் குழந்தைகளோடு அல்லல் படுகிறார்கள். பிழைப்புக்காகக் குழந்தை களும் வேலை செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது'' என்கிறார் குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார இயக்கத் தலைவர் தேவநேயன்.

''குழந்தைத் தொழிலாளர்களைத் தடைசெய்வதற்கான சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தாததால்தான் அனைத்துப் பணி இடங்களிலும் குழந்தைகளைக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தொழிலா ளர் துறை நடத்திய ஆய்வில் 1.07 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. ஆனால், இதன் விளைவு என்ன? குழந்தைத் தொழிலாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கூலிரீதியாகவும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள்'' என்கிறார் தேவநேயன்.
பாலியல் வன்முறைகள்
இந்தியாவில் உள்ள ஐந்தில் மூன்று குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன என்றால், நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், அதுதான் உண்மை.
''தனக்குப் பிரியமானவர் தன் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுவதையோ, தலையில் தட்டிக் கொடுப்பதையோ, மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வதையோ எல்லாக் குழந்தைகளுமே விரும்புவார்கள். இந்த விருப்பத்தைத்தான் குழந்தைகளுக்குப் பிரியமானவர்களே அவர்களை வேட்டையாடப் பயன்படுத்திக்கொள்கின்றனர்'' என்கிறார் வாழ்வியல் பயிற்சியாளர் ஷெரின்.  

''பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனதின் ஆழத்தில் புதைத்து மறக்கவே முயல்வார்கள். அழிக்க முடியாத அருவ ருக்கத்தக்க கறை தங்கள் மீது படிந்து விட்டதாகவே அவர்கள் உணர்வார்கள். இதனால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று ஏகமாகப் பயப்படுவார்கள். அதேசமயம், தான் பாலியல் கொடுமைக்குஆளாக் கப்பட்டதை வெளியே சொன்னால், அதை மற்ற வர்கள் நம்புவார்களா என்ற குழப்பமும் அவர் களை அலைக்கழிக்கும். ஏனெனில், குழந்தை களுக்கு எப்போதுமே அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்ப வேண்டும். நடந்தவற்றுக்கு குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். இவை போக, பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே தற்காப்பு விவரங்களையும் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் மனதில் பதியவைக்க வேண்டும். வன்மத்தோடு யார் நெருங்கினாலும் சத்தம் போடுவது,  கத்துவது, ஹேர்பின்னால் குத்துவது என்று தன் எதிர்ப்பைத் தைரியமாக வெளிப்படுத்தப் பழக்க வேண்டும்.  

இதில் கல்வி நிலையங்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு. ஆனால், இப்போது எல்லாம் அந்த சரணாலயங்களிலேயே குழந்தைகள் வேட்டையாடப்படும் கொடூரத்தை எங்கு சென்று சொல்வது?'' என்கிறார் ஷெரின் காட்டமாக.
குழந்தைகள் கடத்தல், வன்முறைகள்
தனி மனித விரோதத்திலும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பணத்துக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவது அடுத்த அதிர்ச்சி. இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதா பேசுகிறார்: ''ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், குழந்தைக் கடத்தல்  என்ற மூன்று குற்றங்களும் உலக அளவிலான பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியா, பர்மா, வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். இப்படிக் கடத்தப்படும் குழந்தைகளைச் சூதாட வைத்தல், பிச்சை எடுக்கவைத்தல், பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் என்று பல்வேறு குற்றங்கள் செய்து வியாபாரப் பொருளாக்கிவிடுகின் றனர். வசதியானவர்களின் பிள்ளை களைவிட அதிகம் கேள்வி கேட்காத, வறுமை நிலையில் உள்ள குழந்தை களே கடத்தப்படுகின்றனர். கல்வி யிலும் பொருளாதார நிலையிலும் மாற்றம் உண்டாவது மட்டுமே இந் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். 18 வயதுக்கு உட்பட்ட 63 சதவிகிதக் குழந்தைகளுக்குத் திருமணம் நடப்பதால் சிறு வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, அடிப்பது, மிதிப்பது என்று 53 சதவிகிதம் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முழுமையான சட்டம் நடைமுறையில் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டம் நகல் வடிவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முழு வடிவம் பெற்றால் குழந்தைகள் மீது வன்முறை நிகழ்த்துபவர்களுக் குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். தற்போது பாலியல் வன்முறை செய்யும் நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்யும் நபருக்கு மரணதண்டனை வரைக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன. ஆனால், இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப் பதால் பல குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துக்கொள்கின்றனர். எனவே, 'என் நாட்டில் வாழும் எந்த ஒரு குழந்தையும் எந்த விதத்திலும் பாதிக் கப்படாது’ என்பதை அரசியல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் சட்டங்கள் முழுமையாக வேலை செய்யும்!'' என்கிறார் அஜிதா தீர்க்கமாக.
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் சாரதா சீனிவாசன் குழந்தைகளுக்குத் தர வேண்டிய பயிற்சிகள் குறித்துப் பேசுகிறார்:

''குழந்தைகள் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதைத் தாயிடமோ, தந்தையிடமோ வெளிப்படையாகச் சொல்லும் சூழல் வீட்டில் வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலேயே உடல் அங்கங்கள்குறித்த தெளிவை ஏற் படுத்த வேண்டும். உடலமைப்பை வரைந்து காட்டி அந்த இடங்களில் யாராவது தவறாகத் தொட்டால் உதவி என்று கத்தச் சொல்லலாம். அந்த இடத்தைவிட்டு ஓடிவரச் சொல்லிக் கொடுக்கலாம்.  
நீச்சல் குளத்துக்குக் குழந்தைகள் சென்றால் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோச், டிரைவர் உள்ளிட்ட அத்தனை பேரும் எப்படிப் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தையுடன் பெற்றோர் அவசியம் சென்று வர வேண்டும்.

காரில் டிரைவரை நம்பி குழந்தையை அனுப்பக் கூடாது. அம்மாவோ, அப்பாவோ குழந்தையைப் பள்ளியில் விட்டு வர வேண்டும். ஆட்டோ, வேனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புபவர்கள் டிரைவருடைய செல்போன் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பள்ளியிலோ, வெளியிலோ குழந்தைகளைக் குழுவாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும். தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது'' என்கிறார்:
இவை எல்லாம் எங்கோ தூர தேசத்தில், முகம் அறியாக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகள் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு அருகில்... ஏன் உங்கள் வீட்டிலேயே இருக்கும் குழந்தையும் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்து, அவர்களை அதை எதிர்கொள்ளப் பழக்குவது பெற்றோரின் மிக முக்கியமான கடமை. ஏனெனில், பெரும்பாலான குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் குழந்தைகளின் மிக நெருங்கிய உறவினர்தான். எனவே, குழந்தைகள் வன்முறை குறித்த விழிப்பு உணர்வு பெற்றோர்களுக்குத்தான் இப்போதைய அதிஅவசியத் தேவை!


-க.நாகப்பன்
ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்த விகடன்.1.08.10

Leave a Reply