ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வில் தமிழ் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் கட்ந்த ஆண்டை விட குறைந்தது….

Posted by Velicham Students - - ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் (யு.பி.எஸ்.சி.) அதாவாது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்‌வி‌ல் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர் ..

2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று (மே 4) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும் வெற்றி பெற்றனர்.

இதில், தில்லியைச் சேர்ந்த சேனா அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர் இவர்.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்ற ருக்மணி ரியார் 2-வது இடத்தையும், தில்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்த பிரின்ஸ் தவாண் என்ற மாணவர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ராமாநாதபுரத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியான எஸ்.கோபால் சுந்தரராஜ், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். போடி நாயக்கனூரைச் சேர்ந்த எம்.சுந்தரேஷ் பாபு 38-வது இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.செந்தில்ராஜ் 57-வது இடத்தையும்,  அழகுவார்சினி 77வது இடத்தையும், ஆர்த்தி 190வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


தமிழக மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 910 மாணவர்களில் 68 பேர் தமிழக மாணவர்கள். கடந்த ஆண்டு இந்தத் தேர்வில் 96 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜுன் 12-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 4.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.

இவர்களில் 11,984 மாணவர்கள் பிரதானத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதான தேர்வு எழுதியவர்களில் 2,417 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு 2012 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் 183 பேர் தமிழக மாணவர்கள். அதன்பிறகு, முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 910 பேர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 420 பேர் பொதுப்பிரிவினர், 255 பேர் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள், 157 பேர் எஸ்.சி. பிரிவையும், 57 பேர் எஸ்.டி. வகுப்பையும் சேர்ந்தவர்கள்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 910 பேரில் 195 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply