ஒரு காலத்தில் இந்தியாவின் சுமையாக கருதப்பட்ட மக்கள் தொகை இன்றைக்கு மனித வளமாக மாறியுள்ளது. ஆம். மனித ஆற்றல் நம்மிடம்தான் அதிகமாக உள்ளது. உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த இளைஞர்களால் நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக நாடுகள், இந்தியாவை மிரட்சியுடன் பார்க்கின்றன.
இந்த காலகட்டத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான ஒன்று. உலகளவில் மக்கள் தொகையில் மட்டுமல்ல, தற்கொலைகளின் எண்ணிக்கையிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. இதில் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் பேர், இதில் 5 ஆயிரம் பேர் மாணவர்கள். தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகம்.
தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி, கடந்த 2010ம் ஆண்டு ஒரு லட்சத்து 35, 599 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், 50,755 பேர் 29 வயதுக்குட்பட்டவர்கள். 3,130 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொள்வோரில் 51 சதவீதம் பேர் பட்டதாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அல்லது இளைஞர்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலைகளின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேர்வு தோல்வியினால் தமிழகத்தில் 223 பேர் உட்பட நாடு முழுவதும் 2010 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் புளியைக் கரைக்கின்றன. இதன் சமீபத்திய உதாரணங்கள்தான் சென்னையில் பொறியியல் மாணவர்களின் தற்கொலைகள்.
உணவளிக்கும் விவசாயிகளில் தொடங்கி, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும். நம் மனித வளத்தை காக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர்.
திருச்சி அண்ணா தொழில்நுட்பக் கழக பாடதிட்டக் குழு இயக்குநர் புரட்சிக்கொடி சொல்லும் கருத்து:
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும். சரியாக படிக்காத மாணவர்களை அதிகமாக கண்டிப்பதன் மூலம் அவர்களை அவமதிக்க கூடாது. அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருக்க கூடாது. மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்த வேண்டும். யாருடனும் ஒப்பிட்டு அவர்களை அவமதிக்க கூடாது. வகுப்பறையில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர் ஆலோசனை மையங்கள் (கவுன்சிலிங் சென்டர்) அமைக்கப்பட வேண்டும். நீதிபோதனை, விளையாட்டில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். இவ்வாறு புரட்சிக்கொடி கூறினார்.
வெளிச்சம் அமைப்பின் நிறுவனர் ஷெரின்:
வெளிச்சம் மாணவர்கள் ஆய்வுகளின்படி, 54 சதவீதம் பேர் காதல் தோல்வியாலும், 26 சதவீதம் பேர் மனதில் இனம்தெரியாத வேதனையாலும், 15 சதவீதம பேர் தாழ்வு மனப்பான்மை மற்றும் ஆங்கிலம் தெரியாமையாலும், 3 சதவீதம் பேர் சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதால், 3 சதவீதம் பேர் ராகிங்கால் தற்கொலை செய்து கொள்கின்றனர். �நான் பேசுவதைக் கேட்க யாருமில்லை. என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை� என ஏங்கும் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையிடம் நாம் பேச வேண்டாம் என்று பெற்றோர்கள் ஒதுங்குவதாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் வகையில் 2010ல் மாணவர் ஆலோசனை மையம் (ஹெல்ப் லன் & 96981 51515) தொடங்கப்பட்டுள்ளது. இதில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். மேலும் 100 சதவீத தேர்ச்சி, நன்கொடையை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் கல்வி நிறுவனங்களும் தற்கொலைக்கு காரணமாகின்றன. எனவே மாணவர்கள் தற்கொலை என்பதை தேசத்தின் பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித வள ஆலோசகர் மற்றும் முன்னாள் எஸ்.பி கலியமூர்த்தி:

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனித உயிர் மலிவானதல்ல. எத்தகை துன்பத்திற்கும் தற்கொலை தீர்வாக இருக்க முடியாது. இதைத் தடுக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமை. மாணவர்கள் எதையும் எதிர்கொள்வோராக, எந்த பிரச்னைக்கும் தீர்வு காண்போராக உருவாக்கப்பட வேண்டும். நீதிநெறி, தன்னம்பிக்கை கதைகள் சொல்லித் தரப்பட வேண்டும். வெறும் மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல. காரணம் மதிப்பெண்ணை விட ஒரு உயிர் உயர்வானது, உன்னதமானது என்பதை உணர வேண்டும். ஆங்கிலம் கற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம். ஆங்கிலம் என்பது ஒரு அந்நிய மொழி. அது தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படத் தேவையில்லை. ஒரு முறை தற்கொலைக்கு முயன்றால், அடிக்கடி அந்த எண்ணம் வரும். எனவே தற்கொலை எண்ணமே மனதில் இருக்க கூடாது.
�நம்பிக்கை� தற்கொலை தடுப்பு மைய இயக்குநர் ராமகிருஷ்ணன்:

குடும்ப பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும் மனச்சோர்வு நோய் ஏற்படுகிறது. 100ல் 12 பேருக்கு மனச்சோர்வு நோய் ஏற்பட்டுள்ளது. வரும் 2020ல் உலகளவில் அதிகளவில் இந்நோய் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர்க்க கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற அரசு நிறுவனங்களிலும் ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். மற்ற நோய்களுக்கு சிகிச்சைக்கு செல்வது போல் மன அழுத்தம், மனச்சோர்வுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதில் வீண் தயக்கம் தேவையில்லை. தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம் மற்றும் தற்கொலை எண்ணத்தை போக்க 98424 22121 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.
ஆவணப்படம் தயாரிப்பு:

பல்வேறு காரணங்களால் மாணவர்களின் தொடர் தற்கொலை வேதனையளிக்கிறது. எனவே, மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அன்பாலயம் நிறுவனம் சார்பில் ஆவணப்படம் தயாரிக்கிறோம். இதில் இளம் சாதனையாளர்களின் விபரம், தற்கொலைக்கான காரணங்கள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை வரும் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அன்பாலயம் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- ஜோ.மகேஸ்வரன்
நன்றி: தினகரன் 6.5.12