தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்

Posted by Velicham Students - -


 தமிழகத்தின் நம்பர் ஒன் கல்வி நிலையம் என்று பெருமைப்படக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில்,  கிராமபுற வரும்  மாணவர்களின்  தொடர் தற்கொலைகளும், தற்கொலைகளின் காரணம் கண்டுபிடிக்காமல் மாணவர்களின் சாவை கொச்சைபடுத்தும் போக்கை தொடர்ந்து செய்கிறது காவல்துறையும்,அண்ணா பல்கலைகழகமும்..இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மணிவண்ணன் என்கிற மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட  அதிர்ச்சியிலிருந்த நமக்கு அடுத்த சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டுக்கு அருகேயுள்ள  கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தைரியலட்சுமி தற்கொலை செய்துகொண்டார் எனும் தகவல் கிடைத்த நிலையில் தைரியலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைஅ பார்ப்பதற்கு முன்னால் ..! அண்ணா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செத்தபிறகு கொச்சைபடுத்தபட்டதை பார்ப்போம்..

நாமக்கல் மாவட்டத்திலுள்ள  முள்ளுக்குறிச்சியை சேர்ந்த  ஜோதி (வயது 18).. 10-ம் வகுப்பு தேர்வில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1105 மதிப்பெண்கள் பெற்று  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தவர். கடந்த 2010 செப்டம்பர் மாதம்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போதைய பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள், எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது... ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் ஜோதி தனது அண்ணன் தீபக்கிடம், தன்னை மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, இனி சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார். அப்போது  தீபக் சொன்ன வார்த்தைகளில் ஆறுதல் அடையாமல் அவசரப்பட்டு தூக்கில் தொங்கிவிட, ஜோதியின் மரணத்திற்கு காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் சொன்ன காரணம் கேவலமானது .

ஜோதி மரணம் நிகழ்ந்த  அன்று எவ்வித விசாரணை நடத்தாமலேயே துணைவேந்தர் மன்னர்ஜவகர், பல்கலைகழகத்தில் ராகிங் நடக்கவேயில்லை என்றதும், அப்போதைய மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.சிவனாண்டி, ஜோதியின் செல்போனிலிருந்து, சக மாணவருக்கு, உன்னை ஏற்றுக்கொள்வதாக, எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், அதை அந்த மாணவன் சக நண்பர்களிடம் சொல்லிவி, சகமாணவர்கள்  கேலி செய்யும்போது, ஜோதி தனது செல்போன் ஹாஸ்டலில் இருப்பதாக கூறியிருக்கிறார்.  ஆனாலும் எஸ்.எம்.எஸ் மேட்டர் வெளியே தெரிந்துவிட்டதால் ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக சிவணாண்டி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆனால் கல்லூரி வகுப்பில் இருக்கும் ஜோதி, ஹாஸ்டலில் இருக்கும் செல்போனில் எப்படி எஸ்.எம்.எஸ்.அனுப்பி இருக்க முடியும்? அப்படியானால் அவரின் செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியது யார்? ராகிங் கொடுமையால் மற்ற மாணவர்கள் ஜோதியின் செல்போனை எடுத்து எஸ்.எம்.எஸ். ஏன் அனுப்பி இருக்க கூடாது? இதுபோன்று, எவ்வித விசாரணையும் நடத்தாமல் ஒரே நாளில் இறந்து போன ஜோதி இனி உயிருடன் வர மாட்டார் என்ற தைரியத்தில், ஜோதி  காதலால் தற்கொலை செய்துகொண்டார் என பைலை மூடிவிட்டனர்.

ஜோதியின் தற்கொலையை மனதில் வைத்துகொண்டு, தைரிய லட்சுமி, மணிவண்னன்  தற்கொலைக்கொலைகளை படியுங்கள்…

பலரின் வாழ்க்கையை காப்பாற்றிய மாணவன் மணிவண்ணன் தற்கொலை:


கடந்த 2000-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது, மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்ந்த மணிவண்ணன் நன்றாகப் படிக்கத் தொடங்கினார். வறுமை விரட்டிக்கொண்டே இருந்தாலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 461 மதிப்பெண்களும் 2 தேர்வில் 1,159 மதிப்பெண்களும் எடுத்தார்.                                                         

குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவே, நானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்என்று  அரசு மற்றும் பல தனியார்களிடம் கல்வி உதவித் தொகை பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தார். தனக்கு வரும் கல்வி உதவித் தொகையைக் கொண்டு, சேலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த கனிஷ்கா, சக்திவேல், சிவகுமார் மூவரையும் தத்து எடுத்துப் படிக்க வைத்திருக்கிறார். வறுமை காரணமாக யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்துவந்த மணிவண்ணன்தான், கடந்த 27-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்பதுதான் பரிதாபமாக இருக்கிறது.


'அபூர்வா செந்தமிழன்என்ற புனைப்பெயரில் 'தாய்ப்பால் வாசம்என்ற கவிதைத் தொகுப்பை ஏப்ரல் 4-ம் தேதி வெளியிட இருந்தவர்.. 'கருவறை விதைகள்என்ற அமைப்பின் மூலம் ரத்ததானம், கண்தானம் குறித்து கல்லூரியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் மணிவண்ணன். யாருக்கு எப்போது ரத்தம் தேவைப்பட்டாலும்...   தகவல் தெரிந்தால் உடனே ஓடிச்சென்று உதவுவார். தன்னுடன் படிக்கும்  கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தக் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, 'சிறு துளிகள்என்ற அமைப்பை ஏற்படுத்தி, கல்லூரி வளாகத்தில் உண்டியல் ஏந்தினார். மூன்று மாதங்களில் 85 ஆயிரம் ரூபாய் சேகரித்து 14 மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்தார்.

படிப்பது இன்ஜினீயரிங் என்றாலும் மணிவண்ணன் முழுக்கமுழுக்க தமிழ் மாணவனாகத்தான் இருந்தவருக்கு, ஆங்கிலம் தடுமாற்றத்தைத் தறவே, இன்ஜினீயரிங் பாடம் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்த மணிவண்ணன் 26 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்திருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள்..

ஜோதியை போல் சாவுக்கு பின் கொச்சைபடுத்தப்படும் தைரிய லெட்சுமி:

                                               


தைரிய லெட்சுமியின் அம்மா உமா சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட,  மூன்று பெண்பிள்ளைகளையும் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார் அப்பா சக்திவேல், குடும்ப கஸ்டத்தை உணர்ந்த லெட்சுமி,10-ம் வகுப்பில் 465 மதிப்பெண்களும், 2 தேர்வில் 1012 மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்துள்ளார். இரண்டு செமஸ்டர்கள் கூட முடியாத நிலையில்  சுத்துப்பட்டு கிராமத்துலயே அண்ணா யூனிவர்சிட்டியில படிக்கிற ஒரே பொண்ணு, லெட்சுமியை முன்னுதாரணமா காட்டி ஊர்க் குழந்தைகளைப் படிக்கச் சொல்லும் ஊர்காரர்களுக்கு தைரிய லெட்சுமி தூக்கில் தொங்கி விட்டார் என்பது பேரதிர்ச்சிதான்.


''சிவில், மெக்கானிக்கல் இரண்டையும் தமிழ்வழிக் கல்வியில் கொண்டுவந்துவிட்டாலும்,  புத்தகங்கள் சரியான மொழியாக்கத்தில் இல்லை. மிகக்கடினமான மொழி நடையிலும், நிறைய வார்த்தைகள் தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்தில் இருந்த நிலையில், தமிழ் அல்லது இரண்டும் கலந்து பரிட்சை எழுதலாம்னு சொல்றாங்க. ஒரு சிலர் தூய தமிழில்தான் எழுதணும்னு சொல்றாங்க.மாணவர்கள் குழம்பி கிடக்கிறார்கள் இதில்தான் தைரியலட்சுமி தோற்றுப்போனாள்''.

ஜோதியின் சாவை போல தைரிய லெட்சுமியின் சாவையும் கொச்சைபடுத்த நினைத்த நிர்வாகம் மீண்டும் ஓர் வதந்தியை பரப்பியிள்ளது..

ஏழ்மையில் கல்லூரிக்கு வந்த மணிவண்ணனின் குடும்பசூழலும், தைரியலட்சுமியின் குடும்பச்சூழலும் ஒத்துபோக இருவரும் அண்ணன் தங்கையாக பழகினார்கள். மணிவண்ணனின்  'தாய்ப்பால் வாசம்கவிதைத் தொகுப்புக்குப் பிழை திருத்திய தைரியலட்சுமியையும், மணிவன்னன் தற்கொலைக்கு காதல் தான் காரணமென கொச்சைப்படுத்துகிறது...


கிராமப்புறங்களில் நன்கு படித்து, நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்கு படிக்கச் செல்லும், மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளை களைய அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே ஜோதி, மணிவண்ணன், தைரியபிரியா ஆகிய மரணத்திற்கான காரணங்களை கண்டறிய, விருப்பு வெறுப்பில்லாமல் முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவ-மாணவியர் தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

லேப்டாப்புகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தும் தமிழக அரசு, என்ன செய்ய போகிறது பார்ப்போம்............

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
மாணவர்கள் தற்கொலையைப் தடுப்போம்
தன்னம்பிக்கையுள்ள சமூகம் படைப்போம்
STUDENTS HELP LINE 9698151515


இணைப்புகள்:  

வருடா வருடம் அதிகரிக்கும் மாணவ தற்கொலைகள் - வெளிச்சம் மாணவர்கள் ஆய்வறிக்கை : http://velichamstudents.blogspot.in/2011/02/55.html வெளிச்சத்தோடு இணைய: http://goo.gl/DNFqx 


2 Responses so far.

  1. இன்றைய தலைமுறையினரிடம் தைரியம், தன்னம்பிக்கை குறைவாக உள்ளதையே இந்த தற்கொலைகள் காட்டுகின்றன. மூடி மறைக்கும் கீழ்த்தரமான காரியங்களில் இறங்காமல், இந்த விஷயங்களை உளவியல் முறையில் ஆராய்ந்து இனி தற்கொலைகள் நடக்காமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

  2. Mari says:

    உங்கள் எழுத்துக்களால் இருண்டு கிடக்கிற இந்த சமூகத்தில் வெளிச்சம் பரவும்...மாரி

Leave a Reply