பெண்களால்தான் இயங்குகிறது உலகம்! - ஆனந்த விகடனில் 'வெளிச்சம்’ ஷெரின்,

Posted by Velicham Students - -

மார்ச் 8 - மகளிர் தினம். அதுவும் ஒரு தினமாக, தேதியாகக் கடந்துபோய்விடுகிறது சம்பிரதாயமாக. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், தொழில் என்று பல தளங்களிலும் இன்றைய பெண்கள் அடைந்திருக்கும் வெற்றிகள் அளப்பரியவை. இதற்கான நீண்ட நெடிய போராட்டங் களும் மகத்தானவை. 'இன்றைய சூழலில் பெண் கள் இன்னும் தங்களைச் சுதந்திரமாக உணர் வதற்கு எவை எல்லாம் தேவை?’ என்றகேள்வியை முன்வைத்தோம். பல தளங்களில் சாதித்திருக்கும் பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
 


அருள்மொழி, வழக்கறிஞர்: ''படித்த பெண்கள்கூட செய்தித்தாள் வாசிக்கவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்க்கவும் நேரம் இல்லாமலும் ஆர்வம் இல்லாமலும் குடும்ப நிலவரங்கள் குறித்துக் கவலைப்படுவதோடு முடங்கிவிடுகிறார்கள். மதம் சார்ந்த விஷயங்கள், புடவை, நகை போன்ற ஆடம்பரங்களில் இருந்து கவனத்தைத் தவிர்த்து, பொது விஷயங்களில் அக்கறை காட்ட பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் வெளியிடங்களுக்குப் போவதுபோல பெண்களும் வெளியிடங்களுக்குச் சென்று பல விஷயங் களைக் கற்க வேண்டும். வெளியிடங்களுக்குப் போவது என்றால், கோயிலுக்குப் போவது அல்ல. நூலகங்களுக்குச் செல்லுதல், இலக்கியம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல், விழாக்களைத் தாங்களே நடத்துதல் என்று பொது வேலைகளில் ஈடுபட பெண்கள் முன்வர வேண்டும்!''

தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்: ''சாமியாரில் இருந்து சக நண்பன் வரை எளிதாக ஏமாந்துவிடும் அளவுக்குப் பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். கல்பனா சாவ்லா, இந்திரா நூயி போன்ற பெண்களை உதாரணப் பெண்களாக முன்னிறுத்துவதைத் தவிர்த்து, மலையின மக்கள் உரிமைக்காகப் போராடும் பழங்குடிப் பெண் சி.கே.ஜானு, மானை வேட்டையாடிய வழக்கில்சல்மான் கானுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மறுத்தபோது தைரியமாக உண்மையைப் போட்டு உடைத்த கிருஷ்ணா பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர், மணிப்பூரில் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக அறப்போராட்டம் நடத்திவரும் இரோம் ஷர்மிளா போன்ற பெண்களை முன்னுதாரணப் பெண்களாக முன்னிறுத்த வேண்டும்!''

ஷாலினி, மனநல மருத்துவர்: ''சாமரம் வீசிய பெண்கள் முதல் சங்க காலப் புலவர்கள் வரை, பெண்கள் புத்திசாலியாக, அறிவாளியாக, பணி செய்பவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். எனவே, பெண்கள் முதலில் வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் பார்த்தால், படிக்காத பெண்கள்தான் உணர்வுகளை வெளிப்படுத்தப் போதுமான சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். கிராமத்தில் குடும்பச் சண்டையில் தாக்குதலுக்கு உள்ளான பெண் தலையில் அடித்து ஒப்பாரிவைத்துஊரைக் கூட்டிவிடுவாள். ஆனால், நகரத்துப் பெண்களுக்கு அத்தகைய தைரியம் இல்லை. எனவே, நகரத்துப் பெண்களுக்குத் தைரியமும், கிராமத்துப் பெண்களுக்குக் கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் இன்றைய தேவை!''

நிர்மலா கொற்றவை, கவிஞர்: ''பாடத் திட்டத்தில் 'பெண்ணியக் கல்வி’ என்ற பாடப் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். 'இந்தச் சமூகம் ஆரம்பத்தில் தாய் வழிச் சமூகமாகத்தான் இருந்தது. பிறகுதான் அது தந்தை வழி ஆணாதிக்கச் சமூகமாக மாறியது’ என்கிற வரலாற்று உண்மை களைப் புரிந்துகொள்வதற்கே நமக்கு 20 வயதுக்கு மேல் ஆகிறது. அதுவும் அரசியல் உணர்வுடைய ஆண்களும் பெண்களும்தான் இதைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள். இப்போது முனைவர் பட்டப்படிப்பு அளவில்தான் பெண் ணியச் சிந்தனைகள் எடுத்துக்கொள்ளப்படு கின்றன. இதை மாற்றி பதின்பருவத்திலேயே 'பெண் என்பவள் சக மனுஷி. அவள் ஆணுக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டியவள்’ என்று கற்பிக்கும் பெண்ணியக் கல்வி கற்பிக்கப்பட்டால், ஆண்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இரண்டாவதாக, சினிமா மாயையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். அரசியலுக்கு வந்த சினிமாக்காரர்கள் பெண்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை உணர்ந்து, இந்த சினிமாக் காரர்களைப் புறக்கணிக்கப் பெண்கள் முன்வர வேண்டும்!''
மாலதி மைத்ரி, கவிஞர்: ''மனித உரிமைப் போராளிகள் மற்றும் பெண்ணியவாதிகளின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனாலும் இவை, 'பெண் என்பவள் எனக்குக் கீழேதான்’ என்ற எண்ணத்தை ஆண்களிடம் மாற்றுவதாக இல்லை. அரசு வேலைவாய்ப்புகளில் இப்போது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறதே தவிர, அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. அதை மாற்றி சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் பெண்களுக் கான உள்ஒதுக்கீடு தேவை. விவசா யக் கூலி வேலை, கட்டட வேலை போன்ற அடித்தள வேலைகளில் தொடங்கி, ஆண்களுக்கும் பெண் களுக்கும் பாரபட்சமான ஊதியம் இருக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும் இருபாலருக்கும் பாரபட்சமற்ற ஊதியம் அளிக்கப்படும் நிலை உருவாக வேண்டும்!''

சின்மயி, பின்னணிப் பாடகி: '''வீட்டு வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஒவ்வொரு பெண்ணும் ஆண்களை வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறை குறித்த செய்திகள் வருகின்றன. காரணம், பெண்களைக் கட்டுப்பாடாக வளர்க்கும் சமூகம், ஆண்களைச் சரியாக வளர்ப்பதில்லை. எனவே, பெண்கள் சுதந்திரமாகவும் கண்ணி யமாகவும் இருக்க, ஆண் குழந்தை களைக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டும். அதேபோல, இப்போது கலாய்ப்பது என்ற பெயரில் பெண்களை அவமானமாகப் பேசுவதும் அதிகரித்துவருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இதற்குப் பயன்படுவது வேதனை. எனவே, 'பெண்களும் தங்களைப் போலவே சக உயிர்கள்தான்’ என்று வலியுறுத்தும் கல்வி ஆண்களுக்குத்தான் அவ சியம். 'ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று ஆண்கள் பெண்களைப் பின்னுக்குத் தள்ளுவதும், பெண்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுமான நிலை மாற வேண்டும். பெண்கள் ஆண்களின் வெற்றிக்காக உழைப்பதை விட்டுவிட்டு, தங்கள் வெற்றிக் காக உழைக்க வேண்டும்!''
கவிதா முரளிதரன், பத்திரிகையாளர்: ''பெண்களுக்கு இப்போதைய அத்தியாவசியத் தேவை கல்வி. வெறுமனே வேலைவாய்ப்பை அளிக்கிற கல்வியை மட்டுமே நாம் கணக் கில் எடுத்துக்கொள்கிறோம். அத்தகைய கல்வியில் பெண்கள் போதுமான அளவுக் குத் தேர்ச்சி பெற்று முன்பைவிட அதிகம் வேலைவாய்ப்பையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதைவிட அவர்களுக்கு அவசிய மானது, பெரியார் அடிக்கடி வலியுறுத்திய 'விடுதலைக் கல்வி’.அதேபோல, பெண் களுக்கான அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும். இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா, மாயாவதி, சோனியா காந்தி என்று உதாரணப் பெண் அரசியல்வாதிகள் காட்டப்படுவார்கள். ஆனால், பெண்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துகின்ற, பெண்கள் விடுதலையில் நம்பிக்கைகொண்ட பெண் அரசியல் ஆளுமைகள் உருவாக வேண்டும். இல்லை என்றால், விழுப்புரத்தில் இருளர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும்போது, ஜெயலலிதா அதைக் கண்டுகொள்ளாதது, உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை மம்தா பானர்ஜி 'அப்படி ஒன்று நடக்கவேஇல்லை’ என்று மறுப்பது மாதிரியான அவலங்கள்தான் தொடரும்!''
தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர்: ''மாமனார், மாமியார், குழந்தைகள் என்று பல பொறுப்புகள் இருந்தாலும், 'இது என் வேலை. நான் நல்லா செய்வேன்’ என்று ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.
மாமனார், மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு, சின்ன குழந்தையை க்ரஷ்ஷில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியான போக்கு இல்லை. அதே குழந்தையை மாமனார், மாமியாரைக் கவனித்துக்கொள்ளச் சொன் னால், குழந்தைக்கு நல்ல அரவணைப்பு கிடைப்பதோடு, 'நல்ல ஹோம் மேக்கர்’ என்ற பெயரும் கிடைக்கும்.
நல்ல அன்னைதான் நல்ல அதிகாரியாக இருக்க முடியும். நல்ல மனைவிதான் நல்ல மந்திரியாக இருக்க முடியும்.
வீடோ, அலுவலகமோ திட்டமிட்டு காரியங்களைச் செயல்படுத்த வேண்டும். 'நான் ஒரு பெண். எனக்கு சலுகை தந்தே ஆக வேண்டும்’ என்று அடம்பிடிக்காமல், தடைகளைத் தாண்டப் பழக வேண்டும்!''
ஓவியா, பெண்ணியச் செயற்பாட்டாளர்: ''பல பெண்களே, 'என்னுடைய கணவர் எனக்கு நிறைய உரிமைகள் கொடுத்திருக்கிறார், வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்’என்று சொல்லி, 'இனியும் பெண்கள் உரிமை அடைவதற்கு ஒன்றும் இல்லை’ என்கிற கருத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், எவ்வளவு படித்த பெண்ணாக இருந்தாலும், எவ்வளவு சம்பாதிக்கிற பெண்ணாக இருந்தாலும், ஆண் தலைமையிலான குடும்பக் கட்டமைப்பை அப்படியே எந்தக் கேள்வி யும் கேட்காமல் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை மாற வேண்டும். அடுத்தபடியாக, பெண்கள் 'தாங்கள் தனி நபர்கள் இல்லை, ஓர் இனம்’ என்பதை உணர்ந்து அமைப்பாக வேண்டும். அத்தகைய அரசியல் உணர்வும் அமைப்பாவதும் இன்றைய பெண்களுக்கு அத்தியாவசியத் தேவை!''

'வெளிச்சம்’ ஷெரின், சுய முன்னேற்றப் பயிற்சியாளர்: ''அழகான உடை, நகை என்று தன்னை அழகுபடுத்துவதிலேயே கவனம் செலுத்தும் பெண்ணாக இல்லாமல், மனதைத் திடமாக வைத்திருக்கும் பெண்கள்தான் இன்றைய தேவை. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் 26 வகை நோய்கள் தாக்காது என்று  மருத்துவம் சொல்கிறது. ஆனால், நகர்ப்புறப் பெண்கள் சிறுநீர் கழிக்க வெட்கப்பட்டு தண்ணீர் அதிகம் குடிப்பது இல்லை. கிராமப்புறப் பெண்களோ சிறுநீர் கழிக்க அடிக்கடி திறந்தவெளிக்குச் செல்ல முடிவதில்லை. நகர்ப்புறப் பெண்களுக்கும் சரி, கிராமப்புறப் பெண்களுக்கும் சரி; தலைவலி, மார்பகப் புற்றுநோய்களுக்கான காரணங்கள் குறித்த விழிப்பு உணர்வே இல்லை. உடல்நலம் குறித்த அக்கறை அவர்களுக்கு ஊட்டப்படுவது அவசியம்!'

-ரீ.சிவக்குமார், க.நாகப்பன், படம்: வீ.நாகமணி


Thanks Ananada vikatan: 8.3.12One Response so far.

  1. Those who speaks about women right here, they are not ready to come out of their religion. Religions does not give equality to women. They can speak and celebrate women's day every year. But all that is useless which will not give any fruit to women.
    - Jo.TamilSelvan, Kanyakumari District.

Leave a Reply