படிக்கனுமேன்னு எத்தனையோ நாள் வலி தாங்க முடியாம அழுதுக்கிட்டு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டோம்- சென்னைக்கு ஓடிவந்த 25 கல்லூரி மாணவிகளின் குமுறல்

Posted by Velicham Students - -

மோசமான கட்டமைப்புள்ள ஜீவா நர்சிங் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் !
  

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி  மாலை 5 மணியளவில் வெளிச்சம் மாணவர் உதவி எண்ணுக்கு ( 9698151515 ) ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பதற்றமான குரல் 

 'வெளிச்சம்; அமைப்புங்களா ??...

மேடம்.. நாங்க கிருஷ்ணகிரி பக்கத்துல ஜீவா நர்சிங் காலேஜ்ல  படிக்கிறோம். நாங்க காலேஜ் சேர்ந்து 6 மாசமாகுது. எங்க காலேஜுல படிக்குறதுக்கு உண்டான எந்த வசதியும் இல்லை, ஹாஸ்டல் வசதி மோசமா இருக்கு, எங்க காலேஜுக்கு இன்னும் பிரின்சிபால் இல்லை... எல்லாத்துக்கும் மேல எங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்க ஆசிரியர்களே இல்லை...  என்று சொல்லி அதிர வைத்தார்.

தி ஹிந்து நாளிதழ்

இதைப் பற்றி உங்க கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி கேளுங்க. அவக பதில் திருப்திகரமா இல்லேன்னா உங்க கல்லூரி சார்ந்திருக்கும் பல்கலைக்கழகத்திடம் முறையிடலாம் என்று சொன்னோம்.

"எங்க கல்லூரி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருகிறது. நாங்க 25 மாணவ, மாணவிகள் ஒண்ணா கிளம்பி இன்னைக்கு காலைல சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்துட்டோம்”, என்று அடுத்த அதிரடி வைத்தார்.

29-ம் தேதி  நடக்கப்போகிற பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளில் எல்லோரும் பிசியா இருக்காங்களாம். எங்களால துணை வேந்தரை பார்க்க முடியலை. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை" , என்று பரிதவித்தார் அந்த மாணவர். அந்த 25 மாணவர்களை சந்திக்க உடனே விரைந்தோம்.

பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கூறியதிலிருந்து , ஏழு வருடமாக கிருஷ்ணகிரியில் இயங்கும் இந்தக் கல்லூரியில் டிப்ளமோ நர்ஸிங் படிப்பு மட்டுமே இருந்தது. இந்த வருடம் பி.எஸ்.ஸி நர்ஸிங் படிப்புக்கு அங்கிகாரம் கொடுத்த நிலையில் விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த பல மாணவர்கள்  எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி கவுன்ஸிலிங் மூலம் ஜீவா கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் பிறகு அட்மிஷன் செய்வதற்கு நேரடியாக சென்ற போது கல்லூரியின் நிர்வாக அலுவலம் எண் :269 பெங்களூர் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி எனும் முகவரியில் உள்ள  ஜீவா மருத்துவ மனையில் இருக்கிறது எனக் கல்லூரிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கல்லூரிக்கு போன எங்களுக்கு முதல் அதிர்ச்சி காத்துக்கொண்டு  இருந்தது.  நாங்க படிக்கப்போறது ஜீவா ஹாஸ்பிடல்ல இல்ல, வேற இடம்னு சொல்லி  பீமண்டஹல்லி, புளியஞ்சேரி கிராமத்திலுள்ள ஜீவா நர்ஸிங் கல்லூரி எனும் முகவரியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு கூட்டிட்டு போனாங்க. அங்க எங்களுக்கும் டிப்ளமோ நர்ஸிங் சேர்ந்த மாணவர்களுக்கும்  பாடம் நடத்தப்படும்னு சொன்னங்க .இதில் என்ன  கொடுமை என்றால் எங்களுக்கு கல்லூரி பிரின்ஸிபல் இல்லை, அதைவிடக்கொடுமை புரபஸர்கள் யாருமே இல்லை. நாங்கள் எப்படி படிப்பது என்று கேட்டதற்கு, நர்சிங் என்றால்  படிப்பது இல்லை, பிராக்டிகல் தான்னு சொல்லி அவங்களோட ஹாஸ்பிட்டல்ல கிளீனிங், வாஸிங் வேலை செய்ய சொன்னாங்க செய்யலைன்னா ஸ்டெத்தாஸ் கோப்பாலயே அடிச்சாங்க... எத்தனையோ நாள் படிக்கனுமேன்னு, எல்லா ஏமாற்றங்களையும் தாங்கிட்டு  அழுதுக்கிட்டு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டோம்.
பெற்றோர்கள் சன் டிவிக்கு கொடுத்த பேட்டி


இது ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் நாங்க தங்க வைக்கப்பட்ட ஹாஸ்டல்ல வார்டனே இல்லை. அதனால எங்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என்று நம்மிடம் கதறினார்கள்  மாணவிகள். அங்க தான் டார்ச்சர் தாங்க முடியலை, சென்னைக்கு போனாலாவது  தீர்வு கிடைக்கும்னு நினைச்சா, இங்க அதைவிட கொடுமையா இருக்கு... துணைவேந்தரை பார்க்க விடமாட்டேன்கிறாங்க  என்றார்கள்.

தாங்கள் சந்தித்த பிரச்சனைகளையெல்லாம் எழுதி கையொப்பமிட்ட அந்த 25 மாணவர்களின் புகார் கடிதத்தோடு, அந்த 25 மாணவர்களோடும் சேர்ந்து மறுநாள் தலைமைச் செயலகத்துக்கு சென்றோம். முதல்வர் சிறப்பு பிரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  நீதி கேட்டு மனுகொடுத்தோம். தி ஹிந்து, தினகரன்-கிருஸ்ணகிரி, சன் நியூஸ் ஆகிய ஊடகங்களில் இந்த செய்தி வெளியானது.
பின் தொடர்ந்த போலீஸார்

அன்று மாலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய் அவர்களிடமும், 29.2.12 அன்று எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் தேர்வானையர் என எல்லோரையும் சந்தித்து மாணவர்களுக்கு உதவிடக் கோரினோம்.

கடைசியாக 1.3.12 அன்று பத்து மணிக்கு துணை வேந்தரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன்  நேரில் சென்றோம். நடந்த எல்லாவற்றையும் மாணவர்களின் சார்பாக எடுத்து வைத்தோம். எல்லா மாணவர்களிடமும் தனித்தனியே அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை பொறுமையாக கேட்டுக்கொண்ட துணைவேந்தர் அவர்கள், ஜீவா நர்சிங் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் திருமதி பிரமிளா ஸ்ரீதரன் மற்றும் அவரது கணவர் டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோரை அழைத்து நேருக்கு நேராக விசாரித்தார்.

கல்லூரியில் எல்லா வசதியும் இருக்கு.இந்த பொண்ணுங்க முன்னால் பேராசியர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு பிரச்சனை பண்ணுறாங்க என்றார். அவரை இடை மறித்த துணைவேந்தர் , முன்னால் பேராசிரியர்களா?? என்றார். இரண்டு மாசத்துக்கு முன்னாடி கல்லூரியில் வேலை பார்த்த எல்லா  புரப்பசர்களும் வேலையை விட்டு நின்னுட்டாங்க சார் என்றார்.

ஒரு நர்ஸிங் கல்லூரியில பேராசிரியர்கள், ஸ்டாப் என மொத்தம் 22 பேர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது நார்ம்ஸ். ஆனால் உங்கள்  கல்லூரியில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஒரு குழந்தை பொய் சொல்லலாம்.., ஆனால் இத்தனை பிள்ளைகள் வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்களேன்னு கேள்விக்கேட்ட துணைவேந்தர் அவர்கள் நம்மிடம், இன்னும் ஒரு வாரத்தில் இந்த மாணவிகளுக்கு வேறு கல்லூரியில் சேர்த்து படிக்க வழி செய்கிறேன் என்றார் உறுதியாக..!

மாணவிகளை நம்பிக்கையோடு ஊருக்கு அனுப்பி வைத்தோம்…

ஆனால், பிரச்சனை முடியவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். திரும்பி சென்ற மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்திடம் எந்தவித ஒத்துழைப்பும் இல்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள் மீண்டும் கிளம்பி நேற்று (12.3.12) சென்னைக்கே வந்து விட்டனர். 25  பேர் சார்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் நியாமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று
13.03.12 மாலை 4:00 மணியளவில் சென்ட்ரல் அருகில் இருக்கும் மெமோரியல் ஹாலில் மாணவர்களின் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வெளிச்சம் ஒருங்கிணைக்கிறது.

மாணவர்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் எடுத்து செல்வதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாங்களை உரக்கச் சொல்லவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதற்கும், மேலும், வரும் காலங்களில் இதுபோல் வேறு மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற விழிப்புணர்வுக்காகவும் நடக்கும் இந்த  கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மாணவர் நலனுக்காக அனைவரும் குரல் கொடுப்போம்.

கல்வி வியாபரத்தால்  நேரும் அவலங்களை உணர்
வோம். இந்த சமுதாயப் பிணி நீங்க அனைவரும் கைகோர்ப்போம்!!
நம்பிக்கையோடு ஊருக்கு 

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்

தொகுப்பு:  வெளிச்சம் மாணவி- அகஸ்தியா 
     மாணவிகளின் மனு
மாணவிகளின் கையெப்பம்


Leave a Reply