தமிழகத்தின் 170 கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை- அம்பலபடுத்திய மாணவன்

Posted by Unknown - -


திர்ச்சி தரும் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்கு பெரும் உதவிகளைச் செய்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி, தமிழக இன்ஜினியரிங் கல்லூரி களில் நடந்திருக்கும் அநியாயத்தை அம்பலப்படுத்துகிறார், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் சரவணகுமார். 

அவரைச் சந்தித்தோம். 'நான் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று கவுன்சிலிங் மூலம் சேலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். கவுன்சிலிங் மூலம் சேர்பவர்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகை 32,500 ரூபாய். ஆனால், அந்தக் கல்லூரியில் 50,000 ரூபாய் வசூல் செய்தனர். காரணம் கேட்டதற்கு, 'இந்தத் தொகையை கட்டினால் படிக்கலாம் இல்லை என்றால் வேறு கல்லூரிக்குப் போய் விடுங்கள்’ என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். கவுன்சிலிங் முடிந்தபிறகு வேறு கல்லூரியில் போய்ச் சேரமுடியாது என்பதால், கூடுதல் பணத்தைக் கஷ்டப்பட்டு கட்டி படித்தேன்.
முதல் ஆண்டு ஒரு வழியாக முடித்து விட்டேன் என்றாலும் அடுத்த மூன்று வருடங்கள் படிப்பதற்கு பணம் புரட்ட முடியாது என்பது தெரிந்தது. அரசு சொன்ன தொகையை நம்பி இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. அவ்வளவு பணம் கட்டமுடியாது என்பதால் அடுத்த வருடம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் தவிப்பார்களோ என்ற சிந்தனை என்னைப் பாடாய்ப்படுத்தியது. அதனால், குறிப்பிட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது, அரசு தக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றேன். நான் கேட்ட 20 கேள்விகளுக்கு 36 பக்கங்களில் பதில் கொடுத்தார்கள். பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும் கிடைத்த பதில்களே அதிர வைத்து விட்டன.
2007-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாருக்கு உள்ளானவை, 39 இன்ஜினீயரிங் கல்லூரிகள். 2008-ம் ஆண்டு 46 கல்லூரிகள். 2009-ம் ஆண்டு 61 கல்லூரிகள். 2010-ம் ஆண்டு 24 கல்லூரிகள் என்று 170 கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ளன. இதனை விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 39 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளில் மட்டுமே அந்தக் குழு விசாரணை நடந்தியிருக்கிறது. அதில் இரண்டு கல்லூரிகள் மட்டும் அதிக வசூல் செய்வது கண்டறியப்பட்டது.
இதேபோன்று 2008-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 61 கல்லூரிகளில், 7-ல் மட்டும் விசாரணை நடைபெற்றது. அதில் 5 கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக புகார் கூறப்பட்ட 170 கல்லூரிகளிலும் விசாரணை நடத்தாமல் சில கல்லூரிகளில் மட்டுமே நடந்துள்ளது. அதனால் 11 கல்லூரிகளில் மட்டுமே அதிகக் கட்டணம் வசூல் செய்வதுநிரூபணமானது.  இந்த 11 கல்லூரிகளும் தலா ஒரு மாணவருக்கு மட்டுமே, கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி அளித்துள்ளது. அதிகக் கட்டணம் வசூல் செய்த கல்லூரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
'புகார் அளிக்கப்பட்ட அனைத்துக் கல்லூரி களிலும் ஏன் விசாரணை நடத்தவில்லை? இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தங்களது கடமையை சரிவரச் செய்யாமல் சில கல்லூரிகளுக்குத் துணை போயிருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டி அரசு மீதும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீதும் வழக்கு தொடுக்கப் போகிறேன்.  பல ஆயிரம் மாணவர்களின் வாழ்கையைப் பாழாக்கும் கூடுதல் கட்டண வசூல் விவகாரம் இனியாவது ஒழியட்டும்'' என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து, உயர்க்கல்வித் துறை அமைச் சர் பழனியப்பனிடம் கேட்டோம். ''இது முழுக்க முழுக்க கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள். இப்போது, மானிட் டரிங் செய்வதற்காக மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைத்து உள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது விசாரணை நடத்தி வருகிறோம். கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியின் உரிமத்தை  ரத்து செய்யவும் தயங்க மாட்டோம்'' என்றார். 

இன்றைய நடவடிக்கை இருக்கட்டும். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்கப்போவது யார்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பதில் சொல்லப்போவது யார்?

நன்றி: ஜூனியர் விகடன். 4.2.12

Leave a Reply