கல்விக் கடன் வழங்காத வங்கிகள் மீது வழக்குத் தொடருங்கள்:விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அதிரடி அறிவிப்பு:

Posted by Unknown - -

திருச்சி:கல்விக் கடன் வழங்காத வங்கிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சவுண்டையா கூறினார்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் சவுண்டையா பதிலளித்து பேசியதாவது: முசிறி திருத்தியமலை பாலப்பட்டி ராஜேந்திரன் என்ற விவசாயி பெயரில் வங்கியில் பணத்தை பெற்றுக் கொண்டு டிராக்டர் வழங்காமல் இருப்பது கிரிமினல் குற்றமாகும். உடனடியாக சம்பந்தப்பட்ட டீலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்திற்கும் தற்போது ஆட்கள் வருவது குறைந்துள்ளது.

கடந்தாண்டில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே இந்தாண்டு பணிக்கு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் வாரத்திற்கு ரூ.2.5 கோடி சம்பளம் கொடுத்த இடத்தில் தற்போது ரூ.ஒன்றரை கோடியை தாண்ட முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றும் தெரியவில்லை.ஏரி, ஓடைகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்கு மாட்டு வண்டியில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். டிராக்டரில் எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் விஏஓ, ஆர்ஐ உள்ளிட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

லால்குடி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிற. அதுவரை கம்ப்யூட்டர் பட்டா, சிட்டாவில் ஏதாவது தவறுகள் இருந்தால் தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓ. விடம் விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம். துவரம் பருப்பை பதுக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முத்தரசநல்லூரில் காவிரியின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வுகளுக்கு கூட அரசு பணம் ஒதுக்கியுள்ளது. அதனால் கண்டிப்பாக முத்தரசநல்லூரில் கதவணை அமைக்கப்படும். உய்யக்கொண்டான் கால்வாயில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை கழிவு நீர் திறந்துவிடுவது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரி எடுத்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் வங்கி ஒன்று கல்விக்கடன் தராமல் இழுத்தடித்து வருவதாக விவசாயி ஒருவர் புகார் கூறினார்.

கல்விக்கடன் வழங்காத அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு பலமுறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அரசு நிர்வாகத்திற்கு கட்டுப்படாதவர்கள் போல நடந்து கொள்கின்றனர். இதுகுறித்து கடந்த வாரம் திருச்சி வந்திருந்த ஐகோர்ட் நீதிபதி கூறுகையில், கல்விக் கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறினார். அதனால் இனிமேல் அனைத்து தகுதிகளும் இருந்தும் கல்விக்கடன் கிடைக்காத நபர்கள் கடன் வழங்காத வங்கிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடருங்கள்.

நானே வக்கீல்கள் குறித்த விவரங்களை தருகிறேன்: சிறப்பு பட்டா மாறுதல் முகாம்:தொட்டியம் தாலுகாவில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க தொட்டியத்தில் அடுத்த வாரம் டி.ஆர்.ஓ தலைமையில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்படும். அதனால் அப்பகுதியில் பட்டா மாற்றுவதில் பிரச்னை உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம். போசம்பட்டி ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொன்னுசாமி பேசுகையில், தமிழகத்திலேயே முதன் முறையாக வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 விவசாயிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் புதூர்பாளையம், எம்.கே.புதூர் ஆகிய ஊர்களில் உள்ள விதைப்பண்ணைகள் கடந்தாண்டு லாபகரமாக செயல்பட்டுள்ளன என்றார்.

மாவட்ட வன அலுவலர் மணி பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் குரங்குகளுக்கு மேல் பிடிக்கப்பட்டு பச்சமலை பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்தாண்டும் குரங்குகள் பிடிக்கப்பட உள்ளது. மேலும் கடந்த ஆண்டு வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க புலிவலம், மருங்காபுரி உள்ளிட்ட பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோலார் மின் வேலிகள் போடப்பட்டுள்ளது. இந்தாண்டும் தேவையான பகுதிகளில் சோலார் மின் வேலிகள் அமைக்கப்படும் என்றார்.

தவிக்க விட்ட அதிகாரி:தொட்டியம் வட்டார தோட்டக்கலைத்துறை மூலம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 23 பேர் 3 நாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 20ம் தேதி ஒகேனக்கல் சென்ற இவர்களை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தங்கராஜ், 'அருவியில் குளித்து விட்டு வாருங்கள். ஊருக்குச் செல்லலாம்' என்று கூறியுள்ளார். விவசாயிகள் குளித்து விட்டு திரும்பி வந்த பார்த்தபோது தங்கராஜ் வரவில்லை. சில மணி நேரம் கழித்து தங்கராஜும், அவரது நண்பரும் குடிபோதையில் வந்துள்ளனர். இதனால் பஸ்சில் வந்த விவசாயிகள் சிலருக்கும், தங்கராஜுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், விவசாயிகளை கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து பஸ்சை எடுத்து வந்துவிட்டார். உதவி தோட்டக்கலை அலுவலர்களும் விவசாயிகளுடன் இருந்து விட்டனர். பின்னர் விவசாயிகள் இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்து மறுநாள் காலையில் பஸ் பிடித்து ஊருக்கு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தோட்டக்கலை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நன்றி தினமலர்..
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tiruchirapalli

Leave a Reply