அப்லிகேசன் விற்பனையில் "கல்லா"கட்டிய கல்லூரிகள்.... எல்லாம் முடிந்த பின் உத்தரவிட்ட உயர்கல்விதுறை

Posted by Velicham Students - -


தமிழகம் முழுவதும், பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், சேர்க்கை நடைமுறைகள் குறித்த உத்தரவுகளை, மிகவும் தாமதமாக, உயர்கல்வித் துறை செயலர் வெளியிட்டுள்ளார்.
தனியார் கல்லூரிகளில், 100 ரூபாய்க்கு குறைவாக, விண்ணப்பம் வழங்குவது கிடையாது. ஆனால், 25 ரூபாய்க்கு விண்ணப்பம் வழங்க வேண்டும் என, உயர்கல்வித் துறை செயலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கை தொடர்பாக, உயர்கல்வித் துறை செயலர் கண்ணன் வெளியிட்ட உத்தரவு: அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கலை, அறிவியல் கல்லூரிகளிலும், நடப்பு கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 25 ரூபாய்க்கு வழங்க வேண்டும். பதிவுக் கட்டணமாக, 2 ரூபாய் மட்டும் வசூலிக்க வேண்டும். இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில், 63 அரசு கல்லூரிகள், 163 உதவிபெறும் கல்லூரிகள், 1,000த்திற்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலான கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவில் முடிந்துவிட்டது. தனியார் கல்லூரிகளில், 100 ரூபாய்க்கு குறையாமல் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. மாணவர் சேர்க்கையில், இடஒதுக்கீடு முறையை, தனியார் கல்லூரிகள் கடைபிடிப்பதில்லை. இதையெல்லாம் ஆய்வு செய்யவோ, தவறு செய்யும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, உயர்கல்வித் துறை அக்கறை காட்டுவதில்லை.

தமிழக அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் பழனி கூறும்போது, "அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், சுயநிதி பாடப்பிரிவுகளை அதிகளவில் துவங்கி நடத்தி வருகின்றனர். மாணவர் சேர்க்கை நடைமுறை விதிகளை, வழக்கமாக ஏப்ரலில் வெளியிடுவர். இந்த முறை வெளியிடவில்லை. எல்லாம் முடிந்தபின், பொறுமையாக இப்போது வெளியிட்டுள்ளனர். இதனால், எந்தவித பயனும் இல்லை" என்றார்.

Leave a Reply