Showing posts with label velicham Students. Show all posts


புத்தாண்டுக்கு முதல் நாளோடு நமக்குள் அவசர அவரமாக போடப்பட்ட எத்தனையோ தீர்மானங்கள்  தோற்று போயிருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிய அனும்பவங்களிலிருந்துதான்  புதிய விசயங்களை கற்றுக்கொள்கிறோம்.

அன்னையின்  மடியில் தவழ்ந்த நிமிடங்கள் முதல் இப்போதுவரை ஒவ்வொரு நிமிடத்திலும் சில தவறுகளும், சறுக்கல்களும், தோல்விகளும் இல்லாமல் இல்லை இவற்றுக்கு பெயர்தான்  அனுபவம்.

இப்படியான பல அனுபவங்களில் தான் பயணமானது நம் பயணம்.
வெளிச்சம்  எத்தனையோ தோல்விகளையும், சறுக்கல்களையும் கண்டுள்ளது ஆனாலும் இந்த பொறுப்பு நமக்கு மட்டும்  என்று யோசிக்கும் போது நாம் பட்ட கஸ்டங்களை தவிர பலரின் கண்ணீரை துடைத்த  போது  அவர்கள் முகத்தில் காணப்படும் ஆயிரம் வாட்ஸ் சந்தோசத்திற்கு ஈடேதுமில்லை. அந்த நிமிடங்கள் தான் பல நேரங்களில் நொந்து கிடக்கும் நம்மை இன்னும் வேகமாக உழைக்க வைக்கிறது..

இப்படியான அனுபவங்களில் தான் ஒரு குழந்தையை போல பிறக்கிறது 2012 வருடம், பல புத்தாண்டு சந்தோசத்தில் அவரவர் விருப்பம் போல்  பட்டாசு கொளுத்தியோ, கேளிக்கை விடுதியிலோ, கொண்டாடக்கூடும் ஆனால் நாம்  நம்மை பரிசீலனை செய்து கொண்டு இன்னும் வேகமாக  இயங்குவதற்கு ஏதுவாக இந்த புத்தாண்டை கொண்டாடினோம்..

உயிரோடு நாம் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்.

தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்போம்..



புத்தாண்டும் மாணவியின் பிறந்த நாளும்


வெளிச்சம் செரின்

வெளிச்சம் கொடு


மகிழ்ச்சி பரிமாறல்







நாங்கள் படிப்பிருந்தும்,சீட் கிடைத்தும் தகுதியிழக்கயிருந்தவர்கள்.
குடிசை வீட்டில் எரிந்த சிமிலி விளக்குகளில் படித்து,
படிப்பையே கேள்வி குறியாக்கியவர்கள் ...
இன்று வெளிச்சம் அமைப்பால் வாழ்கை வெளிச்சம் பெற்றவர்கள்.
சகமனிதனை மனிதனாக நேசிக்கிற மனிதர்கள் உருவாக்குகிற
வெளிச்சத்தின் வழிகாட்டுதலில் உதயமாகிறது எங்கள் வாழ்கை பயணம்...

உறவுகளே!

சமூகத்தின் அவலங்களை கண்டுகொதிக்கும் நீங்களும் நானும் தோழர்கள் தான்..

நீங்கள் பாக்கெட்டில் பணமில்லாமல் என்றைக்காவது சாப்பிட போகாமல் பச்ச தண்ணியில் வயிறை நிரப்பி வாழ்கையை நடத்தியதுண்டா…

பர்சை தவறவிட்டுவிட்டு பணமில்லாமல் பஸ்ஸில் பயணம் பண்ணியிருக்கிறீர்களா…

ஊர் திருவிழாவில் உறவுகளை தொலைத்துவிட்டு விழிகளை நம்பி அழுது நின்றிருக்கிறீர்களா…

இந்த அவலங்களை அனுபவித்த நீங்கள்..

காலேஜி பீஸை இன்சால்மெண்ட்ல கட்டுவதற்கு டைம் கேட்டதுண்டா..அதையும்
கட்டமுடியாமல் காலேஜி பீஸ்கட்ட முடியாத உனக்கெல்லாம் எதுக்குடா படிப்புண்ணு அசிங்கப்பட்டதுண்டா….
ஹால்டிக்கட் கொடுக்காமல் ஆப்சண்ட் போட்ட கல்லூரியை
நியாயம் கேட்ட போது கல்லூரி நிர்வாக உங்களைப் பார்த்து “நா” கூசாமல் அவன் லீவு போட்டுட்டான் ,அவன் பரிச்சை எழுத வரவில்லைன்னு சொன்னதுண்டா…

சுதந்திரம் வாங்கி 63வருடம் கடந்த போதும் வீட்டுல அப்பா-ஆத்தா யாரும்
பள்ளிகூடம் பக்கம் கூட போகாத கூலிகளாய் கிடக்க..நீங்கள் கரணட் இல்லாத
வீட்டில் படித்து கல்லூரி கனவு கண்டதுண்டா..வலிகளும் வேதனைகளும்
அனுதினமும் ரணமாய் வலிக்க…..

இவை அனைத்தையுமோ சிலவற்றையோ அனுபவித்த எங்களை போன்ற ஏழைகள் படிக்க நினைப்பது தப்பா தோழர்களே…

எங்களை போன்ற 515 மாணவர்களை படிக்க வைக்க பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் பிச்சை எடுத்தும் வெளிச்சம் படிக்க வைக்கிறது…

நீங்கள் உங்களது பெற்றவர்களின் உதவியின் உழைப்பில்
படித்திருப்பீர்கள்…(உங்கள் DD கள் எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதும்)
உங்கள் உதவியில் மற்றவர்களை படிக்க வழி செய்யுங்கள்…                                     ( வெளிச்சம் மாணவர்களின் களப்பணியை மேலும் விரிவாக படிக்க)

உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்…..

நாம் பெற்ற கல்வி இச்சமூகத்திற்கு கல்விகொடுக்க பயன்படவில்லையெனில் நீ இருப்பதை விட இறப்பதே மேல் -என்கிறது வெளிச்சம்

கல்விகொடுக்க உறவாகிடுவோம் உதவிடுவோம்….
வெளிச்சம் மாணவர்கள்…




வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 


ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458



Contact Address :  
39/2  Foxen St, Perambur,Chennai-11
Email: velicham.students@gmail.com, 
Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org
          http://velichamstudents.blogspot.com


இந்த வார கல்கி இதழில் வெளிச்சம் மாணவர்களின் வாழ்க்கை இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! தலைப்பில் பிரசுரமாகியிருக்கிறது..  எம்மை பக்குவபடுத்த முழுவதும் படியுங்கள்... எம் வளர்ச்சிக்கு வழிகாட்டுங்கள்..



இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! 

‘பத்தாம் வகுப்பில் 382 மார்க்குகள் வாங்கிவிட்டு, குடும்பச் சூழ்நிலையால் மேலே படிக்க முடியாமல் ஒரு ஹோட்டலில் க்ளீனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என்னை, இதோ இன்று உங்கள் கண் முன்னே ஒரு பி.எல். மற்றும் எம்.ஏ. (சோஷியல் ஒர்க்) படித்த மாணவனாக மாற்றிக் காட்டியிருக்கிறது ‘வெளிச்சம்’ என கண்களில் வெளிச்சம் பொங்கப் பேசுகிறார் வெளிச்சம் மாணவர் அமைப்பின், மாணவர் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆனந்த குமார். என்னைப்போலவே இதுவரை ‘வெளிச்சத்தின்’ வாயிலாக பயன் அடைந்தவர்கள் 515 மாணவ,மாணவிகள்.
‘எப்படி ஏன் எதற்காக ‘வெளிச்சம்’ தோற்றுவிக்கப்பட்டது?’ என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, ‘2004 ஆம் ஆண்டு அரியலூர், பெரம்பலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள்ல ஷெரீன் ஆய்வு மேற்கொண்டாங்க. அந்த ஆய்வின்படி பார்த்தீங்கன்னா, கிராமப்புறத்துல இருக்குற மாணவர்களால, அவங்க குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியாத அவல நிலை இருப்பதையும், இதனால அவங்க கோயம்பேடு மற்றும் பெங்களூரு பகுதியில கூலித் தொழில் செய்ய, மூட்டை தூக்கன்னு போய் விட்டதையும் அவங்க கண்டுபிடிச்சாங்க.
மாணவர்கள் பாடு இப்படின்னா, மாணவிகள் சுமங்கலி திட்டம்ங்கற பேர்ல பஞ்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்க மூன்று அல்லது அஞ்சு வருஷம் வேலை செஞ்சிட்டு கைல மொத்தமா 30,000 அல்லது 40,000 ரூபாயோட திரும்பி வர்ற நிலை இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. வறுமையைக் காரணம் காட்டி ஒருவருக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கோடதான் 2004ஆம் ஆண்டு ‘வெளிச்சம்’ தொடங்கப்பட்டது.
‘வெளிச்சம்’ அமைப்பின் மூலம் மேற் கல்விக்கான உதவி பெற்று, நல்லபடியாகத் தாங்கள் விரும்பிய கல்வியைப் படித்து, தேறி, நல்ல வேலையில் அமர்ந்துள்ளவர்கள் ‘வெளிச்சத்துக்கான நிதி உதவியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் என்ற ஒருவரை அப்படி உதாரணத்துக்குச் சொல்லலாம். பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து மேலே படிக்க முடியாமல் இருந்தவரை ‘வெளிச்சம்’ காரைக்குடியில் உள்ள CECRIயில் சேர்த்துப் படிக்க வைத்தது. இன்று செந்தில், ஓமனில் ஜூனியர் ரிசர்ச் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். மாதா மாதம் தாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை ‘வெளிச்சத்துக்கு’ கொடுத்து வருகிறார்.
‘ உண்மையான, கல்வி தாகம் கொண்ட, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களை எப்படிக் கண்டுகொள்வீர்கள்? அல்லது அப்படிப்பட்ட மாணவர்கள் உங்களை எப்படித் தேடி வருவார்கள்?’
‘வெளிச்சத்தின் வழியாக இன்று தங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் பெற்றவர்களின் துணைகொண்டு கிராமங்களுக்குச் சென்று எங்கள் தேடுதல் பணியைச் செய்வோம். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு, மற்றும் அங்குள்ள பெரியவர்களிடம் தீவிர விசாரணை செய்த பிறகே தான் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது கல்வி தடையின்றித் தொடர வெளிச்சத்தின் வழி உதவி புரிவோம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, அவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களாக இருக்க வேண்டும், கல்வியின் மீது ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மதிக்கத்தக்கவர்களாக இருக்க வேண்டும், தாம் சார்ந்த கிராமத்தை, தான் கற்ற கல்வியால் முன்னேற்றம் அடையச் செய்பவர்களாக இருக்க வேண்டும். பணம் என்பது எதை வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. போதுமான பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு, கல்வியில் தடை ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே நோக்குதான் வெளிச்சத்தின் நோக்கமே’ என்கிறார் ஆனந்த குமார் ‘தொடர்ந்து உதவி பெற விரும்பும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இருட்டைத் தின்னும் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்திக் கொள்ளலாம்’ என்கிறார்.
- நளினி சம்பத்குமார்

எங்களை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெளிச்சமாக்க தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரான வெளிச்சம் செரீன் அவர்களின் வாழ்க்கையை ராணி இதழில் வெளியான கட்டுரையை படிங்க..


கறுப்பு நிறக் கடவுள்களை கையெடுத்துக்  கும்பிடும் நாட்டில்..கறுப்பாக இருந்ததாலே கறுப்பி, பிளாக்கி என பலவித ஏளன சொற்களால் வேட்டையாடப்பட்டவள் அந்தச் சிறுமி. பள்ளிக்கூடத்திலும், குடும்பத்திலும் புறக்கணிக்கப்பட்டாள்.

இன்று பெரிய மனுசி ஆகி, ‘வெளிச்சம்’ என்ற அமைப்பை தொடங்கி, பலருடைய வாழ்க்கையில் கல்வி விளக்கேற்றி வருகிறார். அவரது பெயர் ஷெரின். ஜீன்ஸ் பேன்ட்- சட்டை சகிதம் இருக்கும் அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

நரகம் 

என் பெற்றோருக்கு பூர்வீகம் நாகர்கோவில். நான் பிறந்து வளர்ந்தது கேரளாவில் உள்ள இடுக்கியில்! அங்கு தமிழர்கள் அதிகம். பள்ளிகள் குறைவு. இருக்கும் ஒன்றிரண்டு பள்ளிக்கூடங்களும் அதிக தொலைவில் இருந்ததால், பெண்கள் படிப்பது சிரமமானதாக இருந்தது.

இதனால், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையும். அதன்பின் 12-ஆம் வகுப்பு வரை மதுரை ராயன்பட்டியில் ஒரு ஆங்கில பள்ளியிலும் படித்தேன் அங்கு நான் மட்டுமே விடுதியில் தங்கினேன். இதனால் ஆதரவற்றவள் என்று நினைத்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாகவே, என்னை பயன்படுத்தினார்கள். விட்டு வேலைகளையும் செய்ய வைத்தார்கள்.

என் கறுப்புநிற தேகத்தை வைத்து சக மாணவிகள் என்னை கடுமையாக கேலி செய்வார்கள். இதனால் பள்ளி வாழ்க்கை நரகமா இருந்தது.    

அப்பாவுக்கு இடுக்கியில் சொந்தமாக ஏலக்காய் எஸ்டேட் இருந்தது. அவர் என்னிடமோ, அம்மாவிடமோ  அன்பாகவே நடந்து கொள்ள மாட்டார். மதுரையில் தங்கி படித்த போது என்னை பார்க்க எப்போதாவதுதான் வருவார்.

படிப்பு முடிந்தும்  ஒரு வருடம் விடுதியில் வார்டனாக வேலை செய்தேன். பின்னர் மதுரையில் ‘மார்க்கெட்டிங்; நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது பல ஆண் வாடிக்கையாளர்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

மாற்றிய மண்டேலோ வரிகள்
தற்செயலாக ஒரு நாள் கறுப்பர் இனத்தலைவரான நெல்சன் மண்டேலோவின் மேற்கோள் வரி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. ‘ உன்னை நீ சரியாக உணரும்போது, இந்த உலகம் உன் புறத்தோற்றத்தை மறந்துவிடும்’ -  என்ற வரி எனக்காகவே சொல்லப்பட்டதாக  போல் இருந்தது.  எனது மனதை மாற்றியது.

யாராவது என்னிடம் ‘கேரளாவில் பிறந்து, ஏன் இப்படி கறுப்பாக இருக்கிறாய்?’என்று கேட்கும் போது பதில் ஏதும் பேசாமல் தலைகுனிந்து சென்றுவிடுவேன். இந்த வரியை படித்தபிறகு, இதுபோல் கேட்கின்றவர்களிடம், ‘கென்யாவில் இருந்து வருகிறேன்’ என்பேன். ‘ன்யாவில் இவ்வளவு அழகான பெண்கள் இருக்கிறார்களா?’ என்று அதிசயமாக பார்ப்பார்கள்.

திடீரென மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். பணி நிமித்தமாக சேலம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றேன். அங்கு ஒரு சிறுமி ‘ இந்த பகுதியில் குடிநீருக்காக ஏழைப் பெண்கள் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேரிடுகிறது. என்ற பயத்துடன் கூறினாள். அதையடுத்து  இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

காதல் மணம்- கைது
2002-இல் எனக்குத் திருமணம் நடந்தது.  அது காதல் மணம். கணவரின் சொந்த ஊரான அரியலூரில் இல்லற வாழ்க்கையை தொடங்கினோம். அப்போது, புதுச்சேரியில் என் கணவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதற்காக, அவரையும், தேவையே இல்லாமல் என்னையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

ஐந்தரை மாதம் சிறையில் வாடினேன், விடுதலைக்கு பின் தங்குவதற்கு  வாடகை வீடுகூட கிடைக்கவில்லை. அதனால் அரியலூருக்கே சென்றோம். கழிவறை, குடிநீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் அது. அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தேன்.

அதே ஆண்டில், ஒரு நாள் என் கணவர் மீதான பழைய வழக்கில் நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போது, நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனாலும், போலீசார் இரக்கம் காட்டவில்லை.

கரடு முரடான பயணங்கள்
விடுதலையான பின்னரும் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சென்னை வர நேர்ந்தது. அப்படி வரும்போதெல்லாம் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களோடு சேர்ந்து தங்கிவிடுவேன்.

அந்த நேரத்தில் பெங்களூரில் செயல்படும் ‘நேசா’ என்ற அமைப்பு. அரியலூர் பகுதியில் செய்த சமூகப் பணிகளுக்காக எனக்கு 3 ஆண்டு கால உதவித் தொகை வழங்க முன்வந்தது.

அதை பயன்படுத்தி இரவுப் பாடசாலை, ஆளுமை பயிற்சி, வாழ்க்கைப் பயிற்சி  எனப் பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினேன்.

12- ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற செந்தில் என்ற மாணவர் என்னிடம் வந்து, வசதி இல்லாததால் மேல்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருப்பதாக முறையிட்டார். அவருக்கு உதவிகள் பெற்றுக் கொடுத்தேன். அதன் தாக்கத்தால், பணம் இல்லாத ரணத்திற்காக ஒருவருடைய படிப்பு தடைப்பட க் கூடாது என்று ‘வெளிச்சம்’ என்ற அமைப்பைத் தொடங்கி செயல்படலானேன். அந்த நேரத்தில் உதவியாக இருக்க வேண்டிய குடும்பத்தாரும் தொல்லைகள் தரத் தொடங்கினார்கள். என் மீது சந்தேகம் கொண்டார்கள்.

அந்த காலக்கட்டத்தில் தேசிய அளவிலான இரண்டு தன்னார்வ அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகள் எனக்கு தரப்பட்டன. குடும்பத்தாருக்கு அது பிடிக்கவில்லை. அதனால் இரண்டு பொறுப்புகளில்  இருந்து விலகினேன்.

ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். தங்க இடமில்லாமல் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கினேன்.

வெளிச்சம்
எங்கள் உதவியால் படித்த மாணவர் ஒருவர், என் நிலைகுறித்து பத்திரிக்கையில் எழுதினார். அதற்கு பிறகு நிறைய பேரிடம் இருந்து உதவி கிடைத்தது. இதனால் என் சேவை அமைப்பின்  செயல்பாடுகள்  விரிந்தன.
என்னால்  உதவி  பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 500-க்கும்  மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என உருவாகி இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வியடையும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது அதிகரித்திருப்பதால் ‘ஹெல்ப் லைன்’ அமைத்து, ஆலோசனை வழங்குகிறோம். பல பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

மாறுங்கள்
பெண்களுக்கு  நான் சொல்லிக் கொள்வது இதுதான்…! நம்மை முடக்க நினைக்கின்றவர்கள், பாலியல் ஒழுக்கம் குறித்து கட்டுக்கதைகளைத்தான் கிளப்பிவிடுவார்கள். ராணி மங்கம்மா காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது.

பெண்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநோயாளிகள்தான் இப்படிச் செய்தார்கள். அவர்கள் கோழைகளாத்தான் இருப்பார்கள். நாம் அதிரடியாக செயல்பட்டாலே பின்வாங்கிவிடுவார்கள்.

பொதுவாக நான் யார் எப்படிப் பேசினாலும் கவலைப்பட மாட்டேன். அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே சிறந்தது. திக்கு  தெரியாத இருட்டில் இருந்த நானே பலருக்கும் இன்று ‘வெளிச்சம்’ தருபவளாக மாறி இருக்கும்போது, உங்களால் எவ்வளவு பேருக்கு வெளிச்சத்தை வாரி வழங்க முடியும் பெண்களே…? யோசியுங்கள்...துணிந்தால் தொலைவும் கூட தூரமில்லை”- உணர்ச்சிப் பெருக்குடன் முடிக்கிறார் ஷெரின்.





'''இன்ஜினீயரிங் படிப்புக்கு எதிர்காலம் கிடையாதா?' என்றெல்லாம் அக்கறையாக ஆராய்ச்சி செய்பவர்கள், என் போன்ற பி.எட் மாணவிகளின் கண்ணீரையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்..''
- தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து ஒரு கிராமத்து மாணவி நமக்கு எழுதியிருந்த கடிதம் இது. கடிதம் படித் ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நெஞ்சை உருக்கி யது அந்த ஏழைப் பெண்ணின் பேச்சு.
''எங்க ஊருலயே நான்தானுங்க நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா, இன்ஜினீயரிங் மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிற நிலைமையில எங்க வீடு இல்லைங்க. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான். பி.எட் படிச்சு டீச்சரானா போதும்னு நான் ப்ளஸ் டூ படிக்கும்போதே அம்மா முடிவெடுத்துட்டாங்க. நானும் டீச்சர் ஆகி, அம்மாவை சந்தோஷப்படுத்தணும்னு உறுதி எடுத்துக்கிட்டு பி.எஸ்சி படிச்சேன். பி.எட் ஸீட்டுக்காக ஒரு காலேஜ்ல 70 ஆயிரம் கேட்டாங்க. எங்க அம்மாவும் டீச்சர் வேலை கிடைச்சுடும்ங்கிற நம்பிக்கையில கொஞ்ச நஞ்சம் இருந்த நகைகளை வித்து பணத்தைக் கட்டினாங்க.
இப்போ, கிளாசுக்குள்ள நுழைஞ்ச பிறகுதான் எனக்கு உலகமே தெரியுது.. தமிழ்நாடு முழுக்க நூத்துக்கணக்குல தனியார் பி.எட் காலேஜுங்க இருக்காம். அதுல இருந்து வருஷத்துக்கு கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேரு வெளிய வருவாங்களாம். அவங்கள்ல அஞ்சு சதவிகிதம் பேருக்குக் கூட கவர்மென்ட்டால வேலை கொடுக்க முடியாதாம். சரி, கவர்மென்ட் உத்தியோகம் வேண்டாம்.. தனியார் ஸ்கூல்லயே டீச்சரா போகலாம்னா, அங்கல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல தர்றதில்லையாம். இதுக்காகவா நான் நாலு வருஷம் காத்துட்டிருந்தேன்? இதுக்காகவா எங்க அம்மா தாலியை வித்தாங்க?'' - அந்தப் பெண் பேசப் பேச, நமக்குள் என்னவோ செய்தது.
பி.எட் காலேஜ் பற்றி அந்தப் பெண் சொல்வது உண்மையா? - சில அனுபவசாலிகளிடம் விசாரித்தோம்.
''எல்லாமே உண்மைதாங்க..'' என்று ஆரம்பித்தார், சென்னையைச் சேர்ந்த பி.எட் மாணவி ஒருவர். இவர் ஏற்கெனவே தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான 'டீச்சர் டிரெய்னிங்' படிப்பை முடித்துவிட்டு, அதில் பலன் ஏதும் இல்லாததால் டிகிரியையும் முடித்து, தற்போது பி.எட் படித்துக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''நான் நிறையவே அனுபவப்பட்டுட்டேங்க.. முன்னேயெல்லாம் அரசுக் கல்லூரிகள்லயும் அரசு உதவி பெறுற கல்லூரிகள்லயும்தான் பி.எட் இருக்கும். தமிழ்நாடு முழுக்க மொத்தமே 1,000 ஸீட்தான் இருக்கும். அதுல ஒருத்தரா செலக்ட் ஆகுறது பெரிய விஷயமா இருந்தது. ஆனா, ஸீட் கிடைச்சுப் படிச்சுட்டா, ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கண்டிப்பா வேலை கிடைச்சுடும்னு ஒரு நிச்சயம் இருந்துச்சு. 'பொண்ணை பி.எட் மட்டும் படிக்க வச்சுடுங்க.. நகை, பணமெல்லாம் கூட வேண்டாம்'னு அப்போ சம்பந்தமே பேசுவாங்கன்னா பார்த்துக்கங்களேன்..
ஒரு பி.எட் ஸீட்டுக்கு எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லைனு சில பேர் குறுக்கு வழியில ஸீட் வாங்குற கூத்தும் அப்போ நடந்தது. ஆனா, 2003-ம் வருஷத்துக்கு அப்புறம் யாரு வேணும்னாலும் பி.எட் காலேஜ் ஆரம்பிச்சுக்கலாம்னு ஆயிடுச்சு. அவ்வளவுதான்.. 'லட்சக்கணக்குல தர வேண்டாம். அறுபதாயிரம், எழுவதாயிரம் தந்தா போதும். நாங்க உனக்கு பி.எட் டிகிரியைத் தர்றோம்'னு தனியார் காலேஜ்காரங்க வியாபாரம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
சரி, இப்படி தனியார்கிட்ட வாங்குற டிகிரிக்கும் கவர்மென்ட் டிகிரிக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா, ஒண்ணுமேயில்ல.. வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சு வச்ச சீனியாரிட்டி அடிப்படையிலதான் வேலை கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லிடுச்சு. முன்னே ஒரு வருஷத்துக்கு 1000 பி.எட் மாணவர்கள் படிப்பை முடிச்சுட்டு வெளிய வந்தாங்கன்னா, இப்போ கிட்டத்தட்ட அறுபதாயிரம் மாணவர்கள் வர்றாங்க. ஆனா, அரசாங்க வேலை என்னவோ வருஷத்துக்கு 3,000 பேருக்குக் கூட கிடைக்கிறதில்ல..
பெரும்பாலும் பொண்ணுங்கதான் பி.எட்-ஐ விரும்பிப் படிக்கிறாங்க. அதனால இதுல அதிகம் பாதிக்கப்படுறதும் அவங்கதான். எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்கா2004-ம் வருஷம் பி.எட் முடிச்சாங்க. இப்ப வரைக்கும் அவங்களுக்கு வேலை கிடைக்கலை. அவங்களுக்கு அப்புறம் நூத்துக்கணக்கான தனியார் காலேஜ்ல பி.எட் முடிச்சவங்களே கிட்டத்தட்ட மூணு லட்சம் பேர் இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சு, எனக்கு எப்போ வேலை கிடைக்கும் நினைச்சாலே தலையை சுத்துது. வேலை கிடைக்காதுங்கறது கூட பெரிய விஷயமா தெரியல.. இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை'' என்று காட்டமாகவே பேசி முடித்தார் அவர்.
தனியார் கல்லூரிகள் பற்றிப் பேசினாலே கொதித்துப் போகிறார்கள் முன்னாள் மற்றும் இன்னாள் பி.எட் மாணவ- மாணவிகள். ஆனால், பெயரையோ புகைப்படத்தையோ வெளியிட யாருமே முன்வரவில்லை. அந்த அளவுக்குப் பெரிய இடத்துப் பொல்லாப்பு இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு பி.எட் பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பாஸ்கரனிடம் இதைப் பற்றி விவாதித்தோம். ''கடந்த நாலு வருஷமா நிறைய தனியார் நிறுவனங்கள் இந்த பி.எட் 'பிஸினசு'க்குள்ள வந்துடுச்சு. இன்ஜினீயரிங் மாதிரி பி.எட்-ம் வேலை கொடுக்கும்னு அவங்க விளம்பரம் பண்றாங்க. அதையெல்லாம் மக்கள் நம்பக் கூடாது. ஏற்கெனவே லட்சக்கணக்கான பி.எட் பட்டதாரிகள் க்யூவுல நிக்கிறாங்க. இதுல அரசாங்கப் பள்ளிகள்ல 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்ங்கற விகிதாசாரம் மாறி, இப்போ 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போதும்னு முடிவெடுத்துட்டாங்க. இந்த உண்மைகளை மக்கள் புரிஞ்சுக்கணும்'' என்றார்.
''சரி, இத்தனை பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?'' தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடமே கேட்டோம்.. ''கல்லூரிகளுக்கு அனுமதியை தமிழக அரசு மட்டுமே கொடுப்பதில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ)தான் அனுமதி கொடுக்கிறது. தமிழக அரசு மட்டுமே அதைத் தடுத்து நிறுத்தி விட முடியாது'' என்றார் அவர்.
பெங்களூருவில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் மட்டுமே வெகு ஜாக்கிரதையாகப் பேசினர்.. ''ஏற்கெனவே புதுவை, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா, அரியானா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டதால் நெருக்கடி முற்றி, பிரதமர் வரை புகார்கள் பறந்து விட்டன. அதனால், அந்த ஏழு மாநிலங்களில் இனி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலே அறிவித்திருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் அந்த நெருக்கடி ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை'' என்றார்கள் அவர்கள்.
இதற்கெல்லாம் தனியார் கல்லூரிகள் என்ன பதில் சொல்கின்றன என்பதை அறிய செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ரங்கபூபதி பி.எட். கல்லூரி சேர்மன், பூபதியிடம் பேசினோம்.. ''முறைகேடுகள் கல்லூரிகளில் மட்டுமல்ல.. சமூகத்தில் எல்லா தளத்திலும் நடக்கிறது. அதைப் பற்றி என்னிடம் கருத்து ஏதுமில்லை'' என்றவர், தொடர்ந்தார்..
''பி.எட் கல்லூரி நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், பி.எட் படித்தவர்கள் தமிழக அரசு வேலையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை.. அவர்கள் டுடோரியல் கல்லூரி நடத்தலாம், டியூஷன் எடுக்கலாம், வெளி மாநிலத்திலும் வெளி நாட்டிலும் ஆசிரியர்களாக வேலை பார்க்கலாம்.. அதனால் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது தவறில்லை' என்றுதான் சொல்லப்பட்டது. எனவே, பி.எட். பயின்றாலே, ஆசிரியராக அதிலும் அரசுப் பள்ளிகளில்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் சில தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளே திறமையான பி.எட் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன'' என்றார்.
பி.எட் முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் ஜெயந்தியிடம் இதைச் சொன்னபோது விரக்தியான புன்னகைதான் முதல் பதிலாக வந்தது. ''தனியார் கல்வி நிறுவனங்கள்ல இன்னிக்கு என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? வெளிய ஆயிரக்கணக்கான பேர் அதே வேலைக்காகக் காத்திருக்கும்போது, ரொம்ப குறைவான சம்பளத்தைத்தான் தனியார் எல்லாரும் தருவாங்க. நாம அதுக்கு சம்மதிக்கலைன்னா, வேற ஒருத்தவங்க அங்கே வர ரெடியா இருப்பாங்க. டியூஷன் எடுக்குறதெல்லாம் நிலையான வருமானமா? டுடோரியல் நடத்த யார் லோன் தருவா? இந்த பிராக்டிகல் கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்!'' என்று பெருமூச்சோடு முடித்தார் அவர்.
சென்னை மாணவி சொன்ன அந்த முத்தான வாக்கியங்கள்தான் மீண்டும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டன.. ''இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை!''


ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர், சேலம்:
''பி.எட் படிக்கிறவர்கள் எந்த சப்ஜெக்ட் படிக்கிறார்கள் என்பதிலும் விஷயம் இருக்கிறது. தற்போதைய நிலையில், ஆங்கில இலக்கியம், கணக்கு மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு எதிர்காலம் நன்றாகவே உள்ளது. எனவே, மாணவ மாணவிகள் டிகிரி படிக்கும் போதே பி.எட்-க்கான தேவை என்ன என்பதை அறிந்து பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்''
பேராசிரியர் ஆரோக்கிய சாமி, முதல்வர், ஞானமணிகல்வியியல் கல்லூரி, ராசிபுரம்:
''வெளி நாடுகளில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இருக்கிறது. ஆனால், இங்கே 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். அது மாற்றப்பட்டால் வேலை இல்லை என்ற பிரச்னை ஓரளவு தீரும்.''


நன்றி: அவள் விகடன்

ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை வங்கிக்கடனை நம்பி தொடர்ந்த ,மாணவர்களின் கல்விக்காக உண்டியல் ஏந்திய வெளிச்சம் அம்பலபடுத்திய கல்விக்கடன் பற்றிய மோசடி அவள் விகடனில் வெளியானது ... உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...






  



சக மனிதனை மனிதனாக நேசிக்க கல்வி கொடுக்கும் வெளிச்சம்.



"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"  

என்கிற வரிகளுகக்கு இணங்க ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுக்கவும், சாதி, மதம் இனம், பால்ரீதியாக ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு உதவிடும் நோக்கில்,  வெளிச்சம் செரின்  என்கிற சமூக ஆர்வலரின் முயற்சியில் துவங்கப்பட்டதுதான் வெளிச்சம் அமைப்பு.


வெளிச்சம் ஆரமிக்கப்பட்டபோது எமது பணியை யாரும் பாராட்டிவிடவில்லை, மாறாக அவமானங்களே வெகுமதியாக கிடைத்த நிலையில் வெளிச்சம், எடுத்த பணியை கைவிடாமல் உழைத்துக்கொண்டிருந்த பொழுதுதான், முதன்முதலாக அரியலூர் மாவட்டத்திலுள்ள பிழிச்சிகுழி  கிராமத்தை சேர்ந்த செந்தில் என்கிற மாணவன், பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுத்த நிலை, வறுமை காரணமாக, மேற்கொண்டு படிக்க முடியாமல்  முந்திரிகொட்டை பறித்து கொண்டிருந்தான். அவனை விசாரித்த பிறகு, எமது அமைப்பின் சார்பாக உயர்கல்வி குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர்,  தர்மபுரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் வறுமையின் காரணமாக  படிப்பை நிறுத்திவிட்டு, முந்திரிகாடுகளிலும், கோயம்பேடு மார்கெட்டுகளிலும் கூலி வேலை செய்வதை கண்டறிந்தோம். அப்படி கூலிகளாகி போனவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியனதை கண்டு  துடித்தார் எமது அமைப்பாளர் வெளிச்சம்  செரின்.   இந்த அவலத்தை தடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்து அதற்கான திட்டத்தை வகுத்து களப்பணியில் ஈடுபட்டார்.
முதல் மாணவனான செந்திலை மேல்படிப்பு படிக்க வைப்பதில் ஆரமித்த "வெளிச்சத்தின்" பயணம் இன்றுவரை தொடர்கிறது..

காரைக்குடி சென்ட்ரல் கெமிஸ்டி ரிசர்ச் இன்ஸ்ட்டியூடில் (சிக்ரி) கெமிக்கல் இஞ்சினியரிங்க் முடித்த செந்தில் இப்போது ஓமன் நாட்டில் ஜுனியர் சயிண்டிஸ்ட் பணியில் இருக்கிறார் என்பது வெளிச்சத்தின் முதல் வெற்றி.  அதன் பிறகு 718 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளிச்சம் உயர்கல்விக்கு உதவி இருப்பதையும், அதன் வலிகளையும் உங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்…

எமது நோக்கம்.

சக மனிதனைக்காக துடிதுடித்து போகும் இயல்பான மனித குணத்தை, தக்கவைத்து கொள்ளவும், சகமனிதனை அவனும் மனிதன்தான் என நினைத்து நேசிக்கவேண்டும் அதையும் எம்மால் முடிந்த வரை உருவாக்க வேண்டும். கூடவே  பணம் இல்லை என்கிற ஒற்றை காரணத்தால், எந்த ஒரு மாணவனும், அவர்களுடைய கல்வியை இழந்துவிடாமல் அவர்களுக்கு உயர்கல்விகிடைக்க வைப்பதுதான் வெளிச்சத்தில் நேக்கமானது..

718 முதல் தலைமுறை மாணவர்கள் வாழ்வை மாற்றிய வெளிச்சம்..  

நாங்கள் படிக்க வைக்கிற மாணவர்கள் யாரென்றால், இந்தியா சுதந்திரமடைந்து இவ்வளவு காலமாகியும், இவர்கள் குடும்பங்களிலிருந்து, யாரும் ஸ்கூல்பக்கம் கூட போகாதவர்கள். ஆம் பள்ளிக்கூடம் பக்கம் மழைக்காகவும் ஒதுங்காத அப்பா-அம்மாக்களுக்கு பிறந்த முதல் தலைமுறை மாணவர்கள்.
வெளிச்சம் மாணவர்களுக்கு கல்விக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல், கூடவே சமூக கடமைகளையும் போதிக்கிறோம். ஏனெனில் இந்த மாணவர்கள் படித்து,  அவர்கள் வளர்ந்த  கிராமத்திற்கும் – இந்த சமூகத்திற்கும் திரும்பி செய்யவேண்டும். (Pay Back to the society).  வெளிச்சத்தின் மூலம் படிக்கும், படித்த மாணவர்கள், தங்களைபோல் கஸ்டப்படும் மற்ற மாணவர்களுக்கு கட்டாயம்  உதவ வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.


"செந்தில்" என்கிற மாணவனில் ஆரமிக்கப்பட வெளிச்சத்தின் பயணம் இன்று 718  மாணவர்களை பட்டதாரிகளாக்கி அவர்களின் தலை எழுத்தை மாற்றி எழுதியிருக்கிறோம். அதில்  96 மாணவர்கள் பொறியியல் பயிலும் மாணவர்கள், 11 மருத்துவ மாணவர்கள் என மற்ற மாணவர்கள், தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்..
எல்லா மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வருகிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி..

வெளிச்சம் நிதி சேகரிக்கும் வழிமுறை: 

இன்றுவரை வெளிச்சம் சுமார் ஒன்றை கோடி ரூபாய் வரை, நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டி, சம்மந்தப்பட்ட மாணவர்களின் கல்லூரியின் பெயரில்    "காசோலை"  (Demand Draft ) ஆக கல்லூரிக்கு  அனுப்புகிறோம்.. மேலும்  வெளிச்சம் எந்த வகையிலும் பணத்தினை கையில் வாங்கியதில்லை. அதன்காரணமாகவே வெளிச்சத்தின் கஸ்டங்களையே சுமந்தாலும் இன்றுவரை பணி தொடர முடிகிறது.





 ஒரு கட்டத்தில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராத நிலையில், கடந்த 2009ம் ஆண்டு சென்னை நகரங்களின் பல்வேறு இடங்களில் வெளிச்சத்தின் மூலம் படித்த முன்னால் மாணவர்கள்  40 பேர், தற்போது படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களுக்காக உண்டியல் ஏந்தினார்கள். அதில் கிடைத்த பணத்தை கொண்டு  38 மாணவர்களுக்கு கல்லூரிக்கட்டணம் கட்டினார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தகவலை “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியிட்ட பின்னர்தான், தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும் மாணவர்களின் கல்விக்காக உதவும் உள்ளங்களை தேடி அழையும் வெளிச்சம் தனது அன்றாட நகர்வு என்பது சில நெருங்கிய நண்பர்கள் செய்யும் உதவியிலும், வெளிச்சத்தின் முன்னால் மாணவிகள் சிலர் எம்ராயிடரிங்க்,  சுடிதார் தைக்கின்றார்கள். அதில்கிடைக்கும் வருவாயில்தான் வெளிச்சத்தின் அன்றாட பணிகள் தொய்வில்லாமல் நடைபெருகிறது...

வெளிச்சத்தின் நீண்ட கால திட்டம்: 

ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 718 ஐ கடந்து நிற்கிறது.. நிச்சயம் இந்தப்பட்டியல்  நீளுமே தவிர நின்று விடக்கூடாது.. உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் என்கிற  நோக்கில் செயல்படும் எமக்கு ஏழைகளின் உயர்கல்விக்காக உதவுங்கள். எங்கள் சமூகப்பணியில் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.  (Form) 
                                                                                          நன்றியுடன்,
வெளிச்சம் மாணவர்கள்..
எமது வங்கி கணக்கு விபரம்: 
ACCOUNT NAME:   " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458
Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org