Showing posts with label கற்பழித்த மாணவர்கள். Show all posts



வா
ழ்வை மேம்படுத்த உதவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாக அன்றி அழிவுப்பாதைக்குப் பயன் படுத்தி​னால் என்னவாகும் என்பதற்கு மறுபடி ஓர் உதாரணம். இந்தமுறை பரிதாப இலக்கு ஒரு மாணவி! 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தென்னம்பட்டி கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள் ஒன்பது வயதான பார்வதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அதே ஊரில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான் ரவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). .  கடந்த 21-ம் தேதி, பார்வதியை பலாத்காரம் செய்ததாக ரவி கைது செய்யப்பட... அதிர்ந்து நிற்கிறது திண்டுக்கல் வட்டாரம்!

மருத்துவப் பரிசோதனைக்காக வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மலங்க, மலங்க விழித்தபடி காத்திருந்த சிறுமி பார்வதியிடம் பேசினோம்.

''அண்ணே... நான் நாலாப்பு படிக்கிறேன். அன்னிக்கி ஆய் உக்கார்றதுக்காக அந்தப் பக்கமா போனேன். அப்ப அந்த அண்ணா வந்துச்சு. ' உன்னை கூப்புட்டு வரச்சொன்னாங்க’ன்னு கூப்புட்டுச்சு. நான் வர மாட்டேன்னுட்டேன். உடனே, என்னை அடிச்சு இழுத்துட்டுப் போச்சு. நான் அழுதுகிட்டே சத்தம் போட்டேன்.. உடனே அந்த அண்ணன் கர்ச்சீப்பை எடுத்து என் வாயில் வெச்சு அமுக்கிடுச்சு. 'நான் சொல்றபடி கேக்கலைன்னா கொன்னுடுவேன்'னு கழுத்தைப் பிடிச்சு அமுக்கிச்சு. அப்புறம் என் துணிகளை...'' (அதற்கு மேல் சொல்வதற்கு அந்தக் குழந்தைக்கும் தெளிவில்லை... கேட்க நமக்கும் தெம்பில்லை) என்றபடி அழத் தொடங்கினாள் பார்வதி.
அந்தச் சிறுமியே  தொடர்ந்தாள்.

''கர்ச்சீப் கீழே விழுந்ததும் நான் கத்துனதைக் கேட்டு விறகு வெட்ட வந்தவங்க ஓடி வந்தாங்க. உடனேஅந்த அண்ணா டவுசரை தலையில மாட்டிக்கிட்டு ஓடிடுச்சு. நான் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னேன்'' என்றபடியே நினைவுகள் தந்த நடுக்கத்தோடு தன் தாயாரை அணைத்துக் கொண்டாள்.
சிறுமியின் தாய் ஈஸ்வரி, ''நாங்க அன்னாடு கூலிக்குப் போனாதாங்க கஞ்சி. எங்களுக்கு ரெண்டு பொட்டப் புள்ளைங்க. இவதான் மூத்தவ. டவுனுபள்ளிக்கூடத்துல படிக்க வெக்க வசதியில்லாம உள்ளூர்ல படிக்க வெச்சோம். நாலாப்பு படிக்கிற பிள்ளையை இப்படி செஞ்சிப் புட்டானே... இவ தலையெழுத்து... எந்த தப்பும் பண்ணாம இந்த வயசுலயே போலீஸ், கோர்ட்னு அலைஞ்சு இன்னும் அவமானப்பட வேண்டியதாப் போச்சு'' என்றபடி தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கீதா, ''இந்த பிரச்னைக்குக் காரணமான அந்தப் பையன் இப்ப சீர்திருத்தப் பள்ளிக்குப் போயிட்டான். இதுக்கெல்லாம் காரணமே செல்போன்தான். அந்த ஊர்ல இருக்குற சில பசங்களோட செல்போன்ல ஆபாசப் படங்களை பார்ப்பானாம். அன்னிக்கும் அப்படி ஒரு படத்தைப் பாத்துட்டு இருந்தப்பதான், இந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கான். உணர்ச்சி வேகத்தில் இப்படிக் கேவலமா நடந்துக்கிட்டான். விசாரணை செய்றப்ப இதைத்தான் சொல்லிச் சொல்லி அழறான். 'இனிமே அசிங்கமான படத்தைப் பாக்க மாட்டேன். இப்படி நடந்துக்க மாட்டேன்'னு கதறி குமிச்சான். அவனைப் பெத்தவங்களும் தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிக்கட்டும்னு கோபத்தில் போயிட்டாங்க. எத்தனை பேருக்கு எவ்வளவு அவமானம், வேதனை பாருங்க'' என்றார்.

அறியாத வயதிலேயே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுவது குறித்து மனநல மருத்துவர் அன்னராஜிடம் கேட்டோம். ''இன்டர்நெட்டில்  கொட்டிக்கிடக்கும் குப்பைகள்தான் முக்கியக் காரணம். அவற்றையும் மொபைல் போன்கள் மூலம் பரிமாறிக் கொள்ளும் அசிங்கங்களையும் பார்க்கும்போது, வயது வித்தியாசம் இல்லாமல் வக்கிர எண்ணங்கள் தூண்டப்படுவது இயற்கைதான்.  
வயதில், வலிமையில் குறைந்த பெண்ணாக இருப்பதால் வெளியே சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் இந்தத் தவறை செய்து இருக்கிறான் அந்தப் பையன். அந்தப் பெண் குழந்தைக்கு உடனடியாக உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கா விட்டால் வாழ்க்கை முழுவதும் கூட இந்தப் பாதிப்பு மனதைவிட்டு அகலாது.

அந்தப் பையனுக்கும் உளவியல் சிகிச்சை அவசியம். இல்லா விட்டால் எதிர்காலத்தில் குற்ற உணர்வும், சீர்திருத்தப் பள்ளியின் சூழலும் அவனை மிகப்பெரிய குற்றவாளியாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாகவே செல்போன், இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டும். பள்ளிகளிலும் உளவியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், கட்டவிழ்ந்து கிடக்கும் அறிவியல் வளர்ச்சியால் இளம் சமுதாயத்துக்கு கெடுதலே அதிகம் மிஞ்சும்'' என்றார்.
வரங்களே சாபங்களாக மாறாதிருக்க, கூடுதல் கவனம் தேவைதானே!

- ஆர்.குமரேசன்
படங்கள்: வி.சிவக்குமார்


நன்றி: ஜூனியர் விகடன். 29 ஜூலை 2012


கல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து அரங்கேறி வரும் அவலங்களைப் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மேலிடுகிறது.

 பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையிலேயே கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற மாணவன்; உடன் பழகிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளைச் சூறையாடிய மாணவர்கள்; 'பஸ் தினம்' என்ற பெயரில் அரசுப் பேருந்துகளின் மீது கல்லெறிந்து நாசமாக்கி, பொதுமக்களையும் போலீஸாரையும் காயப்படுத்திய மாணவர் கூட்டம்... இவை எல்லாமே, அடுத்தடுத்து வெளியான செய்திகள். இதே நாட்களில்தான், படிப்பின் மீது கொண்ட விரக்தி, பயம் காரணமாக மாணவன் ஒருவன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட தகவலும் வெளியாகி இருக்கிறது.

'இங்கேதான் தவறு' என்று இடம்சுட்டிப் பொருள் விளக்க முடியாத அளவுக்கு கல்வித் தாயின் உடலெங்கும் புரையோடிப்போய் இருக்கின்றன கண்மூடித்தனமான காயங்கள். ஒழுக்கம் என்பது கற்பவர்களுக்கு மட்டுமல்ல... கற்பிக்கும் ஆசான்களுக்கும் அதிஅவசியம் என்பதுதான் காலம் காலமாக இருந்துவந்த நிலைமை. ஆனால், அரசாங்கம் தொடங்கி, கல்விக்கூடங்கள் வரையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களில் எதுவுமே ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை. அவையும்கூட, மதிப்பெண் சார்ந்தவையாகவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சாமர்த்தியம் சார்ந்தவையாகவும்  மாறிப்போயிருக்கின்றன!

இன்னொரு பக்கம், புகழ்பெற்ற பல தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மட்டுமல்ல... அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் மரியாதையும்கூட ரொம்பவே சிறுத்துப்போய் இருக்கிறது!

மாணவனின் வாழ்க்கை என்பது அவன் வாங்கும் மதிப்பெண்களில் மட்டும் ஊசலாடும் விதமாகக் கல்விமுறையை வைத்திருப்பதால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட, அவன் வாழ்க்கையே அறுந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டதுபோல பெற்றோர் காட்டும் பதற்றம், அப்படியே மாணவர்களையும் தொற்றிக்கொள்கிறது.

'பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் வெற்றி காட்டாவிட்டால், எங்கள் கல்வி நிலையத்தின் வியாபாரம் கெட்டுவிடும்' என்று வெளிப்படையாகச் சொல்லியே மாணவர்களை வெளியேற்றும் சீர்கெட்ட கல்விமுறைதானே, ஒரு பாவமும் அறியாத அந்த ஆசிரியை உயிரை இன்று விலையாகக் கேட்டுவிட்டது? கல்விக்குக் கொட்டிக் கொடுப்பதைக் குடும்பத்தின் கௌரவமாகவும்... கை நிறைய குழந்தையின் செலவுக்குக் கொடுப்பதைத் தங்கள் குற்ற உணர்வுக்கான வடிகாலாகவும் நினைக்கிற பெற்றோரும் அல்லவா இந்தப் பாவத்தின் பங்குதாரர்கள்?

தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த நடைமுறை புத்திசாலிகளையும் ஒழுக்கச் சீலர்களையும் உழைப்பாளிகளையும் குழந்தைகளுக்கு உதாரணம் காட்டத் தவறுவது கல்விக்கூடங்கள் மட்டுமா... பெற்றோரும்தானே? பொய் சொல்லாத அரிச்சந்திரனைப் பற்றியோ, தர்மம் தவறாத தருமரைப் பற்றியோ, அகிம்சையே உருவான மகாத்மா காந்தியைப் பற்றியோ நினைப்பதற்காவது இவர்களுக்கு நேரம் இருந்தால்தானே, குழந்தைகளோடு வாய்விட்டுப் பகிர்ந்துகொள்வதற்கு!
'நீதி போதனை' வகுப்புகளை முற்றிலுமாக இழுத்து மூடிவிட்ட நாம், மதிப்பெண் குவிக்கும் சூத்திரங்களை மட்டுமே வாழ்க்கையின் சாத்திரங்களாக இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்கப்போகிறோம்? புத்தியைத் தீட்ட வேண்டிய தெய்வீகப் பட்டறையில் கத்தியைத் தீட்டியது அந்த மாணவனின் தவறல்ல... முழுக்க முழுக்க இன்றைய கல்விமுறையின் குற்றம்தான் என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறோம்?

அரசாங்கம், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரின் நோக்கும் போக்கும் ஒரே நாளில் நேராகிவிடும் என்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கு இன்றில் இருந்தாவது நம் பார்வையைச் சீராக்கி, நேராக்கிக்கொள்ள மாட்டோமா?

நன்றி: ஆனந்த விகடன்.22.2.12