மகளீர் தின  விழாவில்  "செக்ஸ் டார்ச்சர்க்கு '  ஆளான பெண்ணை காப்பாற்றிய வெளிச்சம்

3வது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்': தலைமை ஆசிரியர் போலீசார் கைது

புனிதாவிற்கு ஏற்ப்பட்ட கொடுமையை பிறகு பதிவு செய்கிறோம்.. அதற்கு முன்பாக தினமலர் செய்தியை படியுங்கள்  


கொளத்தூர் : மூன்றாவது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர் முத்தமிழ் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் வரதராஜன்(49). இவர், திருவொற்றியூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உடல் நலம் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதையடுத்து வரதராஜன், சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(35) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டே மாதங்களில் விஜயலட்சுமி விவாகரத்து பெற்று பிரிந்தார்.அதன்பின், வரதராஜன் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த புனிதா(45) என்பவர் தனக்கு மணமகன் தேவை என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். அதைக் கண்ட வரதராஜன், அவரை தொடர்பு கொண்டார். அவர் சென்னை தி.நகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வரதராஜன், கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் புனிதாவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது குரூர விருப்பப்படி, புனிதாவுக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அவரை சந்தேகித்தார். பல நாள் இப்பிரச்னையை அவர் தாங்கிக் கொண்டார். நேற்று முன் தினம் வழக்கம் போல் அவர் "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார்.மேலும், புனிதாவை கண்மூடித்தனமாக தாக்கி, அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு, வெளியில் சென்று விட்டார். அறைக்குள் தவித்த புனிதா, மொபைல் போன் உதவியுடன் சென்னையில் உள்ள "வெளிச்சம்' என்ற பெண்கள் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். அந்த அமைப்பினர் கொளத்தூருக்கு சென்று, புனிதாவை மீட்டனர். அவர்கள் உதவியுடன், புனிதா தனது கணவர் பற்றி, கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரைக் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நன்றி: தினமலர்





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…


உறவுகளே! மகளிர் தின வாழ்த்துக்களோடு   முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை கொண்டிருக்கும் வெளிச்சம் மாணவர்கள் , பெண்களின் முன்னேற்றத்தில்தான் இச்சமூகம் சீர்படும் என உண்மையாக நம்புகிறோம் ,

 தற்போதைய சூழலில் இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவத்தை குறித்த தேசிய அளவிளான கருத்தரங்கம் (National Conference on Emerging Trends in Women Leadership in India ) திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் சிறப்பு பேச்சாரளராக வெளிச்சம் செரின் அவர்களை பெண்களின் முன்னேற்றத்தில் சமூக இயக்கங்களின் பங்கு என்கிற தலைப்பில் பேசிட அழைத்திருந்தார்கள்..

500க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணாவியர் மத்தியில் பேச வெளிச்சம் செரின் அழைக்கப்பட்டார்..  மேற்க்கண்ட தலைப்பில் பேச அழைத்தமைக்கு பொறுத்தமான ஆள்தான்  அவர்..

(கண்டிப்பாக பெண் முன்னேறத்தை பேசுபர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை தான் பேச்சின் சாரம்)

மகளீர் தினம் கொண்டாடுவதன் வரலாற்று பின்னனி:

 அமெரிக்கா சிக்காகோவில் உலகத் தொழிலாளர் தினமான மே தினம் பிறந்தது போல உலக மகளிர் தினமும் அமெரிக்காவில் தான் பிறந்தது. படுமோசமான பணி சுமைகளுக்கு ஆளாகிய பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை ஆண்களுக்குச் சமமான வேலை உரிமையும், வாக்களிக்க உரிமையும் வேண்டும் என முழங்கிப் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நியூயார்க் நகரத் தெருக்களில் 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வலம் வந்து தங்கள் மீதான  சுரண்டலை எதிர்த்து  போராடியதுதான் உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம். ஆனால் 1910 ஆம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்ற போது உலகப் பெண்களை ஒன்று திரட்டவும்,  உரிமைகளுக்காகப் போராடவும், ஒரு நாள் குறிக்கப்பட வேண்டும்.  அந்நாள் மார்ச் 8 ஆக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்து.பிற்காலத்தில் அந்நாளே உலக மகளிர் தினமாக ஏற்கப்பட்டது. நாய்களைவிட மோசமாக  உழைத்தனர் பணியிடங்களில் உழைத்த பெண்கள். குடிசைகளிலும், சதுப்பு நிலங்களிலும் சாலைகளின் ஓரங்களில் உழன்று பணி செய்தும் உறங்கியும் குடும்பம் நடத்தியும் வாழ்ந்தனர். இதே 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. 

பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பராகவும். ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவராகவும், சிறந்த மார்க்சிய பெண்ணியவாதியாக  அனைவராலும் பாராட்டப் பெற்றவர், சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் சேர்ந்து அந்த மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை எதிர்ப்பின்றி இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் முன்னிலையில்  ஏகமனதாக கொண்டு வந்து.. ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியிருக்கிறார். 

1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் முதன் முதலில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பும், முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கவும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவைகள் தான் கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.

பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்றார், பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று யாரையும் சாராது தனித்து நின்று வாழ முடியும்  பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டுமென்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல்தட்டு பெண்களுடன் அவரது இயக்கம் தொடர்பு கொள்ளாது கிளாரா  அவர்களின் கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக இருக்ககூடாது எனவும். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள் அதில் வென்றார் ஜெட்கின்.   “லெனின் நினைவுக்குறிப்புகள்” என்னும் தம் நூலில் ஜெட்கின் லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது என்கிறார் கிளாரா. அதன்பின்  ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார். கிளாரா ஜெட்கின் நினைவாக உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினம் தொழிலாளர்களுக்கு எவ்வாறு புனிதமானதோ அவ்வாறு மார்ச் 8 மாதர்களுக்குப் புனித நாள். வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

இந்திய சூழலில் பெண்கள் :

 பெண்கள் ஒரு உயிரினமாக மதிக்காத சமூகம்  இந்திய சமூகம், படிப்பதற்க்கு, பிடிப்பவரை திருமனம் செய்துகொள்வதற்கு, என  வரிசையாக பெண்ணுரிமைகள் இன்று இருப்பதற்க்கு எத்தனையோ பெண்கள் தியாகம் செய்தார்கள் என்பதுஎத்தனை பேருக்கு தெரியும் என்றார்.. பெண்கள் ஜாக்கெட் போடகூடாதுன்னு சட்டமிருந்ததும், மார்புக்கு வரிக்கட்டியதை எதிர்த்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த மண் இது.. ஆனால் இப்படி பெற்ற உரிமை எப்படி இருக்கிறது.... என தனது வழக்கமான பாதைக்கு திரும்பினார் செரின்..

பெண்களின் இன்றைய நிலை:

மார்புக்கு  வரிக்கட்டனும் என்பதை எதிர்த்து  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த பூமியில ஜன்னல் வச்ச ஜாக்கெட், முதுகு முழுக்க தெரியுர மாதிரி ஜாக்கெட்டு, என்ன இதுவா முன்னேற்றம், இப்படி போனாம் ஆம்பலைங்கள் என்ன பண்ணமாட்டாங்க, நாம எல்லாத்தையும் தெரியுர மாதிரி உடை போட்டா  அவங்க பார்பாங்கதான் பார்த்தா, பார்த்துட்டு போன்னு விட்டுட்டு வேலையை பாருங்க, கொடுத்துட்டா போடான்னூட்டு போ! எப்ப மாடர்னா மாறனும்னு முடிவு பண்ணிட்டியோ, மனசையும் மாடர்னா மாத்திக்கோ, நீ படிக்க வந்திருக்கீங்க, பெத்தவங்க கண்ணீருல காலேஜிக்கு வந்திருக்கீங்க... நீ தப்பு பண்ணி பாலாய் போன்னா உனக்கு பின்னாடி வர்ற பெம்பளை பிள்லைகளுக்கு யார் வழிகாட்டுவா !  ஜன்னல் வைச்ச ஜாக்கெட் நம்மளை காப்பாது, நாம் தான் நம்மை காப்பாத்திக்கனும், அழகு உன்னை வளர்க்காது அறிவுதான் உன்னை வளர்க்கும், அறிவை நம்புங்கள் என சொல்லும் போது கூட்டம் அமைதியாக கவனித்து, இதவிடுங்க  உழைக்கும்  பெண்கள் போராடி வாங்குன  தினமாக இன்னைக்கு எப்படியிருக்கு  பான்ஸ் மகளீர் தினம், பேரன் லவ் லி பெண்கள் தினம், இன்னும் இருக்கு என சொல்ல பயங்கர கைதட்டல், மேலும் பெண்களே தைரியம் வேண்டும், திமிர் வேண்டாம் என மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் வெளிச்சம் மாணவிகள் மகளீர் தினத்திற்கு  நாங்கள் ஒரு உறுதி மொழி எடுக்க போறோம் என  சொன்னாங்க...  ஏன்னு கேட்ட்துக்கு எல்லாம் எங்கம்மா எங்கப்பாவை பண்ணுற டார்ச்சர் தான் என்றார்கள்.. ஆக ஆணுக்கு சம்ம் பெண் என்பது ஆண் சிகரெட் அடிச்சா நானும் சிகரெட் அடிப்பேன் நீயென்ன செய்வேன்னு சொல்லுறதில் இல்லை.. தைரியமாக, அறிவாளியாக, யாரையும் ஏமாற்றாமல், யாரிடமும் ஏமாராமல்,   நாளு பேருக்கு நல்லது பண்ணி அதில் கிடைக்கிற சந்தோசத்துல வாழ்ந்தால் பெண்கள் தலைமை பெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார் இறுதியாக.....





Women need to enter politics in large numbers to clean the system, asserted speakers at the national conference on ‘Emerging trends in women leadership in India' jointly organised by the Women Studies Centres of Holy Cross and Cauvery College for Women on March 1-2011
 நன்றி: தி இந்து



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
பதிவு செய்ய:



நண்பா... 'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம், பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்....’ என மதுஸ்ரீ குரலில் இழையும் பாடல் எனக்கும் பிடிக்கும் நண்பா. ஆனால், 'பஸ் டே’ கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் அராஜகம் பேருந்துப் பயணத்தையே திகில் அனுபவமாக மாற்றி இருப்பது கொடுமை. நீங்கள் நடத்தும் 'பஸ் டே’ கொண்டாட்ட ரகளைகளால்... சுற்றியிருக்கும் எல்லோருக்கும் அந்த நாள், ஆயுளுக்கும் மறக்க முடியாத வடுவாக மாறுவதை அறிவீர்களா?  

பஸ் டே கொண்டாட்டம்
இந்த 'பஸ் டே’ கலாசாரம் முதலில் எப்படி வந்தது நண்பா? கல்லூரி வந்து செல்ல பெரும்பாலான மாணவர்களுக்கு பேருந்து மட்டுமே வாகனமாக இருந்த காலத்தில், அந்தப் பயணம் அனைவருக்கும் மிக இனிய நினைவுகளை வழங்கியது. சில கிலோ மீட்டர் பயணத்தில் எத்தனை எத்தனை நட்புகள், காதல்கள். பேச்சும், சிரிப்பும், பாட்டும், கும்மாளமுமாக அந்த இளமையின் துள்ளலை மற்ற பயணிகளும் ஏக்கத்துடன் ரசித்தனர். இப்படி ரம்மியமான நினைவுகளை வழங்கிய பேருந்துக்கு மரியாதை செய்யும் விதமாகவே பஸ் டே கொண்டாட்டங்கள் தொடங்கின. ஆனால் நண்பா, அண்மை வருடத்தைய நிகழ்வுகள் அப்படி இனிமை நினைவுகளையா தருகின்றன?

வாகனங்கள் நகர்ந்து செல்லும் மாநகரச் சாலைகளில் பெருங்கூட்டமாகத் திரண்டு பேருந்தின் மீது ஏறி உற்சாகம் பொங்க நீங்கள் வருகிறீர்கள். அலங்கரிக்கப்பட்ட தேர்போல, அந்த நகரப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து வருகிறது. வெளியில் சாலை நடுவே விசில் சத்தமும், கூச்சலும், பாட்டும், ஆட்டமும் தூள் பறக்கிறது. சுற்றியிருக்கும் யார் பற்றியும் உங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் நண்பா, அந்த பேருந்தை ஓட்டிவரும் ஓட்டுநருக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகனோ, மகளோ இருக்கக்கூடும். டிராஃபிக்கில் சிக்கித் தவிப் பவர்களில் உங்கள் அப்பாவின், அம்மாவின் சாயலில் ஆயிரம் பேர் இருப்பார்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உங்கள் முகங்களில் தங்கள் பிள்ளைகளின் சாயல்களையே காண்கிறார்கள் நண்பா. எங்கெங்கோ படித்துக்கொண்டு இருக்கும் மகள்/மகன்களின் முகங்கள் கவலையோடு அவர்களின் மனங்களில் வந்து போகும். அன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது நண்பா! அதே டிராஃபிக் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் நிற்கும் கூட்டத்தில் பீட்ஸா கார்னரில் வேலை பார்க்கும் இளைஞர்களும் உண்டு. அவர்களில் பலர், பகலில் பீட்ஸா டெலிவரி செய்து மாலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள். ஐந்து நிமிட தாமதத்தில் அவர்களின் ஒருநாள் சம்பளம் கானல் நீராகும் வேதனை உங்களுக்குப் புரியுமா நண்பா?

கல்லூரிப் பருவம் கொண்டாட்டங்கள் நிறைந்தது, கொண்டாடப்பட வேண்டியது. அன்றாட வாழ்க்கையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நெருக்கடிகள் நம்மைச் சூழ் கின்றன. அவற்றைக் கண்ணீரால், கோபத்தால் எதிர்கொள்வதைக் காட்டிலும்... கொண்டாட்டத்தால் எதிர்கொள்வதே சிறந்த வழி. ஆனால் நண்பா, நமது கொண்டாட்டம் என்பது சுற்றிஇருப்பவர்களுக்குத் துன்பங்களைப் பரிசளிக்கலாமா? அடுத்தவர்களைத் தொந்தரவு செய்து, அவர்களின் வேலைகளைக் கெடுத்து, நடு ரோட்டில் நிற்கவைத்து, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? 'முடியும்’ எனில், அது ஆரோக்கியமான மனநிலையா? பிறரை இம்சித்து இன்பம் காண்பது மன நோய்க்கான ஆரம்ப அறிகுறி அல்லவா?  

அண்மையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம் பெரும் கலவரமாக முடிந்ததை அறிவாய் நண்பா. காவலுக்கு வந்த காவலர்கள் மீது கற்கள் எறிந்து காயப்படுத்தி இருக்கிறார்கள் மாணவர்களின் மாண்பு உணராத சிலர். கல்லூரி வளாகம் எங்கும் கற்களும், கட்டைகளும், செருப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. 'ஸ்டூடன்ட் பவர்னா என்னன்னு தெரியுமா?’ எனப் பல சினிமாக்களில் நாம் வீர வசனங்கள் கேட்டிருக்கிறோம். இதுதானா அந்த ஸ்டூடன்ட் பவர்? இப்படி ஒரு ஸ்டூடன்ட் பவர் நமக்கு அவசியமா நண்பா?

உண்மையில் 'மாணவர் சக்தி’ என்பதற்கு அண்மைக் கால உதாரணம், ஆந்திராவின் உஸ்மானியப் பல்கலைக்கழக மாணவர்கள்! பல வருடங்களாக நீடித்து வரும் ஆந்திரா - தெலுங்கானா போராட்டம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப் பைச் செலுத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வருடம் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். எதற்கும் அஞ்சவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் மத்திய அரசு தனித் தெலுங்கானா அறிவிப்பை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்போது அந்த அறிவிப்பை செயல்படுத்தக் கோரி போராடுவதும் அதே மாணவர்கள்தான் நண்பா. இதன் பொருட்டு அவர்கள் போலீஸின் அடக்குமுறைகளை நடு வீதிக்கு வந்து நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர். ஆனால், நீங்கள் செய்வது என்ன நண்பா? பாதுகாப்புக்கு வரும் போலீஸ் மீது கல் எறிந்துவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள் ஓடி ஒளிந்து பதுங்கிக்கொள்கிறீர்கள். அந்தக் கல் சாலையில் செல்லும் அப்பாவியின் தலையைப் பதம் பார்க்கிறது. ஒருவேளை அந்த அப்பாவி உங்கள் அண்ணனாகவோ, அம்மாவாகவோ, தம்பியாகவோ இருந்தால்... உங்கள் சதை துடிக்குமா... துடிக்காதா?

பள்ளி-கல்லூரிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கோ, அநியாயமாக வழிப்பறி செய்யப்படும் கல்விக் கட்டணங்களை எதிர்த்தோ உங்கள் போராட்டங்கள் அமைந்துஇருந்தால், உங்கள் உணர்வுக்கு ஒட்டுமொத்தத் தமிழகமுமே தோள் கொடுத்திருக்குமே நண்பா?!

இந்த 'பஸ் டே’ கலாசாரம் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இவ்வளவு கிடையாதே! தெற்கில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் பஸ் டே ரகளைகளைப் பார்த்து அசூயை அல்லவா அடைகிறார்கள்? மாணவிகள் அச்சப்படுகிறார்கள். ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறார்கள். வெளிப்படையாக, பச்சையாகச் சொல்வதெனில் உங்களை அவர் கள் 'பொறுக்கிகள்’ என நினைக்கிறார்கள். ஆனால், அதுவா உண்மை?

இந்த பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் அரசுக் கல்லூரிகளில் படிப்பவர்கள். அடிமட்ட, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பிள்ளைகள். எங்காவது இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் பஸ்ஸின் டாப்பில் ஏறி வெறியாட்டம் ஆடுகிறார்களா? அவர்கள் விரும்பினாலும் முடியாது. அவர்களுக்கு கல்லூரிப் பேருந்து இருக்கிறது. அதற்குள் ஒரு விசில் அடித்தாலே, அடுத்த நாள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள். மாணவப் பருவத்தின் கொண்டாட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பிராய்லர் கோழிகளைப்போல தான் பராமரிக்கப்படுகின்றனர் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள். ஆனால், அவர்களுக்கு வளமான குடும்பப் பின்னணி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு எம்.என்.சி. வேலைக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், உங்கள் குடும்பப் பின்னணி அப்படியா நண்பா?

உண்மையில் உங்களுக்கு இந்த நிலை கோபத்தைத்தான் உண்டாக்க வேண்டும். பணம் படைத்தவனுக்குத் தரமான கல்வி, பணம் இல்லாதவனுக்கு நாலாம் தரக் கல்வி என்ற இந்தக் கேடுகெட்ட கல்விமுறை மீது கோபம் வர வேண்டும். கல்விக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் மோசடித் தனத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. சாராய வியாபாரிகளும், மணல் கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், ஊழல்வாதிகளும் 'கல்வித் தந்தைகளாக’ வலம் வரும் அவலத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. ஏனெனில் இந்தக் கல்வி அமைப்பு மாணவர்களை மிக நேரடியாகப் பாதிக்கிறது. பணக்காரர்களை பணக்காரர்களாகவும், ஏழைகளை ஏழைகளாகவும் தொடர்ந்து பராமரிப்பதில் இந்தக் கல்வி அமைப்புக்கு முக்கிய பாத்திரம் உண்டா, இல்லையா?

ஆல்காட்டுக் குப்பம் திவ்யாவை ஞாபகம் இருக்கிறதா நண்பா? சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள குப்பத்தின் குடிசையில் இருந்து எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் படிக்கச் சென்ற ஏழைப் பெண். யாரோ ஒரு மாணவியின் பணம் வகுப்பறையில் திருடுபோய்விட்டது என கல்லூரி நிர்வாகம் எல்லா மாணவிகளையும் சோதனை செய்தது. ஆனால், ஏழை சகோதரி திவ்யாவை மட்டும் நிர்வாணப் பரிசோதனை செய்தது. அந்த அவமானம் தாங்காமல் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். திவ்யா செய்த குற்றம் என்ன நண்பா? அவள் ஏழையாகப் பிறந்ததும், படிக்க ஆசைப்பட்டதும் மட்டும்தான் குற்றம். 'ஏழைகள் என்றால் திருடுவார்கள்’ என்ற அசிங்கமான பொதுப் புத்தி திவ்யாவின் உயிரைப் பறித்தது. இதைத் தற்கொலை என்பீர்களா? இல்லை நண்பா, இது இந்த அநீதியான கல்வி முறை செய்த பச்சைப் படுகொலை! உங்கள் சக மாணவியின் உயிர் பறிக்கப்பட்டதற்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஓர் அஞ்சலிக் கூட்டத்துக்கேனும் அனைத்துக் கல்லூரி மாணவர் களும் திரண்டு இருக்க வேண்டாமா நண்பா? ஓர் இடத்தில் கூடி நின்று, ஒரே குரலில் அதிகார மையத்தை உலுக்கி எடுத்திருக்க வேண்டாமா நண்பா? கொண்டாட்டம் என்பது பேருந்தின் உச்சியில் ஏறி ஆட்டம் போடுவது அல்ல. அநீதிக்கு எதிராக போர்க் குணத்துடன் போராடுவதுதான் உண்மையான கொண்டாட்டம் நண்பா!

இப்படிப்பட்ட மாணவர் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு நம் தமிழகத்திலேயே உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டத்தை இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறை மாணவர்கள்தான் நடத்தினார்கள். அதை முன்னின்று நடத்திய அறிஞர் அண்ணா, இப்போதைய பஸ் டே ரகளை நடந்த அதே பச்சையப்பன் கல்லூரியில்தான் படித்தார் நண்பா!
ஒரு வருடத்துக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொன்று ஒழிக்கப்பட்டபோது, தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்களும் நம்மைப் போன்ற மாணவர்கள்தானே நண்பா. செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர் கள் ஏழு நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதம் இருந்தார்கள். தங்களின் சுய நலன்களுக்காக அல்ல; இலங்கையில் தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக!

இதோ கண் முன்னால் ஒரு தேர்தல் வரப்போகிறது. அநேகமாக கல்லூரி வாசல் மிதித்த பலர் வாக்கு அளிக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாக இருக்கும். என்ன செய்யப்போகிறீர்கள்? 'அரசியல் ஒரு சாக்கடை’ என ஒதுங்குவதா, அல்லது 'இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுங்க’ என ஓட்டுக்கு வாங்கும் பணத்துக்குப் பேரம் பேசுவதா... இரண்டுமே உங்கள் கையில்தான்!
ஆனால், 'ஜனநாயகம்’ என்பது வாக்கு அளிக்கும் உரிமை மட்டுமே அல்ல. உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாம் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஃபுட்போர்டில் தொங்கத் தேவை இல்லாத அளவுக்குச் சரியான எண்ணிக்கையில், முறையான பேருந்து வசதியைப் பெறுவதும்கூட ஒரு ஜனநாயக நாட்டுக் குடிமகனின் உரிமைதான். இவை ஏன் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டு, அதற்கான விடை தேடி செயலில் இறங்கும்போதுதான் உண்மையும் உலகமும் புரியும்!

போதும் நண்பா... நாம் வாகனங்களில் ஆடியது. இனியாவது, வாழ்வைக் கொண்டாட வா நண்பா! இப்படிக்கு உன்னால் அழ நேர்ந்த ஒரு நண்பன்!


( பத்திரிக்கையாளர் பாரதி தம்பி அவர்கள் விகடனில் எழுதிய கடைசிக் கட்டுரை. )
  நன்றி: விகடன்

               உறவுகளே!  நம்மை நாடி வந்த புது உறவை குறித்துதான் இன்று உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறோம். அந்த  உறவின் பெயர் சவிதா. சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர் தற்போது  இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். வறியவர் வாழ்க்கையில் சோகம் இலவசம் என்பது போல் இந்த பெண்ணின் வாழ்க்கையிலும் சோகம் பல வழிகளில் தொடர் கதையாய் நீண்டு வந்திருக்கிறது.

              வெளிச்சம் மாணவர்களிடம் கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்த நிலையில், வெளிச்சம் மாணவர்களின் ஆய்வில் மேற்கண்ட  மாணவியின் சூழல் கண்ணீரை வர வைத்தது என்றால், வாழ்ந்த அந்த மாணவியை சோகம் என்ன பாடு படுத்தியிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சவீதா அவர்களிடம் ரூ 3500 கான காசோலை வழங்கும் வெளிச்சம் மாணவர் மாரி 

          
பெரிய அளவில் பொருளாதார சிக்கல் இல்லாத சூழலில் பிறந்த வளர்ந்த பெண் அவர்.  உடன்பிறந்தது ஒரே அண்ணன் மட்டுமே. அப்பா சென்னை FCI இல் கிளார்க்காக பணி புரிந்திருக்கிறார். அதனால் அடிப்படை கல்விக்கு நல்ல தகுதியுள்ள பள்ளியிலேயே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  திடீரென்று வாழ்வின் சந்தோசத்தில் இடிவிழ வைத்தது சர்க்கரை நோய். ஆம்,  சவிதா  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவரின் அம்மாவிற்கு சர்க்கரை நோய் வந்திருக்கிறது. சர்க்கரை நோயின் தீவிரம் அதிகமாகவே, கால்களை எடுத்துவிட மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி, இரண்டு கால்களும் அகற்றப்பட்டன. அதன்பிறகு  மருத்துவமும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. கடைசியில் சர்க்கரை நோய் சவிதாவின் தாயாரின் உயிரை குடித்தே விட்டது. தாயின் பிரிவு வாட்டி விடக்கூடாது என்பதற்காக, தன் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் வாழ தொடங்கினார் அவரது தந்தை. தந்தையின் அரவணைப்பில் தாயின் பிரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்தனர் குழந்தைகள்.  நல்ல முறையில் படித்த சவிதா அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை சேர்ந்திருக்கிறார். குடும்பத்தில் துளிர்விட்டிருந்த மகிழ்ச்சியில் பேரிடியாய் மீண்டும் வந்திறங்கியது அந்த சோகச் செய்தி. அவரது தந்தையும் சர்க்கரை  நோயில் இறக்க,  ஏதும் செய்வதறியாது நின்றனர் இந்த பிள்ளைகள். சவிதாவுக்கு எஞ்சிய நம்பிக்கைக்குரிய ஒரே உறவு அண்ணன் மட்டும்தான். மிகுந்த பொருளாதார சிக்கலில் அண்ணனும் தங்கையும் தத்தமது கல்வியை தொடர்ந்தனர். கல்வியை  நடுவிலேயே நிறுத்தும்  நிலைக்கு ஆளாயினர். உறவினர்களின் ஆதரவுமில்லாமல், பெற்றோரையிழந்த பிள்ளைகளுக்கு மனிதநேயமுள்ள  பேராசிரியர் ஒருவரின் ஆதரவில்  துவண்டு விழாமல் கல்லூரிக்கு சென்றார் சவிதா.  


கல்வியை தேட உள்ளத்தில் ஊக்கமிருந்தாலும், கையில் பணமில்லையென்றால், வயிற்றுக்கு சோறில்லையென்றால்.... அனுதினமும் அவஸ்தைதானே..”  சவிதா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ? போதுமான உணவு எடுக்காமல் கல்லூரிக்கு போக்கும் வழியில் பேருந்தில் இருந்து மயங்கி விழுந்து, தலையின் பின்புறம் அடிப்பட்டு ஏழு தையல் போட்டு சுயநினைவு இழக்கும் நிலைவரைச் செல்கிறாள். அதனால் இரண்டு செமஸ்ட்டர் தேர்வுஎழுத முடியாமல் தவித்திருக்கிறார். ஆனாலும், நண்பர்களின் உதவியால் மருத்துவம் பெற்று, உடல்நிலைச் சீரானதும் மீண்டும் கல்லூரிக்கு செல்ல தொடங்கி, கல்லூரிக்கு  கட்டணம் கட்ட பிரச்சினை வந்த பொழுது நண்பர்களும்,  அந்த பேராசிரியரும் சிறுக, சிறுக  சேகரித்து உதவினர். இரண்டாண்டுக்கான கட்டணத்தை அந்த  மேலான உதவியைக் கொண்டு கட்டிவிட்டதாக கூறும் சவிதா...இதை கூறும் பொழுதில், முகத்தில் அறைவது போல் ஒன்று சொல்லி வருத்தப்பட்டார். என்ன தெரியுமா? அது.


“துன்பம் என்று வரும் பொழுது, உதவ  இரத்த உறவுகளாய் இருக்கின்ற காரணத்தினால் மட்டும் யாரும் உதவி விடுவதில்லை, உதவும் உள்ளம் எதுவோ, அதுதான் நம் உறவு, நானும் இந்தச் சமூகத்தில் என்னால் இயன்றவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வேன், நான் பட்ட வலிகள் யாருக்கும் வரக்கூடாது... பணம் கட்டமுடியாமல், பெற்றோரை இழந்தேன், சுய நினைவை இழந்தேன்,  நான் உயிர் வாழுவதே அதிசயம்  என்றார் கண்ணீருடன்”

                 நம்மை தொடர்பு கொண்ட விதத்தை பற்றி பதியவே இல்லையே... வழக்கம் போலத்தான் Students Help Line 9698151515 மூலம் தொடர்பு கொண்டார். தன்னுடைய நிலையை விளக்கி தனது கல்விக்கு உதவும் படி விண்ணப்பித்தார், நீண்ட நாள் ஆய்வுக்கு பிறகு  வெளிச்சம் மாணவர்கள்  அவருக்கான கல்வி உதவியை செய்திருக்கிறது. அவரும் வெளிச்சத்தின் பணிகளை இணையம், மற்றும் நிழற்படங்களின் வழி கண்டவர், ஆதரவற்ற தமக்கு வெளிச்சம் வாழ்க்கையில் வெளிச்சமிட்டிருப்பதாகவும், அருமையான உறவுகளை எல்லாம் இழந்தவள், உறவுகளின் அருமையை உணர்ந்தவள் என்கிற முறையில் வெளிச்சத்தின் கல்வி பணியில் தானும் இணைந்து கொள்வதாக கூறிச் சென்றார்.. நாமும்  உண்மையான உறவுக்கு உதவியதில் கிடைத்த மகிழ்ச்சியில் இந்த பதிவை தங்கள் முன் சம்ர்ப்பிக்கிறோம்.

“உதவிக்கு யாருமற்ற” நிலையில் சவீதாவுக்கு உதவிய பேராசிரியர் அவர்களையும், அவரது நண்பர்களையும் சவீதாவின் கல்லூரிக்கட்டணம் ரூபாய் 3500 வழங்கிய நல்லது செய்ய  பெயர் போட வேண்டாம் என சொல்லி உதவிய மனித நேயமுள்ளவரையும் வெளிச்சம் மாணவர்கள் வணங்குகிறோம்.






ஏழைகளின் உயர் கல்விக்கு உதவிட 
வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 

ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458


மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான் 
ஏ மனமே கலங்காதே வீனாக வருந்தாதே 
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ 
அவனே சுமப்பான்..
                       என பாடல் வரிகள் ஒலித்து கொண்டிருந்தது.. தஞ்சை மாவட்டம் 4 கிலோமீட்டரில்  மாதா கோட்டை கிராமத்தில் உள்ளது அன்னை தெரசா அன்பு இல்லம்…  இல்லத்தை நோக்கி நாம் நடக்கையில்…   அன்பு இல்லத்தில் பெற்றோரை இழந்த 40  பிள்ளைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்காக படித்து கொண்டிருந்த பாஸ்கர்.  நம்மை பாசமுடன் வரவேற்றான்.. டாடி உள்ள இருக்கார், கொஞ்சம் இருங்கண்ணா! டாடிய கூப்பிடுரேன்னு  ஆர்வமாக ஓடினான் பாஸ்கர்.  (அன்பு இல்லத்தின் தாளாளர் சவரி முத்து அவர்களைத்தான் பிள்ளைகள் எல்லோரும்  டாடி என்கின்றனர் பாசத்துடன்)…


அன்பு இல்லம் உருவான விதம்…
               
              அன்னை தெரஸா அவர்களின் வாழ்க்கையை படித்த நான். தொழு நோயாளிகளுக்காக அவர் பட்டபாடுகள் என்னை ஏதாவது செய்யனும் என உந்தி தள்ளியது..  நீண்ட நாட்கள் என்னை  ஆட்டிபடைத்த ஆர்வம் கொஞ்சம் செயல்பாடாக  மாறியது.. அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளை எடுத்து  அவர்களை  படிக்க வைக்கனும்  இந்த செயலுக்காக யார்கிட்டயும் பணம் வாங்க கூடாதுண்ணு நினைச்சி.. பிஸ்னஸ் பண்ண ஆரமிச்சேன். இப்போ அதுல வர்ற பணத்துலதான்  இவர்களை படிக்க வைக்கிறேன்.. எனக்கு யாருமில்லைன்னு இங்க இருக்கிற யாரும் நினைச்சிட கூடாது அதனால  டாடி, அண்ணா, அக்காண்ணு கூப்பிடுவாங்க, எங்க பிள்ளைங்க யாரையும் “சார்” கூப்பிட மாட்டாங்க என்றார் பாசமாக… வெளிச்சம் மாணவர்களின் கல்விக்காக வெளிச்சம் செரின் தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தது போலவே இ ந்த பிள்ளைகளின் வாழ்க்கைக்காக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார் சவரிமுத்து..
கொஞ்சம் நகர்ந்தோம்..

            பள்ளிகூடம் முடித்து பேக்கை தூக்கி போட்ட பசங்க நேரா அன்பு இல்லத்துக்கு முன்னாடியே உள்ள இடத்தில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட நாமும் பிள்ளைகளோடு விளையாடினோம்.. அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்குள்.. கொஞ்ச நேரம் விளையாட்டுக்கு பின் அவர்களாகவே குளிச்சிட்டு  படிக்க போனார்கள்.. மாலை நேர வகுப்புக்காக ஆசிரியர்கள் இருவர் பணியமர்த்தப்பட்டிருக்கார்கள். அண்ணா  பள்ளிகூடத்துல நடத்துறது நிறைய புரிய மாட்டங்குது அதான் டாடிக்கிட்ட சொன்னோம் இவங்கள சேர்த்திருக்காங்க என்றான் பாரத். போன வருசம் அன்பு இல்லத்து மாணவன் பத்தாம் வகுப்பில்  486 மதிப்பெண் பெற்றார் என்பது சிறப்பு தகவல்..

மாணவர்களுடன்  பேசியபோது…


            நாம் படிக்கணும் பட்டம் வாங்கணும், என நாம் பேசியபோது எங்கள மாதிரி கஸ்ட்டப்படுறங்களுக்கு அன்பு இல்லம் இருக்குற மாதிரி, நாங்களும் பெரியாளா வந்து  என்ன மாதிர் அப்பா அம்மா இல்லாதவங்களுக்கு உதவுவேண்ணா என்றான் ஆர்வமாக…
  நிறைய பேர் அம்மா, அப்பா இருந்தும் அவங்களை மதிக்க மாட்டங்குறாங்க. நாங்க மதிக்கறோம் ஏண்ணா எங்களுக்கு யாருமே இல்லை என  நம்மை கேட்க என்ன சொல்ல என அறியாமல் தவித்தபோது வெளிச்சம் மாணவர்களின்  தாய் வெளிச்சம் செரின் மாணவர்களிடம் பேசினார்.. எல்லாவற்றையும் உணர்ந்தவராக பேசினார். இனி வெளிச்சம் மாணவர்கள் மாதம் இருமுறை அல்லது நேரம் வாய்க்கும் போதெல்லாம் பிள்ளைகளோடு நாங்கள் இருப்போம் என சொல்ல எல்லோருக்கும் வானளாவிய சந்தோசம்…

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான், படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் என்றால் அன்பு இல்லத்தின் உள்ளங்களை போன்ற ஆதரவற்றவர்களை (மன்னிக்கவும்) யார் காப்பது….

அன்பு இல்லத்தின் தாய்மடி சவரி முத்து அவர்களை வணங்கி விடை பெற்றோம்….

Anbu illam (Orphanege)
கல்விப்பணியில் இணைவோம்


வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 

ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458