பிளஸ் 2 தேர்வு எழுதிய புழல் சிறைக் கைதிகள் 23 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆயுள் தண்டனை கைதி சத்யன் 901 மார்க் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை புழல் மத்திய சிறையில் சென்னையை சேர்ந்த 12 கைதிகளும், வேலூர், புதுக்கோட்டையை சேர்ந்த தலா 2 பேரும், திருச்சியை சேர்ந்த 4 பேர், பெண் கைதிகள் 4 பேர் என மொத்தம் 23 பேர் எழுதினர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்றுவெளியானபோது, சிறை அதிகாரிகள் ஆச்சரியப்படும் வகையில் புழல் சிறையில்தேர்வு எழுதிய 19 ஆண் கைதிகளும், 4 பெண் கைதிகளுமாக அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இது தொடர்பாக சென்னை சிறைத்துறை சரக டி.ஐ.ஜி. துரைசாமி கூறுகையில், புழல் சிறை மையத்தில் நடந்த பிளஸ்2 தேர்வில் தேர்வு எழுதிய அனைவரும்தேர்ச்சி பெற்றிருப்பது எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி, தேர்வு எழுதிய கைதிகள் அனைவரையும் தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டார். இதற்காக சிறையில் அதிகாரிகள் சண்முகசுந்தரம், ஜெயராமன் ஆகியோர் தலைமையில், ஆசிரியர் குழு ஒன்று கைதிகளுக்கு பாடம் சொல்லி தருவதற்கு அமைக்கப்பட்டது.
ஒரு வழக்கில் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்த வருமானவரித்துறை அதிகாரி அமராவதி, கைதிகளுக்கு ஆங்கில பாடம் நடத்தினார். எம்.சி.ஏ. பட்டதாரியான உதயா என்ற ஆயுள் கைதி வணிகவியல் பாடம் நடத்தினார். புதுராஜா என்ற பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்த ஆயுள் கைதி கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடம் நடத்தினார். தமிழ் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ராஜேந்திரன் என்ற தமிழ் ஆசிரியரையும் பிரத்யேகமாக ஜெயிலுக்கு வரவழைத்தோம்.
பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் வணிகவியல் பாடத்தை முதல்நிலை பாடமாக எடுத்து படித்தனர். சத்யன் என்ற ஆயுள் கைதி 901 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர், சென்னை ஆவடியை சேர்ந்தவர். கொலை வழக்கு கைதியான இவர், அடுத்து மேல்படிப்பு படிப்பதற்கும் உதவி செய்யப்படும்.
2வதாக நேசமணி என்ற ஆயுள் தண்டனை கைதி 758 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சென்னை பாடியை சேர்ந்தவர். மூன்றாவதாக திருமலை என்ற ஆயுள் கைதி 724 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர். 8ஆம் வகுப்பு தேர்விலும் 31 கைதிகள் கலந்துகொண்டு பரீட்சை எழுதினர். அதிலும் 31 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று டி.ஐ.ஜி. துரைசாமி கூறினார்.
நன்றி: வெப்துனியா