வீட்டில் இண்டர்நெட் இருக்கிறதா?- எச்சரிக்கை

Posted by Unknown - -

''என் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இரண்டு மகன்கள் பள்ளி செல்கிறார்கள். சமீபத்தில் அவர்களின் கல்வி மற்றும் பொது அறிவுப் பயன்பாட்டுக்காக எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் நெட் கனெக்ஷன் கொடுத்தோம். சென்ற மாத இன்டர்நெட் பயன்பாட்டுக்கான பில் தொகை ஆச்சர்யப்படும்படி உயர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகன், பின்னிரவில்.. யாரும் அறியாத நேரத்தில்.. ஆபாச வலைதளங்களைப் பார்ப்பதை சென்ற வாரம்தான் கண்டுபிடித்தேன். அவனிடம் ஏதும் கேட்கவில்லை. ஆனால், அன்றில் இருந்து ரிப்பேர் என்று சொல்லி இன்டர்நெட் செயல்பாட்டை முடக்கி வைத்திருக்கிறேன். அவனோ, அதைச் சரி செய்யச் சொல்லி தினமும் நச்சரித்தபடியே இருக்கிறான். கணவரிடமும் இன்னும் தகவலைச் சொல்லவில்லை.
இத்தனை சின்ன வயதில் இவ்வளவு மோசமான படங்களைத் தேடும் அளவுக்கு அவன் மனம் கெட்டு விட்டிருக்கிறது. இது அவன் வாழ்க்கையையே சிதைத்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. இதிலிருந்து அவனை எப்படி மீட்பது? மோசமான வலை தளங்களைப் பார்க்க முடியாதபடி இன்டர்நெட் சேவையை மாற்ற முடியுமா? வழி காட்டுங்களேன்!''

தே.ரன்தீப் ராஜ்குமார், மருத்துவ உளவியல் நிபுணர், திருச்சி:


''ஏழாம் வகுப்பு மாணவன் ஆபாசப் படம் பார்க்கிறான் என்பது நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் இது மிக மிக சாதாரணமான ஒன்றுதான். இந்தக் கால உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் அடைந்து விடுவது இல்லையா? அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.


குழந்தையும் அல்லாத, வளர்ந்த வாலிபனும் அல்லாத வயது, உங்கள் மகனுக்கு. இந்த வயதில் இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அளவு கடந்த ஆர்வம் இருப்பது இயல்புதான். அந்த ஆர்வம் உங்கள் மகனுக்கு வந்து விட்டது. இனி, ஆபாசப் படங்கள் பார்க்கக் கூடாது என்று அவனைக் கட்டுப்படுத்துவதோ, இன்டர்நெட்டைத் துண்டிப்பதோ கூடாது. வீட்டில் அது கிடைக்காவிட்டால் தெருவுக்குத் தெரு இருக்கும் பிரவுஸிங் சென்டர்களுக்குப் போய் அதைப் பார்க்க அவனுக்கு அதிக நேரம் ஆகாது.

அந்தக் காலத்திலும் இந்தப் பருவத்துக் குழந்தைகளுக்கு இதே ஆர்வம் இருந்திருக்கும். ஆனால், பாலியல் எண்ணங்களைத் தூண்டும் விதமான மஞ்சள் பத்திரிகைகளோ, அயல்நாட்டில் இருந்து வரும் இதற்கான பத்திரிகைகளோ அத்தனை சுலபமாக அவர்கள் கையில் கிடைக்காது. ஆனால், இந்தக் காலத்தில் இணையத்தின் புண்ணியத்தில் எல்லோருக்குமே அது எளிமையாக.. இலவசமாகக் கிடைக்கும் நிலை வந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் பக்க விளைவு இது. இதை நாம் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இணையதளம் மட்டுமல்ல.. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான சினிமாக்கள், டி.வி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள் போன்றவற்றை இன்றைய தலைமுறைகள் 'ஜஸ்ட் லைக் தட்' பார்த்துவிட்டு எந்த பாதிப்புமின்றி சகஜமாகத்தானே இருக்கிறார்கள். அப்படி சகஜமாக உங்கள் மகனும் இருந்துவிட்டால், கவலைப்படு வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், ஒன்று.. இணையத்தில் காணக்கிடைக்கும் ஆபாசக் காட்சிகளில் பல, மிருகத்தனமான உடலுறவுக் காட்சிகளாகவும் இருக்கலாம். சிறு வயதுப் பிள்ளைகள் அதைப் பார்க்கும்போது அவர்களின் எண்ணம் முழுக்க அந்தக் காட்சிகள் நிறைந்து, அவர் களது இயல்பு வாழ்க்கையே பாதிக்கப் பட்டு விடக் கூடும்.
எனவே, வாலிப வயதுக்குள் காலடி வைக்கத் துடிக்கும் உங்கள் மகனின் ஆர்வக் கோளாறுக்கு சரியான வடிகால் வேண்டும். எப்படியேனும் அவன் தெரிந்துகொள்ளவிருக்கும் பாலியல் உண்மைகளை முறையாக நீங்களே அவனுக்குத் தெரியப்படுத்துங்கள். எப் படி என்கிறீர்களா?
முறையான பாலியல் கல்விப் புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வையுங்கள். இணைய தளங்களுக்கான உங்களது ஃபேவரிட் ஃபோல்டரில் முறையான பாலியல் கல்வியைத் தரும் இணையதள முகவரிகளை சேகரித்து வையுங்கள். மறைப்பதும் மறுப்பதும்தான் வளரும் பருவத்தினருக்கு அர்த்தமற்ற ஆர்வத்தைத் தூண்டிவிடும்.
இது தவிர, பிள்ளைகளின் உடலையும் மனதையும் சீராக வைத்திருக்க யோகா, தியானம், உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவற்றில் சேர்த்துவிட்டு, அவனுடைய கவனத்தை திசை திருப்புங்கள்.
இதுவரை அவனிடம் நீங்கள் வெளிப்படையாக எதையும் கேட்காதது நல்லது. இனியும் அப்படியே இருங்கள். பிள்ளைகளின் படிப்பு, சமூக உறவு, தனி மனித ஒழுக்கம் ஆகியவற்றில் பிறழ்வு இல்லாதவரை அவர்கள் இப்படிப்பட்ட சின்ன சின்னத் தடுமாற்றங்களுக்கு உள்ளாவதில் குற்றம் ஒன்றுமில்லை. வயதில் சிறியவர்கள் என்றபோதும் அவர்களுக்கான அந்தரங்கமும் புனிதமானதுதானே!''

'தொழில்நுட்ப ரீதியில் இதற்குத் தீர்வு காண முடியுமா?' என்ற கேள்விக்கு பதில் தருகிறார், பி.பிரகாஷ் அருள்ராஜ், இணைய ஆலோசகர், திருச்சி:
''இன்டர்நெட் இணைப்புக்கான 'மோடம்'-ஐப் பெறும்போது, சற்று கூடுதலாக செலவிட்டு 'net gear route' என்ற உபகரணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இது அலுவலகங்களில் இணைய பயன்பாட்டை முறைப்படுத்த உதவும் கருவி. தேவையான தளங்களை மட்டும் வைத்துக் கொண்டு விரும்பத்தகாத தளங்களை துண்டிக்க இது வழி வகுக்கும்.
குழந்தைகளின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் பிரௌசிங்கை முறைப்படுத்த இலவச மற்றும் கட்டண சாஃப்ட்வேர்கள் இணையத்திலேயே ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
இணையத்தின் பிரபல ஸர்ச் இன்ஜின்கள் அனைத்துமே ஆபாச வெப்சைட்டுகளை நம் முன் தேடிக் கொட்டும். உங்கள் பிரௌசரில் அதற்கு வழி தராமல், பி.பி.சி போன்ற பாதுகாப்பான சர்ச் இன்ஜினை மட்டுமே தேடலுக்கு நிறுவுங்கள்.
கம்ப்யூட்டரை எப்போதும் ஹாலில் வையுங்கள். பெட்ரூம், ஸ்டடி ரூம் போன்றவை தவறு செய்யத் தூண்டும். இன்டர்நெட் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வசதி முறை மிக விரைவிலேயே நம் நாட்டில் வர இருக்கிறது. இதுபோன்ற பெற்றோர்களின் கவலைக்கு அப்போது முழுமையான விடிவு பிறக்கும்.''

நன்றி: அவள் விகடன்

Leave a Reply