கல்லூரி மானவர்கள் |
கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என நம் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பள்ளிக் கல்வியானாலும், உயர் கல்வியானாலும் கல்வியின் தரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பட்டியலிடுகிறார், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையக் குழு முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி., மோசமான உள்கட்டமைப்பு, தரமில்லாத பாடத்திட்டம், தேர்வில் முறைகேடு என, குறைகள் பல உள்ளதால், கற்பிக்கும் கல்வியில் தரம் இல்லை. தனி மனிதனின் வளர்ச்சி தான் சமூக வளர்ச்சி; சமூக வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுவோர், 40-50 சதவீதம். நம் நாட்டில் இது, 10 சதவீதம் மட்டுமே. இதை அடுத்த ஐந்தாண்டுகளில், 15 சதவீதமாக உயர்த்த நிறைய கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தேவை. பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர் சதவீதத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்தால் தான், உயர்கல்வியில் சேருபவர் எண்ணிக்கை உயரும். அதற்கேற்ப ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் நடத்த வேண்டும். ஆழமாக கற்பிக்க வேண்டும்; நுனிப்புல் மேயக் கூடாது.
ஆசிரியர் பற்றாக்குறை
பாலகுருசாமி |
தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம்; அதிக பொறுப்புகள்; இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளில் அதிக சம்பளம் பெறும் ஆசிரியர்களில் பலர், தங்கள் பொறுப்பை உணர்வதே இல்லை. இன்று கல்வித் தரம் வீழ்ச்சி அடைய, அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத ஆசிரியர்களே காரணம்.பள்ளியானாலும், கல்லூரியானாலும், ஆசிரியர்களுக்கு திறமைக்கேற்ப சம்பளம், ஊக்க ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். மதிப்பெண்ணை இலக்காக கொண்ட தேர்வு முறைகள் மாற்றப்பட வேண்டும். நல்ல பண்புகள் இல்லாத கல்வி, வாழ்க்கைக்கு உதவாது. கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை செலவாக கருதாமல், முதலீடாக கருதி, உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தமிழக பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மொத்த மாணவர்களில், 15 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். இலவசங்களை அளிப்பதற்கு பதிலாக, கல்வி, மருத்துவ மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். வேலை தரும் நிறுவனங்களால் நிராகரிக்கப்படும், பி.இ., பட்டதாரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக சேரும் அவலம் உள்ளது.
இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கும்? பள்ளி, கல்லூரி படிப்பின் போதே, ஆங்கிலத்தில் பேசும் திறன், குழு கலந்தாய்வு, மேடைப் பேச்சு, தலைமை பண்பு ஆகிய திறன்களை வளர்க்க பயிற்சி அளித்தால், படித்து முடிக்கும் அனைவராலும் வேலை பெற முடியும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நியமனத்துக்கு நீண்டகால திட்டம் வகுத்து, முதலில் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்.தமிழில் பொறியியல் படிப்பு கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.அதற்கான பாடத் திட்டம், புத்தகங்களை முதலில் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் படிப்பை முடிப்பவர்கள் அனைவருக்கும் இங்கேயே வேலை கிடைப்பதில்லை. தேசிய அளவிலும், உலகளவிலும் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், மாணவர்களின் இலக்காக இருக்கும் போது, தமிழில் மட்டுமே பொறியியல் பாடங்களை படிப்பது, வேலை பெற எந்த வகையிலும் உதவாது.
தொழில் துறையினரின் தேவைகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் பாடங்களை வடிவமைப்பது வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும்.நம் கல்லூரி, பல்கலைகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்த பல்கலையும் தீர்வு காண முன்வராததே காரணம்.பல்கலை துணைவேந்தர்கள் மக்கள் பணத்தில் அடிக்கடி வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும். காரணம், வெளிநாடு சென்று திரும்புபவர்கள், ஆராய்ச்சியை மேம்படுத்தவோ பாடத்திட்டங்களில் புதுமையை புகுத்தவோ முயற்சிப்பதில்லை.பல்கலை துறைகளின் புதிய கண்டுபிடிப்பு, பதிவு செய்துள்ள காப்புரிமை எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் துணைவேந்தர்களை அரசு கேள்வி எழுப்ப வேண்டும். சிறப்பாக செயல்பட்ட துணைவேந்தர்களுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் வழங்கலாம்.அரசுக்கு நெருக்கமான யார் வேண்டுமானாலும் துணைவேந்தராகும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு, பாடத்திட்டம் வடிவமைப்பு, விடைத்தாள் மதிப்பீடு, நிதி நிர்வாகம் ஆகியவை வெளிப்படையாக இருக்க வேண்டும். இது அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கும்.
நன்றி: தினமலர்