"கல்வி இல்லை என்பது ஊனம்தான்!"
-நன்றி: அவள் விகடன். 16.1.09
''அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைப்பதை விடவும் பத்தாயிரம் கோயில் கட்டுவதை விடவும் ஓர் ஏழைக்குக் கல்வி தருவதுதான் உயர்ந்தது'' என்று சொன்னார் மகாகவி பாரதியார்.
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த செரீன்.
எந்த பள்ளிக் குழந்தையாவது தனது தலைமுறையிலேயே முதன்முதலாகப் பள்ளிக்கு வந்து, நல்ல மதிப்பெண்ணும் எடுத்து, வறுமையால் அந்தப் படிப்பை விட்டுவிடும் நிலையில் இருக்கிறதா? ஆபத்பாந்தவன் போல் அந்தக் குழந்தையின் அத்தனை படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது செரீன் நடத்திவரும் 'வெளிச்சம்' அறக்கட்டளை!
கருத்த தேகம்.. தோற்றத்தின் மீது அக்கறையே இன்றி அணியப்பட்ட ஷார்ட் குர்தா.. பேதங்களை உடைத்தெறியும் 'பாய் கட்'.. தாராளமான பேச்சு.. சரளமான ஆங்கிலம்.. இதுதான் செரீன்.
தனது அறக்கட்டளை அலுவலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நம்மை கோரஸாக வரவேற்று உபசரித்தவர், மெள்ள தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினார்..
''பல தலைமுறையா நாங்க கேரளாவுல செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். 40 ஏக்கர் டீ எஸ்டேட், பிரமாண்டமான வீடுனு சொத்துக்குக் குறையில்லை. அம்மா ஸ்கூல் டீச்சர். சொத்துக்களை கவனிச்சுக்குறதுலயே அப்பா பிஸியா இருப்பார். அதனால நாலு வயசுல இருந்தே மதுரையில உள்ள ஹாஸ்டல்ல தங்கி ஸ்கூல் படிக்க வேண்டிய நிலைமை. அப்போ அது கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, அந்த ஹாஸ்டல் வாழ்க்கைதான் எனக்கு உலகத்தையே கத்துக் கொடுத்தது.
பணக்கார பசங்க படிக்கிற ஸ்கூல் அது. கறுப்பான பொண்ணுனு அப்பவே எல்லாரும் என்னை ஒதுக்கித் தள்ளுவாங்க. மனசுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையோட குறுகிப் போய்த்தான் ப்ளஸ் டூ வரைக்கும் அங்க படிச்சேன். அதுக்கப்புறம் காலேஜ் போகக் கூட மனசில்ல. கரஸ்பாண்டன்ஸ்ல பி.ஏ போட்டேன். ஆனாலும் வீட்டுக்குப் போய் சும்மா உக்காரப் பிடிக்கல. மதுரையில ரெண்டு வருஷமா மார்க்கெட்டிங் வேலை பார்த்தேன். வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்படும்போது, 'இதனால சமூகத்துக்கு நாம என்ன செய்யப் போறோம்..'னு தோணும். அதனால மெதுவா மார்க்கெட்டிங் துறையில இருந்து விலகி, சமூக சேவை செய்யிற தொண்டு நிறுவனங்கள்ல வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.
அப்படி ஒரு தொண்டு நிறுவனத்துல வேலை பார்த்தப்போதான், தமிழ்நாட்டுல உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ற வாய்ப்பு கிடைச்சுது. தீண்டாமை, வறுமைனு பல பிரச்னைகள்ல சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்குற ஆயிரக்கணக்கான குழந்தைகளை அப்போ நான் சந்திச்சேன். சக மனுஷனை மனுஷனா பார்க்காத கலாசாரத்தை நேர்ல பார்த்து மிரண்டு போனேன். ஒரு பள்ளிக்கூட ஆசிரியரே தன்கிட்ட படிக்கிற தாழ்த்தப்பட்ட மாணவியைத் தப்பான வார்த்தையில கூப்பிட்டதை காதால கேட்டேன். அதையும் கேட்டுக்கிட்டு இயலாமையோட நின்ன அந்தப் பொண்ணைப் பார்த்தேன். நெஞ்சு கொதிச்சுது.
இதைக் கூட எதிர்க்க துணிச்சல் இல்லாமப் போறதுக்கு படிப்பறிவில்லாததுதான் காரணம்னு தோணிச்சு. 'ஊமை என்றால் ஒருவகை அமைதி.. ஏழை என்றால் அதிலொரு அமைதி'னு பாட்டு வருமே.. அப்படிதாங்க படிப்பில்லைன்னாலும் ஊமை மாதிரிதான். அதுவும் ஊனம்தான். அந்த ஊனத்தைப் போக்கணும்னா படிப்பு வேணும். காசு இல்லைங்கற காரணத்துக்காக கிராமத்துப் பிள்ளைங்க படிப்பை இழந்துடக் கூடாது.. அப்படி இழக்க நான் விடக்கூடாதுனு அன்னிக்கு முடிவெடுத்தேன்'' என்கிற செரீன், இதற்காக தன் சொந்த வீட்டை ஒதுக்கிவிட்டு, தமிழகத்திலேயே தங்கிவிட்டிருக்கிறார்.
''என் உணர்வுகளைப் புரிஞ்சுக்குற ஒருத்தர்.. என்னை மாதிரியே சமூக சேவை நிறுவனங்கள்ல ஆர்வத்தோட பங்கெடுத்துக்குற ஒருத்தரைப் பார்த்தேன். நேசிச்சேன். அவரும் என்னை நேசிச்சார். அம்மாவோட ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரோட சொந்த ஊரான அரியலூருக்கு வந்தேன். இங்க பருக்கல்ங்கற கிராமம்தான் அவருக்குப் பூர்வீகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த எட்டுக்குப் பத்து வீட்டுல சந்தோஷமா குடித்தனம் நடத்தினேன். ஒரு மகனும் பிறந்தான். இன்னும் சந்தோஷமானேன். ஆனா, கிராமத்துக் குழந்தைகளோட கல்விக்காக ஏதாவது பண்ணணும்ங்கற என்னோட ஏக்கம் குறையல. அதுக்காக ரொம்ப முயற்சிகள் எடுத்து, நான் உருவாக்கின அமைப்புதான் வெளிச்சம்.
என் அமைப்புக்கு ஜாதி கிடையாது.. மதம் கிடையாது.. தன் குடும்பத்துல இருந்து முதன் முறையா படிக்க வர்ற குழந்தைகள் படிக்கணும்.. தங்களால படிக்க முடியிற வரை படிக்கணும். அதுக்கு காசு ஒரு தடையா இருக்கக் கூடாது. இதுதான் என் லட்சியம்னு நினைச்சேன். அதுக்காக எத்தனையோ பேர் கால்ல விழுந்து நன்கொடைகள் வாங்கியிருக்கேன். கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளின அவமானங்களையும் தாங்கியிருக்கேன். அதெல்லாம் எனக்கு வருத்தமே தரலை.
அப்பாவை இழந்து பதினோராம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு, முந்திரிக்கொட்டை பொறுக்கிக்கிட்டு இருந்த செந்தில்ங்கற மாணவனுக்கும் எங்க அமைப்பு முதன் முதலா உதவி செஞ்சுது. இன்னிக்கு அவன் கெமிக்கல் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருக்கான். இந்த சந்தோஷமே எனக்குப் போதும்'' என்கிறவர், இந்த சுகத்துக்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்.
''என் கணவர் ஆரம்பத்துல என்னோட எல்லா செய்கைகளையும் ஆதரிச்சார்தான். ஆனா, போகப் போக சமூக சேவையில நான் காட்டின தீவிரம் அவருக்குப் பிடிக்கலை. அதுகூட எனக்குப் பெருசா தெரியலை. சொந்தப் பிள்ளையே அவங்க அப்பாவோட சேர்ந்து என்மேல குறை சொல்ல ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல 'வீடா.. சமூகசேவையா?'னு ஒரு கேள்வி வந்திச்சு. 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்'னு ஒரு பழமொழி சொல்லுவாங்கள்ல.. அதை நம்பி மனசைக் கல்லாக்கிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். இதுவரைக்கும் 'வெளிச்சம்' மூலமா 150 பிள்ளைங்க பயனடைஞ்சிருக்காங்க. அவங்களாவது என்னைப் புரிஞ்சுக்குறாங்களேனு ஆறுதல்பட்டுக்கறேன். என்னிக்காவது என் மகனும் என்னைப் புரிஞ்சுக்குவான். எனக்கப்புறம் என் கனவுகளை சுமப்பான்னு நம்புறேன்'' - மனசைத் தொட்டு முடிக்கிறார் செரீன்.
அந்த வார்த்தைகளின் வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது!
-சி.ஆனந்த குமார்
இந்த கட்டுரை அவள் விகடனில் வெளியான கட்டுரை உங்கள் மனக்கதவை திறக்கும் என்கிற நம்பிக்கையில் உங்கள் பார்வைக்காக சமர்ப்பித்தோம்..
இணைவோம் ..
விண்ணப்ப படிவம்