பள்ளிக்கல்வியில் கிரேட் சிஸ்டம் எப்படி இருக்கிறது

Posted by Unknown - -


பள்ளிப்படிப்பு  கடினமாக இருக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் இது போன்ற எளிமையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 1986ம் ஆண்டு பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப �சுமையற்ற கற்றல்� முறை ஏற்கப்பட்டது. இதையொட்டி தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது.
அதற்கு பிறகு 2005ம் ஆண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டது. மேலும் தரமான கல்விக்காக பல்வேறு கல்விக் குழுக்கள் படிப்படியாக அமைக்கப்பட்டன. இவற்றின் வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்போது �தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை�(சிசிஇ) தமிழக பள்ளிகளில் நுழைந்துள்ளது. மனப்பாடம் செய்யும் முறை மெல்ல மெல்ல மறைந்து மாணவர்கள் தாங்களே பகுத்தாய்வு செய்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு குழந்தையின் உள்ளார்ந்த ஆற்றலை வெளியில் கொண்டு வருவது, அவர்களை முழுமையான ஆளுமை உள்ளவர்களாக மாற்றுவது ஆகியவற்றுக்கு இந்த மதிப்பீட்டு முறை துணையாக இருக்கும். இந்த ஆண்டில் (2012&2013) 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இந்த முறை அமலாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம் இதனால் குறையும். தேர்வு பயம் நீங்கும். தொடர் மதிப்பீட்டு முறையில், கல்வி சார்ந்த மற்றும் அதனுடன் இணைந்த செயல்பாடுகள் அனைத்தும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஏ1 முதல் இ1 வரை

ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் கற்றல் அனுபவம், தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தரப்புள்ளிகள்( கிரேடு) வழங்கப்படும். இதன்படி 91&100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு �ஏ1� கிரேடு வழங்கப்படும். தரப்புள்ளியாக �10�புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக 21&32 மதிப்பெண்கள் எடுப்போர் �இ1� கிரேடு பெறுவார்கள். தரப்புள்ளிகள் இதற்கு கிடையாது. தரப்புள்ளிகள் பெறாதவர்கள் கற்றலில் மேம்பாடு அடையவில்லை என்று எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அதவாது அவர் தேறாதவர் என்று கருதப்படுவார்.
இந்த கிரேடு வழங்கும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சிபிஎஸ்இ பள்ளிகளில் கொண்டு வரப்பட்டது. முதலில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கொண்டு வரப்பட்டது. பிறகு உயர் வகுப்புகளுக்கும் இந்த முறை கொண்டு வரப்பட்டது. இது மாணவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது தமிழக மாநில கல்வி முறையிலும் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு மகிழ்ச்சி
நான்கு கல்வி முறைகளை கலைக்கப்பட்டு சமச்சீரான கல்வி முறையில் இப்போது மாணவர்கள் பயணிக்க தொடங்கிவிட்டனர். அதற்கான பாடங்கள் அனைத்தும் தரமாக மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த கருப்பு வெள்ளை பாடப்புத்தகம் ஒழிந்தது. இப்போது எல்லாமே கலர்தான். பாடங்களில் முக்கிய வரிகள் கலரில் இடம் பெற்றுள்ளன. அது தொடர்பான விளக்கப் படங்கள் உள்ளது உள்ளதுபோல அப்படியே போட்டோவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் மாணவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளன. செல்கள், பாக்டீரியாக்கள், நோய்களை உருவாக்கும் நுண்ணிய கிருமிகள் ஆகியவை பல வண்ணங்களில் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன. இதை புத்தகத்தில் பார்க்கும் மாணவர்கள் நுண்ணோக்கியை தேடி ஓட வேண்டிய அவசியம் இருக்காது.  அதைவிட இனிப்பான விஷயம் என்னவென்றால், ஒரு கல்வி ஆண்டு, மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பாடப்புத்தகங்களும் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களில் ஒரு பருவத்தின் அனைத்து பாடங்களும் அடக்கமாகிவிட்டன. இதனால் புத்தகச் சுமையும் இப்போது குறைந்துள்ளது. இப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கும் வரவேற்பு உள்ளது.
படிப்பு திறன் அதிகரிப்பு
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி மாணவர்களின் புத்தகச் சுமை அவர்களின் எடையில் 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இதை கருத்தில் கொண்டு இந்த கல்வி ஆண்டில் 1&5 வகுப்புகளுக்கு ஒரே புத்தகமாகவும், 6&8 வகுப்புகளுக்கு இரண்டு புத்தகமாக அதாவது தமிழ், ஆங்கிலம் அடங்கியது ஒரு புத்தகமாகவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை சேர்த்து ஒரு புத்தகமாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் ரீதியான உபாதைகளான தசை மற்றும் எலும்பு சார்ந்த நோய்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கணினி வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில மொழி லேப், கணக்கு லேப், உள்ளிட்ட வசதிகள் அரசுப் பள்ளிகளில் வந்துள்ளதால் மாணவர்களே ஆர்வமாக படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல தனியார் பள்ளிகளிலும் கட்டணம், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து அரசு தரப்பில் கவனம் செலுத்துவதால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் திறமையாக கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் வீடியோ மற்றும் கான்பரன்சிங் மூலம் பாடங்களை படிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரித்துள்ளது.   இவை தவிர கல்வியில் பின் தங்கிய ஒன்றியங்கள் 44ல் அரசு தரப்பில் 44 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஆங்கில வழிக் கல்வியும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பள்ளிகள் தொடங்கிய உடனே அத்தனையிலும் மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். அதனால் மேலும் மாதிரிப் பள்ளிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக மாதிரிப் பள்ளிகளை திறக்க மத்திய அரசும் அனுமதி அளித்ததுடன் இந்த ஆண்டு மட்டும் அதற்காக  ஸி135 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் கிராம மாணவர்கள் ஆங்கிலம் கற்று வருகின்றனர் என்பதே மாணவர்களின் திறமைக்கு சான்றாக உள்ளது. 
 தமிழகத்தை பாருங்க! சொல்கிறார் கபில்சிபல்
டெல்லியில் கடந்த மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி தொடர்பாக கருத்தரங்கு நடந்தது. அதில் ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் தொடர்பான கொள்கைகளை வகுத்தல் குறித்து பல்வேறு கருத்தாளர்கள் பேசினர். அதில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டார். அவர் அந்த கருத்தரங்கில்பேசும் போது, தமிழகத்தில் தற்போது அறிமுகம் செய்துள்ள சமச்சீர் கல்வி முறை சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டு, தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தவிர முன்னாள் என்சிஇஆர்டி இயக்குநர் குப்தா, தமிழகத்தில் தற்போதுள்ள சமச்சீர் கல்விக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் படித்து ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் தமிழகத்தின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் பிரமாதம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 10ம் வகுப்பு கணக்கு பாடங்களை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், இந்த பாடங்களை படிக்கின்ற தமிழக மாணவர்களின் திறமை மற்ற மாநிலத்தைவிட நன்றாக உள்ளதாவும் தெரிவித்துள்ளார். இதுவே நமது தமிழக கல்வி முறைக்கும், மாணவர்களின் திறமைக்கும் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்
-வே.புகழேந்தி
நன்றி: தினகரன்.17.6.12

Leave a Reply