Archive for March 2012
''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்ச லால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை.
2011-ம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், உலக அளவில் இந்தியாவும் மாநில அளவில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன. மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மாணவர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை செக்ஸ் என்பது தான்'' இதுபோன்ற அதிர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார் 'வெளிச்சம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ஷெரின். 'மாணவர்களே காதலியுங்கள்’ என்ற வித்தியாசமான புத்தகம் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்திருக்கும் அவரிடம் பேசினோம்.
''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பள்ளிக்கூடங்களில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், 320 மாணவிகள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. முகமே தெரியாத ஒருவரை விரும்பும் காதல், புத்தகத்தோடு கர்ப்பத்தையும் சுமக்கும் மாணவிகள், காதல் என்றால் என்னவென்று புரியாமல், அதில் தோல்வி கண்டு தற்கொலைக்கு ஆளாகும் மாணவிகள் என்று தினமும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.
புரிதல் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகவும் வசதி இல்லாத குழந்தைகளைப் படிக்க வைக்கவும் ஹெல்ப் லைன் ஆரம்பித்தோம். அதில் 90 சதவிகிதம் மாணவர்கள் காதல் சந்தேகங்களைத்தான் தயங்கித் தயங்கிக் கேட்கிறார்கள். 'எனக்கும் என் காதலிக்கும் சண்டை. நான் ஐ-பாட் கேட்டும் தரவில்லை என்றதால் காதலியைக் கைகழுவி விட்டேன்’ என்று கேஷ§வலாகச் சொல்கிறார்கள்.
ஒரு மாணவி தன் மாமாவுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாள். ரூம் எடுத்துத் தங்கி தேர்வுக்குப் புறப்பட்டாள். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி டி.வி. பார்க்க உட்கார, அதில் ஆபாசப் படம் ஓடுகிறது. 'என்ன மாமா அசிங்கமா இருக்கு’ என்று வாயைத் திறக்கும்முன் இழுத்து அணைத்த மாமா, பாலியல் தொந்தரவு செய்கிறார். தப்பித்து வீடு வருகிறார் மாணவி. அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல நினைப்பதற்குள், 'இப்போதான் மாமா போன் செஞ்சார். பஸ் ஏத்திவிட்டேன். பத்திரமா வந்தாளான்னு அக்கறையா விசாரிச்சார். உன்மேல மாமாவுக்குத்தான் எத்தனை அக்கறை’ என்று தன் அண்ணனை மெச்சுகிறாள் அந்தத் தாய். தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடியாமல்... அப்பா விடமும் பேச முடியாமல் தனக்குள் புழுங்கித் தவிக்கிறாள். இது ஒரு சாம்பிள்தான்... இப்படி நிறையவே நடக்கின்றன.
காதல், செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று பெற்றோர் நினைக்கின்றனர். அதைப்பற்றி விவாதிக்கவே கூடாது என்று கல்விநிறுவனங்கள் கருதுகின்றன. பாலியல் கல்வி தரமறுக்கும் சமூகத்தில்தான் அந்தரங்க ரகசியங்களைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பகிரங்கமாக ஒளிபரப் பாகின்றன. அப்பாவும் அம்மாவும் கற்றுத்தராத சாட்டிங், காதல் பாடங்களை மாணவர்கள் ஊடகங்கள் மூலமாக தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். 'அவன் நல்லவன் என்று நம்பி ஏமாந்துவிட்டேன். நான் சாகப்போகிறேன்’ என்று, தற்கொலைக்கு முயற்சி செய்த ஏராளமான மாண விகளை எனக்குத் தெரியும்.
இந்தச் சூழலில் சிக்கிய மாணவிகள், தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தானாகவோ, நண்பர்கள் மூலமோ பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவேண்டும். பாலியல் தொந்தரவை நினை த்து வலிகளோடு, மனஅழுத் தத்தில் வாழ்வதைவிட அநீதியை எடுத்துச் சொல் வதில் தவறில்லை. அத னால் மாணவ-மாண விகளுக்கு பாலியல் குறி த்த புரிதல் தேவையாக இரு க்கிறது. பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பதையும் அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.
பள்ளிகளில் நீதிவகுப்புகள் எடுத்தால் மட்டும் போதாது. பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற சுயஆராய்ச்சியை வளர்த்தெடுக்கவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றில் சித்தி ரிக்கப்படும் பாலியல் தூண்டல்களையும், பழிக்குப்பழி வாங்கும் உணர்வுகள் பற்றியும் விவாதத்துக்கு உட்படுத்தினால் அதைப் பின்பற்ற மாட்டார்கள். மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்கள் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றி புரிகிற மாதிரி பக்குவமாக விளக்கவேண்டும். காதல் என்பது ஒரு ஆண், பெண்ணைக் காதலிப்பது மட்டுமல்ல. தேசம், மொழி மீது செலுத்தும் அன்பும் காதல்தான் என் பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
'உன்னை நீயே காதலி, உன் திறமை களைக் கண்டுகொள்வாய். அறிவைக் காதலி, புத்தகங்களில் இடம் பெறுவாய். பெற்றோரைக் காதலி, பாசத்தைக் உணர்வாய் இயற்கையைக் காதலி, தலைமுறை உன்னை வணங்கும். தேசத்தைக் காதலி, வரலாறு உன்னைப் போற்றும்... என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரி யர்களும் கல்வியைத்தாண்டி கவனம் செலு த்தினால் பிள்ளைகள் வாழ்வு பாழாகாது'' என்கிறார் அக்கறையுடன்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் முதலில் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!
-க.நாகப்பன் படம்: வீ.நாகமணி
நன்றி: ஜூனியர் விகடன்.17.3.12
மோசமான
கட்டமைப்புள்ள ஜீவா நர்சிங் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் !
கடந்த
பிப்ரவரி 27-ம் தேதி மாலை 5 மணியளவில்
வெளிச்சம் மாணவர் உதவி எண்ணுக்கு ( 9698151515 ) ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில்
பதற்றமான குரல்
'வெளிச்சம்;
அமைப்புங்களா ??...
மேடம்.. நாங்க கிருஷ்ணகிரி
பக்கத்துல ஜீவா நர்சிங் காலேஜ்ல படிக்கிறோம். நாங்க காலேஜ் சேர்ந்து 6 மாசமாகுது.
எங்க காலேஜுல படிக்குறதுக்கு உண்டான எந்த வசதியும் இல்லை, ஹாஸ்டல் வசதி மோசமா இருக்கு,
எங்க காலேஜுக்கு இன்னும் பிரின்சிபால் இல்லை... எல்லாத்துக்கும் மேல எங்களுக்கு பாடம்
சொல்லிக் குடுக்க ஆசிரியர்களே இல்லை... என்று சொல்லி அதிர வைத்தார்.
தி ஹிந்து நாளிதழ் |
இதைப் பற்றி உங்க
கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி கேளுங்க. அவக பதில் திருப்திகரமா இல்லேன்னா உங்க
கல்லூரி சார்ந்திருக்கும் பல்கலைக்கழகத்திடம் முறையிடலாம் என்று சொன்னோம்.
"எங்க கல்லூரி
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருகிறது.
நாங்க 25 மாணவ, மாணவிகள் ஒண்ணா கிளம்பி இன்னைக்கு காலைல சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு
வந்துட்டோம்”, என்று அடுத்த அதிரடி வைத்தார்.
29-ம் தேதி
நடக்கப்போகிற பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளில் எல்லோரும் பிசியா இருக்காங்களாம். எங்களால
துணை வேந்தரை பார்க்க முடியலை. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை" , என்று பரிதவித்தார்
அந்த மாணவர். அந்த 25 மாணவர்களை சந்திக்க உடனே விரைந்தோம்.
பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கூறியதிலிருந்து , ஏழு வருடமாக கிருஷ்ணகிரியில் இயங்கும் இந்தக் கல்லூரியில் டிப்ளமோ நர்ஸிங் படிப்பு மட்டுமே இருந்தது. இந்த வருடம் பி.எஸ்.ஸி
நர்ஸிங் படிப்புக்கு அங்கிகாரம் கொடுத்த நிலையில் விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த பல மாணவர்கள் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி
கவுன்ஸிலிங் மூலம் ஜீவா கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் பிறகு அட்மிஷன் செய்வதற்கு நேரடியாக சென்ற
போது கல்லூரியின் நிர்வாக அலுவலம் எண் :269 பெங்களூர் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி எனும் முகவரியில் உள்ள ஜீவா மருத்துவ மனையில் இருக்கிறது
எனக் கல்லூரிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கல்லூரிக்கு போன எங்களுக்கு முதல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. நாங்க படிக்கப்போறது ஜீவா ஹாஸ்பிடல்ல இல்ல, வேற இடம்னு
சொல்லி பீமண்டஹல்லி, புளியஞ்சேரி கிராமத்திலுள்ள ஜீவா நர்ஸிங்
கல்லூரி எனும் முகவரியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு கூட்டிட்டு போனாங்க. அங்க
எங்களுக்கும் டிப்ளமோ நர்ஸிங்
சேர்ந்த மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படும்னு சொன்னங்க .இதில் என்ன கொடுமை என்றால் எங்களுக்கு
கல்லூரி பிரின்ஸிபல் இல்லை, அதைவிடக்கொடுமை புரபஸர்கள் யாருமே இல்லை. நாங்கள் எப்படி
படிப்பது என்று கேட்டதற்கு, நர்சிங் என்றால் படிப்பது இல்லை, பிராக்டிகல் தான்னு
சொல்லி அவங்களோட ஹாஸ்பிட்டல்ல கிளீனிங், வாஸிங் வேலை செய்ய சொன்னாங்க செய்யலைன்னா ஸ்டெத்தாஸ்
கோப்பாலயே அடிச்சாங்க... எத்தனையோ நாள் படிக்கனுமேன்னு, எல்லா ஏமாற்றங்களையும் தாங்கிட்டு அழுதுக்கிட்டு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டோம்.
பெற்றோர்கள் சன் டிவிக்கு கொடுத்த பேட்டி |
இது ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் நாங்க தங்க வைக்கப்பட்ட
ஹாஸ்டல்ல வார்டனே இல்லை. அதனால எங்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என்று நம்மிடம்
கதறினார்கள் மாணவிகள். அங்க தான் டார்ச்சர் தாங்க முடியலை, சென்னைக்கு போனாலாவது தீர்வு கிடைக்கும்னு நினைச்சா,
இங்க அதைவிட கொடுமையா இருக்கு... துணைவேந்தரை பார்க்க விடமாட்டேன்கிறாங்க என்றார்கள்.
தாங்கள் சந்தித்த
பிரச்சனைகளையெல்லாம் எழுதி கையொப்பமிட்ட அந்த 25 மாணவர்களின் புகார் கடிதத்தோடு, அந்த
25 மாணவர்களோடும் சேர்ந்து மறுநாள் தலைமைச் செயலகத்துக்கு சென்றோம். முதல்வர் சிறப்பு பிரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கேட்டு மனுகொடுத்தோம். தி ஹிந்து, தினகரன்-கிருஸ்ணகிரி, சன் நியூஸ் ஆகிய ஊடகங்களில் இந்த
செய்தி வெளியானது.
பின் தொடர்ந்த போலீஸார் |
அன்று மாலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய்
அவர்களிடமும், 29.2.12 அன்று எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் தேர்வானையர் என
எல்லோரையும் சந்தித்து மாணவர்களுக்கு உதவிடக் கோரினோம்.
கடைசியாக 1.3.12 அன்று பத்து மணிக்கு துணை வேந்தரை சந்திக்க
நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன்
நேரில் சென்றோம். நடந்த எல்லாவற்றையும் மாணவர்களின் சார்பாக எடுத்து வைத்தோம். எல்லா மாணவர்களிடமும் தனித்தனியே
அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை பொறுமையாக கேட்டுக்கொண்ட துணைவேந்தர் அவர்கள், ஜீவா நர்சிங் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் திருமதி பிரமிளா ஸ்ரீதரன்
மற்றும் அவரது கணவர் டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோரை
அழைத்து நேருக்கு நேராக விசாரித்தார்.
கல்லூரியில் எல்லா வசதியும் இருக்கு.இந்த பொண்ணுங்க முன்னால்
பேராசியர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு பிரச்சனை பண்ணுறாங்க என்றார். அவரை இடை மறித்த
துணைவேந்தர் , முன்னால் பேராசிரியர்களா?? என்றார். இரண்டு மாசத்துக்கு முன்னாடி
கல்லூரியில் வேலை பார்த்த எல்லா புரப்பசர்களும் வேலையை விட்டு நின்னுட்டாங்க
சார் என்றார்.
ஒரு நர்ஸிங் கல்லூரியில பேராசிரியர்கள், ஸ்டாப் என மொத்தம் 22 பேர் கட்டாயம் இருக்க
வேண்டும் என்பது நார்ம்ஸ். ஆனால் உங்கள் கல்லூரியில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
ஒரு குழந்தை பொய் சொல்லலாம்.., ஆனால் இத்தனை பிள்ளைகள் வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்களேன்னு
கேள்விக்கேட்ட துணைவேந்தர் அவர்கள் நம்மிடம், இன்னும் ஒரு வாரத்தில் இந்த மாணவிகளுக்கு
வேறு கல்லூரியில் சேர்த்து படிக்க வழி செய்கிறேன் என்றார் உறுதியாக..!
மாணவிகளை நம்பிக்கையோடு ஊருக்கு அனுப்பி வைத்தோம்…
ஆனால், பிரச்சனை
முடியவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். திரும்பி சென்ற மாணவர்களுக்கு கல்லூரி
நிர்வாகத்திடம் எந்தவித ஒத்துழைப்பும் இல்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள்
மீண்டும் கிளம்பி நேற்று (12.3.12) சென்னைக்கே வந்து விட்டனர். 25 பேர் சார்பாகவும்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் நியாமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13.03.12 மாலை 4:00 மணியளவில் சென்ட்ரல் அருகில் இருக்கும் மெமோரியல் ஹாலில் மாணவர்களின் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வெளிச்சம் ஒருங்கிணைக்கிறது.
அவர்களின் நியாமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13.03.12 மாலை 4:00 மணியளவில் சென்ட்ரல் அருகில் இருக்கும் மெமோரியல் ஹாலில் மாணவர்களின் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வெளிச்சம் ஒருங்கிணைக்கிறது.
மாணவர்களின் பிரச்சினைகளை
அனைவரிடமும் எடுத்து செல்வதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாங்களை உரக்கச்
சொல்லவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதற்கும், மேலும், வரும் காலங்களில் இதுபோல்
வேறு மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற விழிப்புணர்வுக்காகவும் நடக்கும்
இந்த கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மாணவர் நலனுக்காக அனைவரும்
குரல் கொடுப்போம்.
கல்வி வியாபரத்தால் நேரும் அவலங்களை உணர்வோம். இந்த சமுதாயப் பிணி நீங்க அனைவரும் கைகோர்ப்போம்!!
கல்வி வியாபரத்தால் நேரும் அவலங்களை உணர்வோம். இந்த சமுதாயப் பிணி நீங்க அனைவரும் கைகோர்ப்போம்!!
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
மார்ச்
8 - மகளிர் தினம். அதுவும் ஒரு தினமாக, தேதியாகக் கடந்துபோய்விடுகிறது
சம்பிரதாயமாக. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், தொழில் என்று பல தளங்களிலும்
இன்றைய பெண்கள் அடைந்திருக்கும் வெற்றிகள் அளப்பரியவை. இதற்கான நீண்ட நெடிய
போராட்டங் களும் மகத்தானவை. 'இன்றைய சூழலில் பெண் கள் இன்னும் தங்களைச்
சுதந்திரமாக உணர் வதற்கு எவை எல்லாம் தேவை?’ என்றகேள்வியை முன்வைத்தோம். பல
தளங்களில் சாதித்திருக்கும் பெண்கள் தங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்கிறார்கள்.
அருள்மொழி, வழக்கறிஞர்: ''படித்த
பெண்கள்கூட செய்தித்தாள் வாசிக்கவும் தொலைக்காட்சிகளில் செய்திகள்
பார்க்கவும் நேரம் இல்லாமலும் ஆர்வம் இல்லாமலும் குடும்ப நிலவரங்கள்
குறித்துக் கவலைப்படுவதோடு முடங்கிவிடுகிறார்கள். மதம் சார்ந்த விஷயங்கள்,
புடவை, நகை போன்ற ஆடம்பரங்களில் இருந்து கவனத்தைத் தவிர்த்து, பொது
விஷயங்களில் அக்கறை காட்ட பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள
வேண்டும். ஆண்கள் வெளியிடங்களுக்குப் போவதுபோல பெண்களும்
வெளியிடங்களுக்குச் சென்று பல விஷயங் களைக் கற்க வேண்டும்.
வெளியிடங்களுக்குப் போவது என்றால், கோயிலுக்குப் போவது அல்ல.
நூலகங்களுக்குச் செல்லுதல், இலக்கியம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில்
கலந்துகொள்ளுதல், விழாக்களைத் தாங்களே நடத்துதல் என்று பொது வேலைகளில்
ஈடுபட பெண்கள் முன்வர வேண்டும்!''
தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்:
''சாமியாரில் இருந்து சக நண்பன் வரை எளிதாக ஏமாந்துவிடும் அளவுக்குப்
பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். கல்பனா சாவ்லா, இந்திரா நூயி போன்ற
பெண்களை உதாரணப் பெண்களாக முன்னிறுத்துவதைத் தவிர்த்து, மலையின மக்கள்
உரிமைக்காகப் போராடும் பழங்குடிப் பெண் சி.கே.ஜானு, மானை வேட்டையாடிய
வழக்கில்சல்மான் கானுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மறுத்தபோது தைரியமாக
உண்மையைப் போட்டு உடைத்த கிருஷ்ணா பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள்
மூவர், மணிப்பூரில் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக அறப்போராட்டம்
நடத்திவரும் இரோம் ஷர்மிளா போன்ற பெண்களை முன்னுதாரணப் பெண்களாக
முன்னிறுத்த வேண்டும்!''
ஷாலினி, மனநல மருத்துவர்: ''சாமரம்
வீசிய பெண்கள் முதல் சங்க காலப் புலவர்கள் வரை, பெண்கள் புத்திசாலியாக,
அறிவாளியாக, பணி செய்பவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். எனவே, பெண்கள்
முதலில் வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் பார்த்தால்,
படிக்காத பெண்கள்தான் உணர்வுகளை வெளிப்படுத்தப் போதுமான சுதந்திரம்
பெற்றிருக்கிறார்கள். கிராமத்தில் குடும்பச் சண்டையில் தாக்குதலுக்கு
உள்ளான பெண் தலையில் அடித்து ஒப்பாரிவைத்துஊரைக் கூட்டிவிடுவாள். ஆனால்,
நகரத்துப் பெண்களுக்கு அத்தகைய தைரியம் இல்லை. எனவே, நகரத்துப்
பெண்களுக்குத் தைரியமும், கிராமத்துப் பெண்களுக்குக் கல்வியும் பொருளாதாரச்
சுதந்திரமும் இன்றைய தேவை!''
நிர்மலா கொற்றவை, கவிஞர்:
''பாடத் திட்டத்தில் 'பெண்ணியக் கல்வி’ என்ற பாடப் பிரிவு சேர்க்கப்பட
வேண்டும். 'இந்தச் சமூகம் ஆரம்பத்தில் தாய் வழிச் சமூகமாகத்தான் இருந்தது.
பிறகுதான் அது தந்தை வழி ஆணாதிக்கச் சமூகமாக மாறியது’ என்கிற வரலாற்று
உண்மை களைப் புரிந்துகொள்வதற்கே நமக்கு 20 வயதுக்கு மேல் ஆகிறது. அதுவும்
அரசியல் உணர்வுடைய ஆண்களும் பெண்களும்தான் இதைப் பற்றி
அறிந்துகொள்கிறார்கள். இப்போது முனைவர் பட்டப்படிப்பு அளவில்தான் பெண்
ணியச் சிந்தனைகள் எடுத்துக்கொள்ளப்படு கின்றன. இதை மாற்றி
பதின்பருவத்திலேயே 'பெண் என்பவள் சக மனுஷி. அவள் ஆணுக்குச் சமமாக
மதிக்கப்பட வேண்டியவள்’ என்று கற்பிக்கும் பெண்ணியக் கல்வி
கற்பிக்கப்பட்டால், ஆண்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இரண்டாவதாக,
சினிமா மாயையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். அரசியலுக்கு வந்த
சினிமாக்காரர்கள் பெண்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை உணர்ந்து, இந்த
சினிமாக் காரர்களைப் புறக்கணிக்கப் பெண்கள் முன்வர வேண்டும்!''
மாலதி மைத்ரி, கவிஞர்: ''மனித
உரிமைப் போராளிகள் மற்றும் பெண்ணியவாதிகளின் நீண்ட நெடிய
போராட்டங்களுக்குப் பிறகு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில
சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனாலும் இவை, 'பெண் என்பவள் எனக்குக்
கீழேதான்’ என்ற எண்ணத்தை ஆண்களிடம் மாற்றுவதாக இல்லை. அரசு
வேலைவாய்ப்புகளில் இப்போது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறதே
தவிர, அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. அதை
மாற்றி சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் பெண்களுக் கான உள்ஒதுக்கீடு
தேவை. விவசா யக் கூலி வேலை, கட்டட வேலை போன்ற அடித்தள வேலைகளில் தொடங்கி,
ஆண்களுக்கும் பெண் களுக்கும் பாரபட்சமான ஊதியம் இருக்கிறது. எந்த வேலையாக
இருந்தாலும் இருபாலருக்கும் பாரபட்சமற்ற ஊதியம் அளிக்கப்படும் நிலை உருவாக
வேண்டும்!''
சின்மயி, பின்னணிப் பாடகி: '''வீட்டு
வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஒவ்வொரு பெண்ணும்
ஆண்களை வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறை குறித்த
செய்திகள் வருகின்றன. காரணம், பெண்களைக் கட்டுப்பாடாக வளர்க்கும் சமூகம்,
ஆண்களைச் சரியாக வளர்ப்பதில்லை. எனவே, பெண்கள் சுதந்திரமாகவும் கண்ணி
யமாகவும் இருக்க, ஆண் குழந்தை களைக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டும்.
அதேபோல, இப்போது கலாய்ப்பது என்ற பெயரில் பெண்களை அவமானமாகப் பேசுவதும்
அதிகரித்துவருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இதற்குப்
பயன்படுவது வேதனை. எனவே, 'பெண்களும் தங்களைப் போலவே சக உயிர்கள்தான்’ என்று
வலியுறுத்தும் கல்வி ஆண்களுக்குத்தான் அவ சியம். 'ஒவ்வோர் ஆணின்
வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று ஆண்கள் பெண்களைப்
பின்னுக்குத் தள்ளுவதும், பெண்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுமான நிலை
மாற வேண்டும். பெண்கள் ஆண்களின் வெற்றிக்காக உழைப்பதை விட்டுவிட்டு,
தங்கள் வெற்றிக் காக உழைக்க வேண்டும்!''
கவிதா முரளிதரன், பத்திரிகையாளர்: ''பெண்களுக்கு
இப்போதைய அத்தியாவசியத் தேவை கல்வி. வெறுமனே வேலைவாய்ப்பை அளிக்கிற
கல்வியை மட்டுமே நாம் கணக் கில் எடுத்துக்கொள்கிறோம். அத்தகைய கல்வியில்
பெண்கள் போதுமான அளவுக் குத் தேர்ச்சி பெற்று முன்பைவிட அதிகம்
வேலைவாய்ப்பையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், அதைவிட அவர்களுக்கு அவசிய மானது, பெரியார் அடிக்கடி வலியுறுத்திய
'விடுதலைக் கல்வி’.அதேபோல, பெண் களுக்கான அரசியல் தலைமைகள் உருவாக
வேண்டும். இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா, மாயாவதி, சோனியா
காந்தி என்று உதாரணப் பெண் அரசியல்வாதிகள் காட்டப்படுவார்கள். ஆனால்,
பெண்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துகின்ற, பெண்கள் விடுதலையில்
நம்பிக்கைகொண்ட பெண் அரசியல் ஆளுமைகள் உருவாக வேண்டும். இல்லை என்றால்,
விழுப்புரத்தில் இருளர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும்போது,
ஜெயலலிதா அதைக் கண்டுகொள்ளாதது, உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் ஒரு பெண்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை மம்தா பானர்ஜி 'அப்படி ஒன்று
நடக்கவேஇல்லை’ என்று மறுப்பது மாதிரியான அவலங்கள்தான் தொடரும்!''
தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர்:
''மாமனார், மாமியார், குழந்தைகள் என்று பல பொறுப்புகள் இருந்தாலும், 'இது
என் வேலை. நான் நல்லா செய்வேன்’ என்று ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.
மாமனார், மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு, சின்ன
குழந்தையை க்ரஷ்ஷில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியான போக்கு இல்லை.
அதே குழந்தையை மாமனார், மாமியாரைக் கவனித்துக்கொள்ளச் சொன் னால்,
குழந்தைக்கு நல்ல அரவணைப்பு கிடைப்பதோடு, 'நல்ல ஹோம் மேக்கர்’ என்ற பெயரும்
கிடைக்கும்.
நல்ல அன்னைதான் நல்ல அதிகாரியாக இருக்க முடியும். நல்ல மனைவிதான் நல்ல மந்திரியாக இருக்க முடியும்.
வீடோ, அலுவலகமோ திட்டமிட்டு காரியங்களைச் செயல்படுத்த வேண்டும். 'நான்
ஒரு பெண். எனக்கு சலுகை தந்தே ஆக வேண்டும்’ என்று அடம்பிடிக்காமல்,
தடைகளைத் தாண்டப் பழக வேண்டும்!''
ஓவியா, பெண்ணியச் செயற்பாட்டாளர்: ''பல
பெண்களே, 'என்னுடைய கணவர் எனக்கு நிறைய உரிமைகள் கொடுத்திருக்கிறார்,
வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்’என்று சொல்லி, 'இனியும் பெண்கள் உரிமை
அடைவதற்கு ஒன்றும் இல்லை’ என்கிற கருத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால்,
எவ்வளவு படித்த பெண்ணாக இருந்தாலும், எவ்வளவு சம்பாதிக்கிற பெண்ணாக
இருந்தாலும், ஆண் தலைமையிலான குடும்பக் கட்டமைப்பை அப்படியே எந்தக் கேள்வி
யும் கேட்காமல் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை மாற வேண்டும். அடுத்தபடியாக,
பெண்கள் 'தாங்கள் தனி நபர்கள் இல்லை, ஓர் இனம்’ என்பதை உணர்ந்து அமைப்பாக
வேண்டும். அத்தகைய அரசியல் உணர்வும் அமைப்பாவதும் இன்றைய பெண்களுக்கு
அத்தியாவசியத் தேவை!''
'வெளிச்சம்’ ஷெரின், சுய முன்னேற்றப் பயிற்சியாளர்:
''அழகான உடை, நகை என்று தன்னை அழகுபடுத்துவதிலேயே கவனம் செலுத்தும்
பெண்ணாக இல்லாமல், மனதைத் திடமாக வைத்திருக்கும் பெண்கள்தான் இன்றைய தேவை.
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் 26 வகை நோய்கள் தாக்காது
என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால், நகர்ப்புறப் பெண்கள் சிறுநீர் கழிக்க
வெட்கப்பட்டு தண்ணீர் அதிகம் குடிப்பது இல்லை. கிராமப்புறப் பெண்களோ
சிறுநீர் கழிக்க அடிக்கடி திறந்தவெளிக்குச் செல்ல முடிவதில்லை. நகர்ப்புறப்
பெண்களுக்கும் சரி, கிராமப்புறப் பெண்களுக்கும் சரி; தலைவலி, மார்பகப்
புற்றுநோய்களுக்கான காரணங்கள் குறித்த விழிப்பு உணர்வே இல்லை. உடல்நலம்
குறித்த அக்கறை அவர்களுக்கு ஊட்டப்படுவது அவசியம்!'
-ரீ.சிவக்குமார், க.நாகப்பன், படம்: வீ.நாகமணி
Thanks Ananada vikatan: 8.3.12
உலக மகளீர் தினத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதை இன்று மாலை பெறுகிறார்.. அதற்கான கடிதத்தை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
அவர் பணிசிறக்க, வாழ்த்துங்கள் எங்கள் தாயை...
எல்லா கஸ்டங்களிலும் எம்மோடு இணைந்திருக்கும் உங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி....
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்