கல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து அரங்கேறி வரும் அவலங்களைப் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மேலிடுகிறது.
பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையிலேயே கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற மாணவன்; உடன் பழகிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளைச் சூறையாடிய மாணவர்கள்; 'பஸ் தினம்' என்ற பெயரில் அரசுப் பேருந்துகளின் மீது கல்லெறிந்து நாசமாக்கி, பொதுமக்களையும் போலீஸாரையும் காயப்படுத்திய மாணவர் கூட்டம்... இவை எல்லாமே, அடுத்தடுத்து வெளியான செய்திகள். இதே நாட்களில்தான், படிப்பின் மீது கொண்ட விரக்தி, பயம் காரணமாக மாணவன் ஒருவன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட தகவலும் வெளியாகி இருக்கிறது.
'இங்கேதான் தவறு' என்று இடம்சுட்டிப் பொருள் விளக்க முடியாத அளவுக்கு கல்வித் தாயின் உடலெங்கும் புரையோடிப்போய் இருக்கின்றன கண்மூடித்தனமான காயங்கள். ஒழுக்கம் என்பது கற்பவர்களுக்கு மட்டுமல்ல... கற்பிக்கும் ஆசான்களுக்கும் அதிஅவசியம் என்பதுதான் காலம் காலமாக இருந்துவந்த நிலைமை. ஆனால், அரசாங்கம் தொடங்கி, கல்விக்கூடங்கள் வரையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களில் எதுவுமே ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை. அவையும்கூட, மதிப்பெண் சார்ந்தவையாகவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சாமர்த்தியம் சார்ந்தவையாகவும் மாறிப்போயிருக்கின்றன!
இன்னொரு பக்கம், புகழ்பெற்ற பல தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மட்டுமல்ல... அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் மரியாதையும்கூட ரொம்பவே சிறுத்துப்போய் இருக்கிறது!
மாணவனின் வாழ்க்கை என்பது அவன் வாங்கும் மதிப்பெண்களில் மட்டும் ஊசலாடும் விதமாகக் கல்விமுறையை வைத்திருப்பதால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட, அவன் வாழ்க்கையே அறுந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டதுபோல பெற்றோர் காட்டும் பதற்றம், அப்படியே மாணவர்களையும் தொற்றிக்கொள்கிறது.
'பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் வெற்றி காட்டாவிட்டால், எங்கள் கல்வி நிலையத்தின் வியாபாரம் கெட்டுவிடும்' என்று வெளிப்படையாகச் சொல்லியே மாணவர்களை வெளியேற்றும் சீர்கெட்ட கல்விமுறைதானே, ஒரு பாவமும் அறியாத அந்த ஆசிரியை உயிரை இன்று விலையாகக் கேட்டுவிட்டது? கல்விக்குக் கொட்டிக் கொடுப்பதைக் குடும்பத்தின் கௌரவமாகவும்... கை நிறைய குழந்தையின் செலவுக்குக் கொடுப்பதைத் தங்கள் குற்ற உணர்வுக்கான வடிகாலாகவும் நினைக்கிற பெற்றோரும் அல்லவா இந்தப் பாவத்தின் பங்குதாரர்கள்?
தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த நடைமுறை புத்திசாலிகளையும் ஒழுக்கச் சீலர்களையும் உழைப்பாளிகளையும் குழந்தைகளுக்கு உதாரணம் காட்டத் தவறுவது கல்விக்கூடங்கள் மட்டுமா... பெற்றோரும்தானே? பொய் சொல்லாத அரிச்சந்திரனைப் பற்றியோ, தர்மம் தவறாத தருமரைப் பற்றியோ, அகிம்சையே உருவான மகாத்மா காந்தியைப் பற்றியோ நினைப்பதற்காவது இவர்களுக்கு நேரம் இருந்தால்தானே, குழந்தைகளோடு வாய்விட்டுப் பகிர்ந்துகொள்வதற்கு!
'நீதி போதனை' வகுப்புகளை முற்றிலுமாக இழுத்து மூடிவிட்ட நாம், மதிப்பெண் குவிக்கும் சூத்திரங்களை மட்டுமே வாழ்க்கையின் சாத்திரங்களாக இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்கப்போகிறோம்? புத்தியைத் தீட்ட வேண்டிய தெய்வீகப் பட்டறையில் கத்தியைத் தீட்டியது அந்த மாணவனின் தவறல்ல... முழுக்க முழுக்க இன்றைய கல்விமுறையின் குற்றம்தான் என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறோம்?
அரசாங்கம், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரின் நோக்கும் போக்கும் ஒரே நாளில் நேராகிவிடும் என்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கு இன்றில் இருந்தாவது நம் பார்வையைச் சீராக்கி, நேராக்கிக்கொள்ள மாட்டோமா?
நன்றி: ஆனந்த விகடன்.22.2.12