மாணவருக்கு கல்வி கடன் தர மறுத்த வங்கிக்கு உயர்நீதிமன்றம் 'குட்டு'!

Posted by Unknown - -

சென்னை: கல்வி கடன் வழங்காமல் அலைகழித்ததால், மாணவரின் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர் கோரிய கடன் தொகையையும் வழங்க உத்தரவிட்டது.

கோவையில் உள்ள `பார்க் ஸ்கூல்' என்ற கல்வி நிறுவனத்தில் தினேஷ் என்ற மாணவர், `ஏரோநாட்டிக்கல்' பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

தினேஷ் கல்வி பயில்வதற்காக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சேலம் ஆத்தூர் கிளையில் அவரது தந்தை கஜேந்திரன் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கடன் தரவேண்டும் என்றும், இதற்காக 3.36 ஏக்கர் நிலத்தை சொத்து ஜாமீனாக கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்த சொத்துக்கான உத்தரவாதத்தை கஜேந்திரனின் நண்பர் ஒருவரும் அளித்திருந்தார்.

ஆனால் கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து, தனது விண்ணப்பம் நிராகரிப்பட்ட காரணத்தை அறிவதற்காக வங்கிக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கஜேந்திரன் விண்ணப்பம் செய்தார்.

ஆனால், அதற்கு வங்கி பதில் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், தினேஷ் படிக்கும் `ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்' படிப்பு, மத்திய அரசின் ஒப்புதல் பெறவில்லை என்பதால் எங்களுக்கு கல்வி கடன் மறுக்கப்படுகிறது.

ஆனால், இந்த கல்லூரி கொடுத்துள்ள சான்றிதழில் இந்த படிப்பு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதே கல்விக்கு 2 மாணவர்களுக்கு இந்த வங்கியின் சிவகங்கை மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை கிளைகள் கடன் வழங்கியுள்ளன. எனவே, தினேசுக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த `பாங்க் ஆப் இந்தியா', மத்திய அரசின் கல்வி கடன் பட்டியலில் இந்த படிப்பு இடம் பெறவில்லை என்பதால் அவருக்கு கடன் வழங்க முடியாது எனக் கூறியது.

இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் அதற்கான விதிமுறைகள் அடிப்படையில் கல்வி கடன் வழங்க வேண்டும்.

எல்லா படிப்புகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பது அந்த விதிமுறையில் உள்ளது. ஆனால், தினேஷ் விஷயத்தில் வங்கி பாரபட்சம் காட்டியுள்ளது.

எனவே, இன்னும் 2 வாரத்துக்குள் தினேசுக்கு இந்த வங்கி கல்வி கடன் வழங்க வேண்டும். முறைப்படி விண்ணப்பம் செய்தும், உயர்நீதிமன்றம் வரை மாணவரை அலைகழித்ததால், மாணவரின் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை இன்னும் 2 வாரத்துக்குள் ஆத்தூர் வங்கிக் கிளை வங்கி வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010, 14:28[IST]

Source:
http://thatstamil.oneindia.in/news/2010/03/12/hc-impose-fine-on-bank-refusing-edu.html

One Response so far.

  1. இதுபோன்று தீமையைக் கண்டு போராடும் போராட்ட உணர்வு அனைவருக்கும் வரவேண்டும். குறிப்பாக இளையர்களுக்கு இதுபோன்ற தார்மீகக் கோபம் வரவேண்டும்.

    நாம் பயந்து ஒதுங்கிச் சென்றால் அவர்களுக்குச் சாதகமாகிவிடும்.

    பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா
    மோதி மிதித்துவிடு பாப்பா
    அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா...

Leave a Reply