
வியாபார நோக்கத்தில்தான் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைக்கப்படுகின்றன என்று நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கட்ராமன் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வேதியியலில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்நிலையில் லண்டனிலுள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: கேம்பிரிட்ஜ் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை அமைப்பதில்லை. ஆனால் வேறு சில பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பது வியாபார நோக்கத்தில்தான்.அப்படி பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூரிலோ அல்லது மற்ற இடங்களிலோ அமைத்தாலும், அதன் அசல் தன்மையை புதிய பல்கலைக்கழகத்தில் கொண்டு வர முடிவதில்லை.
பல்கலைக்கழகத்தின் கலாசார மூலத்தை புதிய பல்கலைக்கழகங்களில் கொண்டு வர முடிவதில்லை.
ஆனால் அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமையும்போது இந்தியாவிலுள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்களின் சம்பளம் கணிசமாக உயரும்.இந்தியாவில் ஏராளமான நல்ல விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களின் படைப்புகளும் உலகத் தரத்தில் இருக்கின்றன. சர்வதேச அளவில் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவுக்கு இன்னும் முன்மாதிரியான நபர்கள் தேவை. அப்படி ஒரு நாள் வரும்போது இந்திய விஞ்ஞானிகள் அங்கீகரிக்கப்படுவார்கள்.
வேதியியலில் நான் செய்த சாதனைக்காக இந்திய அரசு எனக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெüரவித்துள்ளதை நான் பெருமையாக நினைக்கிறேன். அந்த விருதை பெறுவதற்காகக் காத்திருக்கிறேன்.
இந்திய நாட்டின் 2-வது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பெறுவதில் பூரிப்படைகிறேன்.
நோபல் பரிசு பெற்றதால் எனது வாழ்க்கை முறை மாறிவிடவில்லை. நோபல் பரிசு பெறுவதற்கு முன்னர் என்னை சிலருக்கு மட்டுமே தெரியும்.
அதே நேரத்தில் விருது பெற்ற பின்னர் பலர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டுள்ளனர்.இந்தியர்களுக்கு என்னிடமிருந்தோ அல்லது எவரிடமிருந்தோ எந்த அறிவுரையும் தேவையில்லை. நான் விஞ்ஞானிகள் குடும்பத்தில் பிறந்தவன்.
2002-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் செல்கிறேன். 2 அல்லது 3 வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு கல்வி நிலையங்களுக்குச் சென்று பாடம் எடுக்கிறேன். பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்துக்கும் (ஐஐஎஸ்சி) சென்று பாடம் நடத்துகிறேன் என்றார் அவர்.
First Published: 31 Mar 2010 12:17:00 AM IST நன்றி:தினமணி
No comments:
Post a Comment